பௌத்த சுவட்டைத் தேடி : தஞ்சாவூர் கீழவாசல்

1999இல் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் (French Institute of Pondicherry) புத்தர் சிலை தொகுப்பில் இருந்த புகைப்படங்களில் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள வீரபத்திரர் சிற்பத்தைக் கண்டபோது, அது புத்தர் அல்ல என்றதும், நான் தெரிவித்ததன் அடிப்படையில் அந்நிறுவனத்தார் உரிய திருத்தத்தினை தம் தொகுப்பில் மேற்கொண்டதும், அந்த சிலையைப் பார்க்க சுமார் 20 ஆண்டுகள் ஆனதும் ஒரு மறக்க முடியாத அனுபவம். 1999இல் தொடங்கிய தேடல் சூன் 2016இல் நிசும்பசூதனி கோயிலின் குடமுழுக்கின்போது நிறைவேறியது.  சற்றே பின்னோக்கிச் செல்வோமா?

பிப்ரவரி 1999 
முதன்முதலாக என் ஆய்வு தொடர்பாக புத்தர் சிலைகளைப் பற்றிய விவரங்களைத் திரட்ட புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றபோது அங்குள்ள சுமார் 50க்கு மேற்பட்ட புத்தர் சிற்பங்கள் தொடர்பான பதிவுகளைக் காணமுடிந்தது. அப்பதிவுகளில் (எண்.5671.7) ஒரு சிலை கீழவாசல், தஞ்சாவூர் என்ற குறிப்புடன் வீரபத்திரர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புத்தர் சிலைகளைப் பற்றிய தொகுப்பில் இவ்வாறான புகைப்படம் இருந்தது வித்தியாசமாக இருந்தது. பாண்டிச்சேரி களப்பணி முடிந்து தஞ்சாவூர் திரும்பிய முதல் அந்த சிலை எங்கிருக்கிறது எனத் தேட ஆரம்பித்தேன். கீழவாசல் வெள்ளைபிள்ளையார் கோயில் தொடங்கி பகுதி முழுவதிலும் தேடினேன். அச்சிலையைப் பற்றி விசாரித்தேன். யாருக்கும் தெரியவில்லை. இருந்தாலும் விடாமல் தேடிக்கொண்டே இருந்தேன். அச்சிலையைப் பற்றி யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. 

நவம்பர் 2011
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகளை ஆவணப்படுத்தும் திட்டத்தின்கீழ் களப்பணி வருவதாகவும், வாய்ப்பிருப்பின் என்னையும் திரு தில்லை.கோவிந்தராஜன் அவர்களையும் வரும்படியும் பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் முனைவர் முருகேசன் கேட்டுக்கொண்டபடி 2.11.2011 அன்று திட்டமிட்டு 3.11.2011 பிரெஞ்சு ஆய்வு நிறுவன ஆய்வாளர் முனைவர் முருகேசன், அந்நிறுவன புகைப்படக்கலைஞர் திரு ரமேஷ்குமார், திரு தில்லை. கோவிந்தராஜன் ஆகியோரைக் கொண்ட குழுவுடன் களப்பணி மேற்கொண்டோம். களப்பணியின்போது புகைப்படத்தை வைத்து நோக்கும்போது கீழவாசல் பகுதியில் வீரபத்திரர் என்ற குறிப்புடன் உள்ள சிலை புத்தர் சிலை அல்ல என்று அவரிடம் கூறினேன். அப்போது அவர் தம் நிறுவனத்தின் பதிவுகளில் உரிய திருத்தம் மேற்கொள்வதாகக் கூறினார். அந்த சிலை இருக்கும் விவரம் பற்றிக் கேட்கத் தவறிவிட்டேன். அதுநாள் வரையில் அந்த சிலையை நான் பார்க்கவில்லை. அதே சமயம் அச்சிலையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். 

சூன் 2016

23 சூன் 2016 குடமுழுக்கினை முன்னிட்டு நிசும்பசூதனி கோயிலுக்கு 18 சூன் 2016 அன்று என் மனைவியுடன் சென்றபோது அவர் நிசும்பசூதனி கோயிலுக்கு அருகில் ஒரு சிவன் கோயில் இருப்பதாகக் கூறி அழைத்துச் சென்றார். பூமால்ராவுத்தன் கோயில் என்று அழைக்கப்படுகின்ற வைத்யநாதேஸ்வரர் கோயிலுக்கு அதுவரை நான் சென்றதில்லை.
மூலவர் கருவறையுடன் கூடிய விமானம்

கோயிலின் மற்றொரு நுழைவாயில்

கோயிலின் நுழைவாயில்
அங்கு 1999 முதல் நான் வெளியில் தேடி வந்த முன்னர் புத்தர் சிலைகள் பட்டியலில் இடம் பெற்றிருந்த சிலையினைக் கண்டேன். சிலையைப் புகைப்படம் எடுத்தேன். 1999இல் புத்தராக பட்டியலில் காணப்பட்ட இச்சிலையை நேரில் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தேன்.  
புத்தராக இல்லாவிட்டாலும்  புதுச்சேரி பிரெஞ்சு நிறுவன ஆராய்ச்சியாளர் முருகேசன் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பூமால்ராவுத்தன் கோயிலில் சிலை உள்ள விவரத்தையும், அந்த சிலையை அங்கு பிச்சாண்டவர் என்ற குறிப்போடு பார்த்ததையும் கூறினேன். அப்போது அவர் அக்கோயிலில் இருப்பது தனக்குத் தெரியும் என்றும், பின்னர் நான் கூறியதன் அடிப்படையில் புத்தர் சிலை பட்டியலில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். அவரிடம் தெளிவாக நான் கேட்டிருந்தால் அந்த சிலை அக்கோயிலில் இருப்பதை முன்னரே பார்த்திருப்பேன். வரலாற்றறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் இச்சிலை யோக பட்டத்தில் உள்ள சிவன் சிலை என்றும், இச்சிலை கி.பி.8-9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும்  தஞ்சாவூர் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய களப்பணிகளில் புத்தர் சிலைகளைத் தேடிச் சென்றுள்ளேன்.  புத்தர் சிலை அல்லாத ஒரு சிலையைப் பற்றிய பதிவினை உறுதி செய்ய இக்களப்பணி எனக்கு உதவியது என் ஆய்வில் மறக்கமுடியாத அனுபவமே. பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் தம் பட்டியலில் உரிய திருத்தம் மேற்கொண்டு தெரிவித்ததும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

நன்றி  
உடன் வந்த என் மனைவி திருமதி பாக்கியவதி
தகவலை உறுதி செய்த பிரெஞ்சு நிறுவன ஆய்வாளர் முனைவர் முருகேசன் 

Comments

 1. தங்களின் இருபது ஆண்டுகால தேடல் வியப்பைத் தருகிறது ஐயா
  தொடரட்டும் தங்களின் களப் பணி

  ReplyDelete
 2. முனைவர் அவர்களின் தேடுதல் பணி இன்னும் தொடர்ந்து பல வெற்றிகளைப்பெற எமது வாழ்த்துகள்
  த.ம.2

  ReplyDelete
 3. Jambulingam Balagurusamy sir,
  Your dedication towards exploration of new idols and Buddhist studies of Tamil Nadu is extraordinary.

  Pondy Rameshkumar (French Institute of Pondicherry)

  ReplyDelete
 4. இதைதான், தேடினால் நிச்சயம்கிடைக்கும் என்று சொல்கிறார்களோ :)

  ReplyDelete
 5. ஃப்ரென்ச் நிறுவன ஆய்வகம் அச்சிலையை புத்தர் சிலை என்றார்களா. அப்படியானால் காரணம் ஏதாவது தெரிவித்தார்களாவாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தொகுக்கும் பணி என்பது மிகவும் சிரமமானது. தொகுப்பில் இவ்வாறான பெயர் மாற்றங்களும், விடுபாடுகளும் இருப்பது இயற்கையே. அது புத்தர் இல்லை என்று நான் கூறியதும் அந்நிறுவனம் உரிய திருத்தத்தினை மேற்கொண்டது நெகிழ்வான தருணம் ஐயா.

   Delete
 6. உங்கள் களப்பணி ஆச்சரியம் தருகிறது. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்...

  ReplyDelete
 7. அருமையான பதிவு
  தங்கள் தேடல் தொடர
  வரலாறு வெளிவர
  வாழ்த்து

  ReplyDelete

Post a Comment