தமிழ்ப்பௌத்த ஆய்வுப்பள்ளி

மதுரையில் 20 மே 2019 அன்று தமிழ்ப்பௌத்த ஆய்வுப்பள்ளியின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இப்பள்ளியைத் தொடங்கிவைக்கும் அரிய வாய்ப்பினைத் தந்ததோடு விழாவினைத் தொடங்கிவைத்த திரு ஸ்டாலின் ராஜாங்கம், அறிமுக உரையாற்றிய திரு அன்புவேந்தன், உடன் உரையாற்றிய பெண்ணியலாளர் கீதா நிகழ்வில் கலந்துகொண்ட நண்பர்கள், ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. 


இவ்விழாவினைப் பற்றிய செய்திகளையும், புகைப்படங்களையும் நண்பர்கள் முகநூலில் பகிர்ந்ததைப் பதிவதில் மகிழ்கின்றேன், அவர்களுக்கு நன்றியுடன்.
  
விழாவினை ஒருங்கிணைத்த பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்

அறிமுகவுரையாற்றிய திரு அன்புவேந்தன்

பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், பெண்ணியலாளர் கீதா, 
திரு காளிங்கன் உடன்
  
பள்ளியைத் தொடங்கிவைத்து உரையாற்றல், அருகில் பெண்ணியலாளர் கீதா


 
  
பெண்ணியாளர் கீதா உரையாற்றல்திரு காளிங்கன், திரு அன்புவேந்தன்,
பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், பெண்ணியலாளர் கீதா உடன்


 
 


திரு ஸ்டாலின் ராஜாங்கம் உடன்
திரு அருள் முத்துக்குமரன் உடன்
  
முனைவர் பட்ட ஆய்வாளர் திரு ரவிக்குமார் உடன்

திரு ராஜ்குமார் உடன்
 பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்

வரலாற்றையும் பண்பாட்டையும் விளங்கி கொள்வதில் புதிய தரவுகளும் நோக்குகளும் உருவாகிக் கொண்டேயிருக்கும். அவற்றையெல்லாம் உள்வாங்கி சமூக பண்பாட்டு வரலாறு, சமயங்கள் மற்றும் மெய்யியல் வரலாறு எழுதப்பட வேண்டும். அவற்றை ஆங்காங்கு தொட்டுக்காட்டிய முயற்சிகள் மட்டுமே இங்கு உண்டு. எல்லாமும் கூறியது கூறலாகவும், இருப்பவற்றை அப்படியே தலைகீழாக்கி கூறலாகவும் தான் உள்ளன. 150 ஆண்டுக் காலத்தில் செம்மைபடுத்தப்பட்ட பிரதிகளை வைத்துக்கொண்டு 2000 ஆண்டுகால வரலாற்றை எழுதி எவ்வித அய்யமும் இல்லாமல் வரலாற்று நம்பிக்கையாக ஏற்று இயங்கி வருகிறோம்.
இந்நிலையில் தொல்லியல் துறையின் கல்விப்புல விளக்கங்களிலும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்கிற சமகால பண்பாட்டு 'ஆர்வங்'களிலும் உறைந்துகிடக்கிற ஒற்றைத்தன்மை, பண்பாட்டை புரிந்து கொள்வதில் அயோத்திதாசர் போன்றோர் மூலம் கிடைக்கிற கோணங்கள் ஆகியவற்றை பற்றி நண்பர்களோடு அவ்வப்போது உரையாடி வந்ததின் தொடர்ச்சியில் உருவாவதே தமிழ்ப்பெளத்தப்பள்ளி என்கிற இந்த யோசனை. ஆய்வுமையம் என்பதை குறிப்பதற்கான சொல்லாகவே இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தற்காலத்தில் பெளத்தம் பற்றிய விழிப்புணர்வு பெருகி வருகின்ற போதிலும் அது மிகுதியும் அரசியல் சார்ந்தே புரிந்துகொள்ளப்படுகிறது. தமிழகத்தில் பரவலாக புத்தர் சிலைகளும் பெளத்த தடயங்களும் கிடைத்துள்ள போதிலும் அவற்றை பண்பாடு வரலாறு ஆகியவற்றோடு ஒருங்கிணைத்து பார்த்த ஆய்வுகள் இங்கில்லை. புத்தர் சிலைகள் ஒருபுறம் மக்கள் பண்பாட்டிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வெறும் மியூசிய காட்சிபொருளாகின்றன . மறுபுறமாக மக்கள் தரப்பில் இருக்குமானால் திரிக்கப்பட்டு இன்றைய இந்து பண்பாட்டு கதையாடல்களுக்குள் கொண்டு சேர்க்கப்படுகின்றன.ஜைன சமயத்திற்கு இருப்பது போன்ற அமைப்புகளோ, பொருளாதார சார்புகளோ ,பண்பாட்டு பாதுகாப்போ பெளத்தத்திற்கு இல்லை. தமிழ் பண்பாட்டில் அது கொண்டிருந்த தொடர்ச்சியை பின்னணியாக்கிக்கொண்ட பெளத்த விழிப்புணர்வு போக்கு இங்கு உருவாகவே இல்லை.
சமயம் என்று நிறுவனமாக புரிந்துகொண்டு பேசுவது ஒருபுறமிருந்தாலும் பெளத்த தடங்கள் பிரதிகளைத் தாண்டி மக்கள் பண்பாட்டோடு ஊடாடியதை புரிந்து கொள்ளுதல், பிற மரபுகளோடு கலந்தும் விலகியும் இயங்கிய தன்மை , பண்பாட்டு நடைமுறைகளின் சமீப வடிவங்களைத் தாண்டி அதன் திரிந்த / மாறிய போக்குகளை இனங்காணுதல், தரவுகளையும் ஆய்வு அணுகுமுறைகளையும் உள்ளூர் மரபின் பின்னணியிலிருந்து புதுக்குவது என்பவை நம்முடைய முதன்மை அக்கறைகள் .
பெளத்தம் சார்ந்த கண்ணுக்குப் புலப்படும் தரவுகள் மட்டுமே இதுவரை ஆதாரங்களாக கொள்ளப்படுகின்றன. அவற்றோடு கண்ணுக்கு புலப்படாத பண்பாட்டு நம்பிக்கைகளையும் ஆவணப்படுத்துவது தான் இந்த பள்ளியின் முதன்மை நோக்கம். இதன் வழியாக தமிழ்ச்சமூக பண்பாடு சமயங்கள் மற்றும் மெய்யியல் வரலாற்றை மாற்று கோணத்தில் அணுக உதவுவதும் இந்த கோணத்தில் ஆய்வு மேற்கொள்ள விரும்பும் ஆய்வுக்குழுவை உருவாக்குவதும் அல்லது உதவியாக இருப்பதும் இதன் மற்றொரு நோக்கம் .அடிப்படையில் இது ஆய்வாளர்களுக்கான தளம். ஆய்வாளர் என்பவர் கல்விப்புலம் சார்ந்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
எல்லாவற்றையும் உடனே செய்துவிட முடியாது என்பதால் பெரிய வேலைத்திட்டங்களுக்கான பிரகடனங்கள் இல்லை. கிடைக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கருத்தரங்கு, வாசிப்பு அரங்கு, பயிலரங்கு, ஆய்வுக் கட்டுரை போன்றவற்றில் ஒரிரண்டையாவது படிப்படியாக செய்ய திட்டம் .
நண்பர்களின் யோசனைகளும் உதவியும் பங்களிப்பும் தேவைப்படுகின்றன . மே 20 ஆம் நாள் மதுரையில் இதன் தொடக்க விழா நடந்தது. உள்ளூர் பெளத்தம் பற்றிய யோசனைக்கு வித்திட்ட பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த நாள் இது.இந்த முதல் கூட்டத்திற்கு நண்பர்கள் அழகரசன், ஏ பி ராஜசேகரன், காளிங்கன் ,ரத்தினக்குமார், அருள்முத்துக்குமரன், ஜெயப்பிரகாஷ் ,வெ முருகன், அருண்பிரகாஷ் ராஜ்,ராஜா ஆகியோர் ஆலோசனையிலும் ஆதரவிலும் இணைந்தனர். இத்தகைய ஆய்வு மையத்திற்கான யோசனையை தந்த அன்பு வேந்தனும் நானும் ஒருங்கிணைத்தோம்.
பெளத்தம் பற்றிய இன்றைய ஓர்மையில் புத்தரின் சிலைகள் பரவலாக கிடைத்திருப்பவை முக்கிய தாக்கம் செலுத்தியிருக்கின்றன. அதன் சேகரிப்பில் குறிப்பிடத்தக்க பணியைச் செய்த முனைவர் பா.ஜம்புலிங்கம் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். புத்தர் சிலைகளை தேடிய அனுபவங்களையும் மக்களிடையே இருந்து வந்த வெவ்வேறு புரிதல்களையும் தன்னுடைய உரையில் விரிவாக பகிர்ந்து கொண்டார்.
வ.கீதா கருந்துரை வழங்கினார். இந்தியாவில் வரலாற்று ரீதியாக பகுதிகள் சார்ந்து பெளத்தம் விளங்கி வந்த விதத்தை விவரித்த அவரின் உரை உள்ளூர் அளவில் பல்வேறு தரப்பினராலும் பெளத்தம் புரிந்து கொள்ளப்பட்ட விதத்தையும் வரிசைப்படுத்தியது. பெளத்த அக்கறை கொள்ளும் யாருக்குமான வரைபடமாக அவ்வுரை விளங்கியது. பெளத்தத்தை உள்ளூர் அளவிலிருந்து புரிந்து கொள்ள முற்படும் இந்த அமைப்பின் தொடக்க விழாவிற்கு பொருத்தமான உரையாக அது அமைந்தது. இருவரின் உரைகளும் காணொளியாக பகிரப்படும்.
இன்னும் சில நாட்களில் இவ்வாய்வுப்பள்ளிக்கான இணையதளம் இயங்கத் தொடங்கும். தமிழகத்தில் கிடைத்த புத்தர் சிலைகளின் 30 படங்கள் சிறிய அளவில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் கலந்துகொண்ட நண்பர்களுக்கு நன்றி.
காரியங்கள் கைகூட வேண்டும். பார்க்கலாம்

திரு மதுரை சரவணன்
பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ்ப்பௌத்த ஆய்வுப்பள்ளியின் அவசியம் குறித்து பேசி விழாவை தொடங்கி வைத்தார்.
முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள் தமிழ்ப்பௌத்த ஆய்வுப்பள்ளியை தொடங்கி வைத்து, தனக்கும் புத்தருக்குமானத் தொடர்பை சுவாரஸ்யமானச் சம்பவங்களுடன் கூறினார். களப்பணி மூலமாகக் கண்டறிந்த மீசை வைத்த புத்தர் சிலை, திருடு போன சமணர் சிலை, திருடன் என மாட்டிக்கொண்டபோது பத்தாவது மாணவியால் தப்பித்த சம்பவம், கண்டிரமாணிக்கம் புத்தர் இடமில்லாமல் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்ட தகவல், புஷ்பவனத்தில் மொட்டை அடித்து வழிபடப்படும் புத்தர் இருக்கிறார் என்ற தகவலையும், முன்பு இடும்பவனத்தில் இருந்த புத்தர் சிலை தற்போது இல்லை என்ற அதிர்ச்சி தகவலையும் அளித்தார்.
“1994ல் கும்பகோணம் வலங்கைமான் அருகில் மூன்று புத்தர் உள்ள தகவல் கிடைக்கப் பெற்றேன். 8 ஆண்டுக்கு பின் சென்று வளையமாபுரத்தில் அழகானத் தலையில்லாத புத்தர் சிலையைக் கண்டேன்” என்ற போது அவர் ஆய்வு மீது கொண்ட அக்கறை விளங்கியது. புத்தர் மேல் எண்ணெய் தடவினால் கொசு கடிக்காது, குழுமூரில் புத்தர் சிலை இருப்பதால் குழந்தைகள் அழுவதில்லை என்பது போன்ற மூட நம்பிக்கைகள் குறித்து குறிப்பிட்டு ஆச்சரியப்படுத்தினார். பட்டீஸ்வரத்தில் கிராம தேவதை கோயிலில் புத்தர் சிலை உள்ளது என்று மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார். ஆனால், அங்கு சென்று பார்த்தபோது அப்படி இல்லை. அதன்பின் ஆவூர் ரோட்டில் புத்தர் சிலை உள்ளது என ஒருவர் கூற, அங்கு சென்று பார்த்தேன். பிற தெய்வங்களுடன் புத்தர் சிலை அங்கிருந்தது எனக் கூறி சுவாரஸ்யம் ஊட்டினார். சரியான இடத்தை குறிப்பிடுவது நல்லது என்றார். முதன்மை ஆதாரங்கள் மிக முக்கியமானவை. அவை இல்லை எனில் சான்று ஆதாரம் மாறி, வாய்மொழி கதைகள் முளைத்து ஆதாரம் திரிக்கப்பட்டு விடக் கூடும் அன்று கூறி, வரலாறு மாற்றப்படுவது குறித்து எச்சரித்தார். புத்தர் குறித்த ஆய்வுகள் முன்பை விட அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தனது உரையை முடித்தார்.

பெண்ணீய செயல்பாட்டாளர் வ. கீதா அவர்களின் உரை
தற்காலத்திற்கும் கடந்த காலத்திற்குமான உரையாடலே வரலாறு ஆகும். வரலாறு அற்றவர்கள்/மறுக்கப்பட்ட மக்களின் வரலாறாக பௌத்த ஆய்வுகள் உள்ளன. இதுவே, பௌத்த வரலாறாக உள்ளது. வேறு எந்த விசயங்களால் வரலாற்றை தொடர்பு படுத்த வேண்டும்? இதற்கு முன்பு என்ன செய்தார்கள்? நவீன காலத்தில் பௌளத்த பற்றிய ஆய்வுகளின் பரப்பு மூன்று வகையாக பிரிக்கலாம். அவை 1. மேற்கத்தியர் செய்த ஆய்வுகள். 2. இந்திய துணைக்கண்டத்தில் செய்யப்பட்ட ஆய்வுகள் 3. பௌத்தத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் ஆகும். மேற்கத்தியர் செய்த ஆய்வுகள் 1. மொழியியல் துறை சார்ந்த பண்பாட்டு ஆய்வுகளாக உள்ளன. அவை பாலி/சமஸ்கிருதம் சார்ந்த ஆய்வுகளாக உள்ளன. 2. அவர்கள் பௌத்த நூல்களை மொழிபெயர்த்தனர். 3. கிறித்துவ மிஷன்களின் ஆய்வுகள் பிராமணியத்தையும், பௌத்தத்தையும் இணைப்பதாக இருந்தது. புத்தரும் ஏசுவும் சந்தித்து கொண்டனரா? என்பது போன்ற ஆய்வுகளும் மேற்கொண்டனர். 4. பௌத்தத்திற்கும் பிராமணியத்திற்கும் இடையே உள்ள சவால்கள் மொழியல் ஆய்வுகளாக மேற்கொண்டனர். 5. பௌத்தம் குறித்த ஆய்வுகளை விளக்க வரும்போது தங்கள் கட்டமைக்கப்பட்ட வரலாற்றில் இருந்தும், பிராமணியத்திற்கு மாற்று  இந்து மதம் தன்னை சீர்திருத்தம் செய்வதற்கானதாகக் கூறினார்கள். இந்திய ஆய்வாளர்கள் பல நிலைகள் கொண்டுள்ளனர். 1. இந்து மதத்தின் சீர்திருத்தப்பட்ட வடிவம் பௌத்தம் என்கின்றனர். 2. கல்கத்தா, பூனா, சென்னை போன்ற மையங்கள் செய்த ஆய்வுகள் மொழி சார்ந்த பண்பாட்டு தளம் சார்ந்த ஆய்வாக உள்ளது. 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் வங்க மொழியில் மாற்றம் ஏற்பட்டபோது கலச்சாரம் அதன் அடையாளமாக உள்ளது் என அரி பிரகாஷ் சாஸ்திரி கூறியுள்ளார். ஏற்கனவே இருக்க கூடிய வழிபாடுகள் பௌத்தத்திற்குள் சென்றிருக்கலாம் என்றும் கூறினார்.

பீம்பாய் கலிங்கத்துடன் இணைத்து பேசுகின்றனர். பூனே பகுதியில் எல்லோரா குகை, எலிபண்ட் கேவ் ஆகியவை பௌத்த மதம் குறித்து பேசுகின்றன. பிபி சிண்டே மராத்தியில் எழுதிய நூலில்  தமிழ்நாட்டில் பறையர்கள் மத்தியில் பௌத்த மதம் பரவியுள்ளதாக கூறுகின்றார். தறகால வாழ்வு நெறியாக்கி தேடலை ஏற்படுத்தியவர்கள் நரேந்திரநாதன், ராகுல் சாங்கிருத்யாயன், கௌசல்யன் ஆவார்கள். அரசியல் தளத்தில் ஆச்சாரியர் தர்மானந்த கோசாம்பி ஆகியோர் ஆய்வுகள் முக்கியமானவை. பூவேந்திர நாத் தத்தா, சுவாமி விவேகானந்தர. தம்பி பண்பாட்டு தளத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்துக்கு மாற்று மதமாக பௌத்தம் திகழ்கிறது. ஒவ்வொரு பகுதிக்கு உரிய பார்வை மாறுபட்டுள்ளது. இஸ்லாம் அரசர்கள் பௌத்தத்தை போதித்தனர் என்கிறது பூனே பகுதி ஆய்வுகள். 
பொற்கால சிந்தனையை கேள்விக்குடபடுத்தும் விதமாக பௌத்தம் இருந்துள்ளது். அயோத்திதாசர் - அறம் சார்ந்த தத்துவம் - (தர்மானந்த கோசாம்பியைத் தவிர்த்து) குறித்து விளக்குகிறது. நவீன வரலாற்றின் தாக்கத்திற்கு உட்பட்டு, உள்ளூர் வரலாற்று பண்புகளுடன் விளக்கும் பார்வையுடையதும், விடுதலை மரபை கொண்டுள்ளதாக அயோத்தி தாசர் ஆய்வுகள் உள்ளன. 1. பௌத்தம் அந்நியப்பட்டதன்று 2. உள்ளூர் பழக்கவழக்கங்கள் / திரிபுகளில் இருந்து கதையாடல் வாழ்வியல் வழியாக பௌத்தத்தை கட்டமைக்கிறார். இதனை அவரின் "ஆதி வேதம்" கூறுகிறது. சாதி எதிர்பை முன்னிறுத்திப் பேசிய அனைவரும் பேசுவது தன்னிலை மாற்றம் வேண்டும். தன்னிலை மாற்றத்திற்கு அறம் தேவைப்படுகிறது. அதனால், பௌத்தம் குறித்த புரிதலும் மாறுபடும் என்பது எனது கருத்து என்ற ஆழ்ந்த ஆய்வுரையை வழங்கினார் பெண்ணிய செயற்பாட்டாளரான கீதா.
பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் தெற்காசிய நாடுகளில் புத்தர் சிலைக்கு உள்ள தேவையினைக் குறித்து கூறி, புத்தர் சிலை திருடு போவதற்கான காரணத்தை விளக்கி எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தினார்.

திரு அருள் முத்துக்குமரன்
பண்டிதர் பிறந்த நாளான மே 20 அன்று மதுரையில் தமிழ்ப்பெளத்த ஆய்வுப் பள்ளி தொடங்கப்பட்டது. இது தலித் வரலாற்றின் அடுத்தக் கட்ட நகர்வுக்கு அழைத்து செல்லும். சிறப்பு அழைப்பாளர்களாக வந்த அய்யா ஜம்புலிங்கம் தன்னுடைய முனைவர் பட்டத்திற்காக மேற்கொண்ட "சோழநாட்டில் பௌத்தம்" பற்றிய தன் கள அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். மேலும், அதன் அவசியத்தையும் உணர்த்தினார்.
மற்றொரு அழைப்பாளரான வ.கீதா அவர்கள் மிக சிறப்பாக உரை நிகழ்த்தினார். நவீன காலத்தில் உலக நாடுகளில் பௌத்தைப் பின்பற்றப்பட்ட பின்னணியையும் அதன் மீது நிகழ்ந்த ஆய்வுகளைப் பற்றியும் விரிவாகப் பேசினார். மேலும், தமிழில் பௌத்தத்தின் மீது பண்டிதர் நிகழ்த்திய ஆய்வின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். நம் ஆய்வின் விரிவான எல்லையின் அவசியத்தையும் உணர்த்தினார்.
இந்நிகழ்வை அய்யா எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், ஆய்வாளர் அன்பு வேந்தன் ஆகியோர்கள் ஒருங்கிணைத்தார்கள்.

திரு ரமேஷ் கண்ணன்
முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள் தனது நீண்டகால ஆய்வுப்பணியினை சிறுகதை போலச் சொல்லிக்கொண்டே சென்றார். சோழநாட்டுப் பகுதியில் அவர் கண்டறிந்த புத்தர் சிலைகளைப் பற்றிய தகவல்களும் அதற்கென அவரின் மெனக்கெடலும் மலைப்பாக இருந்தன. அவர் நெற்றியில் திருநீறு அணிந்திருந்தது தமிழ் நிலத்தின், அவரின் பக்க சார்பற்ற ஆய்வுமுறைமைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது.
அடுத்ததாக பேசிய வ.கீதா அவர்கள் பௌத்தம் குறித்த விஷயங்களை உலகளாவிய அளவில் விரிவாக அணுகியதுடன் நிலம்சார் அடையாளம் அற்று மொழிசார் அடையாளத்துடனிருப்பது சரியென்ற தனது பார்வையை எடுத்துரைத்தார். பௌத்தம் குறித்த ஆய்வுக்கான இன்றைய தேவையையும் அவசியத்தையும் நிரல்பட உரையாற்றியது வெகுசிறப்பு.
முன்னதாக அன்புவேந்தன் ஆய்வென்பது டெக்ஸ்டை ஆப்ஜெக்ட்ஸ்ஸைத் தாண்டி மனிதர்களின் அன்றாட வாழ்வியலில் இரண்டறக் கலந்துள்ள பௌத்தக்கூறுகளை கண்டறிவதின் அவசியத்தை வலியுறுத்தினார்.
பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆய்வுப்பள்ளியானது பௌத்த மதத்தின் பரப்புரைக்கோ அதன் வளர்ச்சி குறித்தோ அமைக்கப்பட்டதல்ல எனவும் ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில் அறம்சார் விழுமியங்களைக் கொண்ட பின்பற்றல் முறைகளைப் பற்றிய மீள்கொணர்வும் அதன் மூலமாக நேர்மறைச் சிந்தனைகளை சமூகத்தில் ஏற்படுத்துவதுமேயாகும் என்றும் கூறி நிகழ்வினை முடித்தார்.
ஆய்வாளர் கண்டறிந்த புத்தர் சிலைகள் பற்றிய புகைப்படக் கண்காட்சியும் வளாகத்தில் நடைபெற்றது.

நன்றி
திரு ஸ்டாலின் ராஜாங்கம், திரு மதுரை சரவணன், திரு அருள்முத்துக்குமரன்,  திரு அன்புவேந்தன், திரு ரவிக்குமார், திரு பொய்யாமொழி முருகன், திரு ரமேஷ்கண்ணன், திரு ராஜ்குமார் மற்றும் நண்பர்கள்
பள்ளி தொடர்பாக செய்தி வெளியிட்ட The Hindu 


பௌத்தப்பள்ளி பற்றி The Hindu நாளிதழில் வெளியான செய்தி

29 ஆகஸ்டு 2019 அன்று மேம்படுத்தப்பட்டது.

Comments

 1. தங்களது உழைப்பு போற்றுதலுக்கு உரியது அதற்கான அங்கீகாரமும், புகழும் நிச்சயம் கிடைத்திட இறையருள் கிட்டட்டும்.

  ReplyDelete
 2. வாழ்த்துகள் ஐயா
  படங்களும் பகிர்வும் அருமை
  நிகழ்வில் கலந்துகொண்ட உணர்வு

  ReplyDelete
 3. தொகுப்பாக புகைப்படங்களுடன் புத்தகம் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 4. வாழ்த்துகள்

  ReplyDelete
 5. பௌத்தம், தமிழக வரலாற்றில் பெரும் பங்காற்றியுள்ளது. களப்பிரர் காலம் என்பதே, பௌத்தர்களின் வழிகாட்டுதலில் நிகழ்ந்ததாகவே தோன்றுகின்றது. அதன் அரசியல் அம்சம் ஒரு பக்கம் இருப்பினும், அதன் தத்துவ மற்றும் சமூக பயன்பாட்டு பங்களிப்புகள் இன்னும் முழுமையாக வெளிக்கொணரப்படவில்லை. தாங்கள் தொடக்கி வைத்தது, பௌத்தத்தின் புத்தெழுச்சிக்கு உரமாகட்டும். அது, புதிய இந்திய தத்துவ நோக்கிற்கும் வாழ்வியலுக்கும் பங்களிக்கட்டும். தங்கள் அரிய சீரிய முயற்சிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. நல்ல தொடக்கம். வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. வாழ்த்துகள். நிகழ்வுப் படங்களும் விவரணங்களும் சிறப்புத் தொகுப்பு ஐயா.

  கீதா

  ReplyDelete
 8. புகைப்படங்களை காணும் போது நேரிலே கலந்து கொண்ட ஓர் உணர்வு

  ReplyDelete
 9. ஆய்வுப்பரப்பில் புதிய எல்லைகளைத் தொடும் முயற்சி வெல்ல வாழ்த்துகளை அள்ளித்தருகிறேன்

  ReplyDelete
 10. பௌத்தம் உன்னதமானது. உலகோருக்கானது. வாழ்த்துக்கள்
  - E.அன்பன், திரிபிடக தமிழ் நிறுவனம் சென்னை

  ReplyDelete
 11. திரு மணிகண்டன் ஆறுமுகம் (mani.tnigtf@gmail.com வழியாக)
  மிகச்சிறப்பாக சிறந்த ஆய்வாளர்களின் சந்திப்பில் தங்களது உரை சிறப்பாக இருந்ததாக அறிந்தேன் மகிழ்ச்சி அய்யா.

  ReplyDelete
 12. நல்ல பல தகவல்களின் தொகுப்பு.நன்றி

  ReplyDelete
 13. அய்யா, அருமையான முயற்சி. பாராட்டுக்கள். நான் ரவிக்குமார் அவர்களின் ஆய்வு வழிகாட்டி.

  ReplyDelete

Post a Comment