சோழ நாட்டு சமணக்கோயில்கள்
28 மே 2018 அன்று சோழ நாட்டிலுள்ள சமணக் கோயில்களில் மூன்று கோயில்களுக்கு திரு அப்பாண்டைராஜன், திரு மணி.மாறன், திரு தில்லைகோவிந்தராஜன் உடன் ஆகியோருடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. முன்னரே இக்கோயில்களுக்குச் சென்றிருந்தபோதிலும் சில மாற்றங்களை இக்கோயில்களில் காணமுடிந்தது. நாங்கள் எழுதி வெளிவருகின்ற தஞ்சையில் சமணம் நூலுக்காக செய்திகளைத் திரட்டும் வகையில் இவ்வுலா அமைந்தது.
கும்பகோணம் சந்ர ப்ரப பகவன் ஜினாலயம்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சந்ரப்பிரப பகவான் சமணக்கோயில் உள்ளது. இக்கோயிலின் நுழைவாயில் கருங்கற்கலால் வடிக்கப்பட்டுள்ளது. தூண் அமைப்பும், நிலைக்கால் மேலுள்ள பகுதியும் சோழர் கட்டுமானப்பகுதியிலிருந்து எடுத்து வந்து அமைக்கப்பட்டுள்ளது.
கருவறையில் மூலவர் சந்திரப்பிரபா திருமேனி வெள்ளைப் பளிங்குக்கல்லால் உள்ளது. மூலவர் கருவறை கட்டுமானம் தாராசுரம் சோழர் காலத்து கட்டுமானத்தை ஒத்துத் திகழ்கிறது. இக்கட்டுமானத்திற்கான கற்கள் அனைத்தும் இடிபாடுற்ற சோழர் காலக் கோயிலுள்ள கற்கள் என்றே அறியமுடிகிறது. திருச்சுற்று கருங்கல் கட்டமானப்பணியாக உள்ளது. திருச்சுற்றில் மகா சாஸ்தா சிற்பம் உள்ளது. தலையில் சீதள தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளது.
தீபங்குடி தீபயகஸ்வாமி ஜினாலயம்
திருவாரூர் மாவட்டம், தீபங்குடி தீபயகஸ்வாமி ஜினாலயத்தின் ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டமைந்துள்ளது. செங்கல் கட்டுமானமாக உள்ள இவ்வாயிலின் நுழைவாயில் கருங்கல்லால் ஆனதாகும். வலது புறத்தில் ராஜகோபுரத்தின் முன்பாக, வாகனக்கொட்டகையாக முன்பு இருந்த அமைப்பு, 2004இல் சீர் செய்யப்பட்டு பக்தர்கள் தங்கும் அறைகளாக மாற்றப்பட்டுள்ளது.
ஆதித்தர் சன்னதி, சேத்ரபாலர் சன்னதி, ஜ்வாலாமாலினி அம்மன் சன்னதிகள் உள்ளன. உள்ளே செல்லும்போது கொடி மரம், நான்கு தூண்களுடன், முக மண்டபத்துடன் இணைந்தவாறு மேல் தளம் எண் கோண வடிவில் உள்ளது. எண் கோண வடிவக் கட்டுமானத்தில் 24 தீர்த்தங்கரர்களின் சுதையுருவச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அடுத்து பலிபீடம் உள்ளது. பலிபீடத்தை அடுத்து குறுக்கு வாட்டத்தில் மராட்டியர் கால வடிவமைப்புடைய வவ்வால் நத்தி மண்டபம் உள்ளது. அதோடு அமைந்து அதே அமைப்பில் நீள வாக்கில் முக மண்டபம் உள்ளது. முக மண்டபத்தின் வலது புறத்தில் விரஷபஸ்வாமி சன்னதி உள்ளது. தர்மதேவி அம்மன் சிற்றாலயம் கருவறை மகா மண்டபத்துடன் உள்ளது. அடுத்து ஸ்ருதஸ்கந்தம் சிம்ம லாஞ்சனையுடன் உள்ளது. முக மண்டபத்தின் மையப்பகுதியில் ரிஷபநாதர் சிற்பம் உள்ளது. விமானம் மூன்று தளங்களைக் கொண்டமைந்துள்ளது.
வயலில் உள்ள அண்மைக்காலக்கோயில்
புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தீபங்குடி சமணக் கோயிலிருந்து 5 கிமீ தொலைவில் ஒரு சமணக்கோயில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 24 தீர்த்தங்கரர்களில் ஒருவராக உள்ளவரை மூலவராகக் கொண்ட கோயிலாக இருக்கும் என்று எண்ணி அங்கு சென்றோம். அங்கு அண்மைக்காலத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய கோயிலைக் காணமுடிந்தது. வயலில் உள்ள அக்கோயிலின் மூலவரை தோட்டத்து பிரம்மதேவர் என்றழைக்கின்றனர். அமர்ந்த நிலையில் வலது கால்தொங்கவிடப்பட்ட நிலையிலும், இடது கால் மடித்து குத்துக்கால் வைத்து கையை தொங்கவிட்ட நிலையிலும் உள்ளார். வலது கையில் சென்டு உள்ளது. தலை விரிசடையாக உள்ளது.
மன்னார்குடி மல்லிநாதஸ்வாமி ஜினாலயம்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள மல்லிநாதஸ்வாமி ஜினாலயத்தின் ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டமைந்துள்ளது.கோயிலின் முன்பாக இடது புறத்தில் இடிபாடுற்ற நிலையில் மண்டபம் உள்ளது.
உள்ளே நுழைந்ததும் வலப்புறத்தில் ஜ்வாலாமாலினி சிற்றாலயம் உள்ளது. மண்டபம் வவ்வால் நத்தி மண்டப வடிவில் உள்ளது. கருவறையில் அஷ்டபுஜதேவி உள்ளார். மூலவர் கருவறைக்கு வலத புறம் பூரண புஷ்கலையுடன் பிரம்மதேவரும், இடது புறம் சேத்திரபாலரும் உள்ளனர். கொடி மரம், பலி பீடம் ஆகியவை உள்ளன. பலி பீடம் கல்ஹாரமாக வேலைப்பாட்டுடன் எண்கோண வடிவில் உள்ளது. நான்கு அழகிய தூண்களைக் கொண்டமைந்துள்ளது. மகாமண்டபத்தில் தர்மதேவி, பத்மாவதி அம்மன், ஸ்ருகஸ்கந்தம் ஆகியவை உள்ளன. மண்டபத்தில் மல்லிநாதர் செப்புத்திருமேனியும் அட்ட மங்கலப் பொருள்களும் உள்ளன. அடுத்து உள்ள அர்த்த மண்டபத்தின் இடது புறத்தில் மூன்று தீர்த்தங்கரர் திருமேனிகள் உள்ளன. அர்த்தமண்டபத்தின் வலது புறத்திலும், இடது புறத்திலும் தீர்த்தங்கரர்களின் செப்புத்திருமேனிகளும், யட்சன் மற்றும் யட்சினிகளின் செப்புத்திருமேனிகளும் காணப்படுகின்றன. தூண்கள் செங்கல் கட்டுமானமாக கல்ஹார அமைப்பில் உள்ளது. தீபங்குடியைப் போல சமணத் தத்துவத்தை உணர்த்துகின்ற ஏழு நிலைகளைக் கொண்ட இக்கோயில் அமைந்துள்ளது.வன்னி மரத்தடியில் முன்பு புத்தர் சிலை இருந்த இடத்தில் சிறிய பைரவர் சிற்பம் உள்ளது.
கரந்தட்டாங்குடி ஆதீஸ்வரர் ஆலயம்
இதற்கு முன்னர் தஞ்சாவூர் நகரில் கரந்தட்டாங்குடியில் உள்ள சமணக்கோயிலுக்குச் சென்றேன். கருவறை, ராஜ கோபுரம், அர்த்தமண்டபம், முக மண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ள இக்கோயிலின் மூலவர் ஆதீஸ்வரர் ஆவார். இவர் முதலாம் தீர்த்தங்கரரான ரிஷபதேவர் ஆவார்.
இந்த நான்கு சமணக் கோயில்களில் கும்பகோணத்திலுள்ள கோயிலுக்குள் செல்லும்போது சோழர் கால சைவக் கோயிலுக்குள் செல்வதைப் போன்ற உணர்வினை அக்கட்டட அமைப்பு வெளிப்படுத்துகிறது. பிற மூன்று கோயில்களில் தீபங்குடி கோயில் பெரிய வளாகத்தைக் கொண்டு அமைந்துள்ளது. இந்த நான்கு ஊர்களிலும் இன்னும் சமணப்பெருமக்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வருவதையும், அவர்கள் பலவிதமான விழாக்களை நடத்துவதையும் காணமுடிந்தது.
கரந்தட்டாங்குடி ஆதீஸ்வரர் ஆலயம்
இதற்கு முன்னர் தஞ்சாவூர் நகரில் கரந்தட்டாங்குடியில் உள்ள சமணக்கோயிலுக்குச் சென்றேன். கருவறை, ராஜ கோபுரம், அர்த்தமண்டபம், முக மண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ள இக்கோயிலின் மூலவர் ஆதீஸ்வரர் ஆவார். இவர் முதலாம் தீர்த்தங்கரரான ரிஷபதேவர் ஆவார்.
இக்கோயிலில் ஜீனவாணி, சாசன தேவ தேவியர், பிரம்மதேவர், ஜ்வாலாமாலினி, தர்மதேவி, பத்மாவதி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளனர், குந்தகுந்தாசாரியார் உள்ளார். நந்தவனமும் குளமும் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது.
இந்த நான்கு சமணக் கோயில்களில் கும்பகோணத்திலுள்ள கோயிலுக்குள் செல்லும்போது சோழர் கால சைவக் கோயிலுக்குள் செல்வதைப் போன்ற உணர்வினை அக்கட்டட அமைப்பு வெளிப்படுத்துகிறது. பிற மூன்று கோயில்களில் தீபங்குடி கோயில் பெரிய வளாகத்தைக் கொண்டு அமைந்துள்ளது. இந்த நான்கு ஊர்களிலும் இன்னும் சமணப்பெருமக்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வருவதையும், அவர்கள் பலவிதமான விழாக்களை நடத்துவதையும் காணமுடிந்தது.
-------------------------------------------------------------------------------------------
நன்றி : திரு அப்பாண்டைராஜன், திரு தில்லை. கோவிந்தராஜன்,
திரு மணி.மாறன்
-------------------------------------------------------------------------------------------
28 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது
கோயில் உலா வந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
ReplyDeleteசிறப்பான கோயில் உலா. நன்றி ஐயா.
ReplyDeleteஅருமை...
ReplyDeleteதங்களின் ஆர்வம் வியக்க வைக்கிறது ஐயா...
அருமை ஐயா
ReplyDeleteSuper sir,
ReplyDeleteதஞ்சை மாவட்ட சமண யாத்திரையை நன்கு விளக்கியுள்ளீர்கள். தஞ்சையில் சமணம் நூலில் பல பக்கங்களை புரட்டிப் பார்க்க அனுமதித்தமைக்கு நன்றி
ReplyDeleteதங்கள் மூவரோடும் பயணித்தது ஓர் இனிய அனுபவம். அருமையான பதிவு. நன்றி
ReplyDeleteகோயில் உலா அருமை. எல்லா கோயில்களுமே இந்து கோயில்களின் கோபுரங்களைப் போலவே இருக்கின்றனவே.
ReplyDeletevery interesting and informative
ReplyDelete