பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும் : முனைவர் சீமான் இளையராஜா

முனைவர் சீமான் இளையராஜா எழுதியுள்ள பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும் என்ற நூல் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் கூற்று, புத்தரின் வாழ்வும் நெறியும், கோயில்களின் வரலாறும் பின்னணியும், அயோத்திதாச பண்டிதரின கூற்று, பவுத்தப் பண்டிகைகள், விழாக்கள் என்னும் ஐந்து தலைப்புகளைக் கொண்டுள்ளது.

மறைக்கப்பட்ட பவுத்த கோயில்கள், பவுத்தப் பண்டிகைகள் புதைக்கப்பட்ட புத்தர் சிலைகள் பற்றியும் அதன் உண்மை வரலாற்றையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதே இந்நூலின் முக்கிய நோக்கம் என்கிறார் நூலாசிரியர். நூலில் காணப்படுகின்ற கருத்துகள் சிலவற்றைக் காண்போம்.

“புத்தம் ஒரு மதமில்லை. அது சனாதனத்துக்கு எதிரான ஒரு ஜனநாயகக் கோட்பாடு. மானுட சமத்துவத்துக்கு வழிகாட்டும் ஒரு வாழ்வியல் நெறி. பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு என்னும் கற்பிதங்களை நொறுக்கும் கருத்தியல்….” (பக்கம் 9)

“புத்தர் தம்மை ஒரு அவதாரமாகவோ, கடவுளின் தூதராகவோ, தெய்வப்பிறவியாகவோ, கடவுளாகவோ விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை. அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திக் கூறிக்கொள்ளவில்லை. வேறு எந்தக்கடவுளையும் சுட்டிக்காட்டி வணங்கவோ, வழிபாடு செய்யவோ போதிக்கவில்லை…….” (ப.27)

“......பல இலக்கியங்கள் பல்வேறு மாற்றங்கள் பெற்று குறைத்தும் கூட்டியும் திருத்தியும் எழுதி இடைச்செருகல்களை செய்துள்ளவற்றையும் வாசகரகளும் ஆராய்ச்சியாளர்களும் எழுத்தாளர்களும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். மயிலை சீனி.வேங்கடசாமியால் குறிப்பிடப்பட்ட கோயில்கள் மட்டுமன்றி இப்பொழுது புகழ்பெற்று விளங்கும் தஞ்சாவூர், சிதம்பரம், தாராசுரம் முதலிய ஊர்களில் அமைந்துள்ள சிவன் கோயில்களிலும்கூடப் பவுத்த அடையாளங்கள் காணப்பட்டுள்ளன….” (ப.52)

“தமிழ்நாட்டில் கோயில்கள் புதிதாகக் கட்டப்பட்டது மட்டுமன்றி பவுத்த மடாலயங்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் அயோத்திதாசப் பண்டிதர் கூறுகிறார். தென்னிந்திய திராவிடர்கள் அரசர்கள் வாழும் இல்லத்தைக் கோயில் என்று வழங்கி வந்ததுபோல் புத்தரை தெய்வம் என்றும் மன்னார்சாமி என்றும் கொண்டாடியதோடு பவுத்த மடங்களைக் கோயிலென்றே வழங்கி வந்தார்கள் எனக்குறிப்பிடுகிறார்……...” (ப.71)

“....பண்டிகை என்ற தொடரிலுள்ள ஈகை என்ற சொல் ஏழை எளியவரை நினைவுப்படுத்துகிறது. பவுத்த தம்ம நெறிகளைக் கடைபிடிக்கத் தூண்டுகிறது. இதிலிருந்தே பண்டிகைகள் பவுத்தம் சார்ந்தவை எனத் தெளிவாக விளங்குகிறது. அறநெறிகளையும், ஈகையையும் வலியுறுத்தியது பவுத்த மார்க்கம் ஒன்றேயாகும்...” (ப.81)

“திருமணத்தில் காணப்படும் பாலி (முளைத் தானிங்கள்) உலக்கை, அரசாணிக்கால், குடவிளக்கு, கூரைகால் பரண்கள், மணமக்களின் அரச உடை ஆகியவை புத்தரையும் அவரது தம்மசீலங்களையும் குறிக்கும் அடையாளச் சின்னங்களே ஆகும்..” (ப.82)

“சித்திரை மாதம் ஆண்டுப்பிறப்பு என்பது பவுத்தப் பண்டிகையேயாகும் நீண்ட காலமாகக் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகையுமாகும். பகவான் புத்தருக்குக் குழந்தைப் பருவத்தில் சித்தார்த்தன் என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழ் ஆண்டுப் பெயர்களில் பிரபவ, விபவ, சுக்ல...முதலான அறுபது ஆண்டுப் பெயர்களுள் ஐம்பத்தி மூன்றாவது ஆண்டுப் பெயர் சித்தார்த்தி என்பதாகும். சித்தார்த்தி ஆண்டில் புத்தர் பிறந்ததால் அவருக்கு சித்தார்த்தன் என்று பெயர் சூட்டப்பட்டது”. (ப.86)

பவுத்த நாள்களே முக்கியமான நாள்கள்...புத்தபெருமான் அவதரித்த நாள் வெள்ளிக்கிழமை, புத்தர் பரிநிர்வாணமடைந்த நாள் செவ்வாய்க்கிழமை, புத்தருக்கு புதிய சிந்தனைகள் உதயமான நாள் புதன்கிழமை….(பக்.93-96)

நூலின் முக்கியமான நோக்கத்தை நூலாசிரியர் எடுத்துக்கூறி, நிறுவும் விதம் போற்றத்தக்க வகையில் உள்ளது. அடுத்தடுத்து பல தேடல்களை மேற்கொள்ளுமளவிற்கு கருத்துகள் மிகவும் சிறப்பாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஓர் அரிய நூலைப் படைத்த ஆசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

நூலின் நிறைவுப்பகுதியில் என்னுடைய ஆய்வினை நூலாசிரியர் மேற்கோளாகச் சுட்டியுள்ளார். (ப.111)


நூல்: பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
ஆசிரியர்: முனைவர் சீமான் இளையராஜா (99769 14892)
பதிப்பகம்: கற்பி பதிப்பகம், ஆதினி குடில், பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் 613 403
பதிப்பாண்டு: 2020
விலை: :ரூ.150

Comments

  1. தங்களின் வலைப்பூ பதிவு என்னை மேலும் பவுத்த ஆய்வுப் பணி செய்வதற்கு வழி வகுத்துள்ளது..
    நன்றி அய்யா

    நன்றி

    ReplyDelete
  2. பல உண்மைகள் ஐயா... இவற்றையே வள்ளுவமும் முன்பு சொல்கிறது...

    ReplyDelete
  3. தங்களது விமர்சனம் நூலை அழகு படுத்துகிறது.

    ReplyDelete
  4. அருமையான விமர்சனம்
    அறியாத பல செய்திகள் அறிந்தேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  5. சிறந்த அறிமுகம்.. நன்றி!

    ReplyDelete
  6. நூலைப்படிக்க ஆவல்
    ஏற்படுத்தும் விமர்சனம்
    நன்றி

    ReplyDelete
  7. சிறப்பான நூல் அறிமுகம் ஐயா. பகிர்ந்த தகவல்கள் சிறப்பு.

    ReplyDelete

Post a Comment