பௌத்த சுவட்டைத் தேடி : திருநாகேஸ்வரம்

டிசம்பர் 1996
1993இல் பௌத்த ஆய்விற்குப் பதிவு செய்த முதல் பௌத்தம் தொடர்பான விவரங்களைக் குறித்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.  அப்போது, தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்  நண்பர் திரு நா. ராமகிருட்டிணன் (சிறப்பு நிலைத் தட்டச்சர்) திருநாகேஸ்வரம்- திருவிடைமருதூர் அருகே சன்னாபுரம் என்ற ஊருக்கு அருகில் புத்தர் சிலை உள்ளதாகக் கூறிக்கொள்கிறார்கள் என்றும், திருநாகேஸ்வரம் ராகுஸ்தலம் எனப்படும் கோயிலில் நான்கைந்து புத்தர் சிலைகளோ, சமணர் சிலையோ இருப்பதாகக்  கூறிக்கொள்கிறார்கள் என்றும் கூறியிருந்தார். சன்னாபுரம் சென்று சிலைகளைத் தேடினேன். எங்கும் சிலை இல்லை. சமணபுரம் என்பது சன்னாபுரம் ஆகிவிட்டது என்று அப்பகுதியில் கூறினர். போதிய நேரமின்மையால் திருநாகேஸ்வரம் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை.

 ஆகஸ்டு 1998
காலை மன்னார்குடிக்கு சமணக்கோயிலுக்குப் பயணித்தேன். அங்கிருந்த புத்தர் சிலையைப் பார்க்கச் சென்றபோது திரு ஜெ.சந்திரமோகன் அறிமுகமானார். அவர், கூறிய செய்திகளில் ஒன்று திருநாகேஸ்வரம் சிவன் கோயிலில் அம்மன் சன்னதியில் சமணர் சிலை உள்ளது என்பதாகும்.  தகவலை உறுதி செய்துகொண்டேன்.
திருநாகேஸ்வரம் செண்பகராண்யேஸ்வரர் கோயில் வளாகம்

1998இல் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம் (இரண்டாம் பகுதி கி.பி.900-1300) என்ற நூலில் திருநாகேஸ்வரம் கோயிலில் அம்மன் கோயில் திருசசுற்றின் பின்புறம், அமர்ந்த நிலையிலுள்ள புத்தர் சிற்பங்கள் காணப்படுகின்றன என்ற குறிப்பினைக் கண்டேன். 

செண்பகராண்யேஸ்வரர் கோயில் வளாகத்தில்
 பிப்ரவரி 1999
இடையில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குக் களப்பணி சென்றபோது தமிழகத்தில் உள்ள புத்தர் சிலைகளின் பட்டியலையும், புகைப்படங்களையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. அதில் உள்ள புகைப்படங்களில் ஒன்றில் திருநாகேஸ்வரம் செண்பகரன்யேஸ்வரர் கோயிலில் புத்தர் சிலை என்ற பதிவினைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. மற்ற புத்தர் சிலைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அது புத்தர் சிலையாகத் தெரியவில்லை.

மே 2010
நண்பர் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களுடன் களப்பணி மேற்கொண்டபோது திருநாகேஸ்வரம் சென்றேன். அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் இரு சிலைகளைக் காணமுடிந்தது. மேம்போக்காகப் பார்க்கும்போது இரண்டும் சமணர் சிலைகளைப் போல இருந்தது. உடன் வந்த அவர், ஒன்று புத்தர் சிலை என்றும், மற்றொன்று சமணர் சிலை என்றும் கூறினார். எனக்கும் அவ்வாறே தோன்றியது. இருப்பினும் சோழ நாட்டில் உள்ள பிற புத்தர் சிலைகளைப் போல அந்த சிலை காணப்படவில்லை.

மார்ச் 2012
மறுபடியும் அக்கோயிலுக்கு ஒரு முறை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது மறுபடியும் இரு சிலைகளையும் பார்த்தேன்.  களப்பணியாக இல்லாமல் சென்ற நிலையில் சிலையினை அளவெடுக்கச் சற்று சிரமப்பட்டேன்.
செண்பகராண்யேஸ்வரர் கோயில் அம்மன் சன்னதியின் திருச்சுற்றில்

இரண்டு சிலைகளைப் பார்த்தபோது வழக்கமாக என்னுள் காணப்படும் குழப்பம் ஆரம்பித்தது. ஏனெனில் இரண்டு சிலைகளும் சமண சிலைகளைப் போல இருந்தன. பல முறை பல நோக்கில் பார்த்துக் கொண்டிருந்தேன். கோயில் பிரகாரத்திலேயே நான் எடுத்துச்சென்ற பிற புத்தர் சிலைகளின் புகைப்படங்களையும் வைத்து ஒப்புநோக்கினேன்.

திருநாகேஸ்வரம்   சமணர் (2012),  புகைப்படம் பா.ஜம்புலிங்கம்

பல அறிஞர்கள் இச்சிலைகளை சமணர் சிலைகள் என்று கூறுவதை நான் அவர்களிடம் பேசும்போது அறிந்தேன். ஆங்காங்கே இது புத்தர் என்ற குறிப்புகளையும் கண்டுள்ளேன். ஆனால் உறுதி செய்யமுடியாமல் இருந்தேன்.

திருநாகேஸ்வரம் சமணர்  (2012),  புகைப்படம் பா.ஜம்புலிங்கம்

இரண்டும் சமணர், இரண்டில் ஒன்று புத்தர் என்று தோன்றிய நிலையில் தெளிவின்றி அப்பயணத்தை நிறைவு செய்தேன். 

அடுத்தடுத்து மேற்கொண்ட களப்பணிகளின்போது, பிற புத்தர் சிலைகளையும், சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் பார்த்த அனுபவம் இவ்விரு சிலைகளும்  புத்தர் இல்லை என்பதை உணர்த்தியதோடு இவை சமண தீர்த்தங்கரர் சிலைகளாக இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் தெளிவுபடுத்தின.  

நன்றி : திரு நா.ராமகிருட்டிணன், திரு ஜெ.சந்திரமோகன், நண்பர் திரு தில்லை கோவிந்தராஜன், பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

30.10.2021இல் மேம்படுத்தப்பட்டது 

Comments

  1. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    சிறப்பான தொகுப்பு பகிர்வுக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  4. தங்கள் பவுத்தத் தேடல் ஆச்சர்யம் அளிக்கிறது ஐயா! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  5. ஐயா வணக்கம். நான்காண்டுகளில், 66பதிவுகள் என்பது குறைவே. எனினும் ஒவ்வொன்றும் ஆய்வு நோக்கில் உள்ள பதிவுகள் என்பதை அறிந்து பாராட்டுகிறேன். இன்னும் பலநூறு பதிவுகள் கண்டு சிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளையும் சேர்த்து வணங்குகிறேன்.

    ReplyDelete
  6. முனைவர் அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப்
    புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.

    இது புத்தர் சிலை, இது சமணர் சிலை என்று எதனை வைத்து வேறுபாடு அறிவீர்கள்?


    ReplyDelete
    Replies
    1. தலையில் தீச்சுடர், மேலாடை, நெற்றியில் திலகக்குறி, கையில் தர்மசக்கரக்குறி போன்றவை புத்தர் சிலைகளில் காணப்படும். இதுபற்றி முன்னர் ஒரு பதிவில் விவாதித்துள்ளோம். எது எப்படியிருப்பினும் நேரில் பார்த்து உறுதி செய்வதே நலம்.

      Delete
  7. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  8. 2015 ஆம் ஆண்டில் தங்கள் பயணம் எப்போதும் போல் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  9. கரந்தை சரவணன்02 January, 2015

    அன்பின் அய்யாவிற்கு, சோழநாட்டில் பௌத்தம் தொடர் இன்னும் பல ஆண்டுகள் நீடிக்க வாழ்த்துக்கள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,
    அரிய தகவல்கள் தரும் பதிவு..உங்கள் ஆய்வு வெற்றிபெற வாழ்த்துகள்! பகிர்விற்கு நன்றி ஐயா

    ReplyDelete
  11. முன்பே ஒருமுறை பௌத்த சமண சிலைகளை எப்படி அடையாளம் காண்கிறீர்கள் என்று கேட்ட நினைவு. நம் ஹிந்துக் கடவுள்களுக்கு பல அடையாளங்கள் உண்டு. பெரும்பாலான புத்த சமண சிலைகள் ஒரே மாதிரி காணப்படும் சமண சிலைகளுள் இத்தனையாவது தீர்த்தங்கரர் என்று பாகு படுத்துவது இன்னும் சிரமம் உங்கள் களப் பணி சிரமம் வாய்ந்ததே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. இவ்வருடத்தின் முதல் பதிவு திருநாகேஸ்வரம் சிறப்புடன் தொடங்கியமைக்கு இறைவன் திருவருள் தொடர்ந்து கிடைக்கட்டும்

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

    நண்பரே எமது புதிய பதிவு - எமனேஸ்வரம், எழுத்தாளர் எமகண்டன் - இது டேஷ்போர்டில் வரவில்லை

    தங்களது இந்த தளத்தில் என்னை இணைத்துக்கொண்டேன் இனி இதுவும் தப்பாது என் விழிகளுக்கு.....

    நன்றி
    கில்லர்ஜி

    ReplyDelete
  13. அன்பின் ஜம்புலிங்கம்

    தங்களின் அரிய பணீ பாராட்டுகுரியது.

    அத்தனை இடங்களூக்கும் சென்று ஆய்வுகள் செய்து - ஆவனப் படுத்துவது சிறந்த செயல் - பாராட்டுக்குரியது -

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  14. வழக்கொழிந்து போன சமயங்களின் ஆதாரங்களை அடையாளம் காண்பதில் உள்ள சிரமங்களை அறிந்தேன்.

    ReplyDelete
  15. பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருவதிகை வீரட்டானேச்சரர் கோயிலிலும் ஒரு புத்தர் சிலை, கோயிலுக்கு வெளியே எந்த விதக் கட்டிடமும் இல்லாமல், சிறியதொரு தகரக் கூரையின் கீழ் உள்ளது. அந்த புத்தர் சிலை, இலங்கையிலுள்ள புத்தர் சிலை போலவேயுள்ளதால், சமணர் சிலையாக இருக்க முடியாதென நம்புகிறேன். ஆனால் திருவதிகையில் தான் திருநாவுக்கரசர் சூலை நோய் நீங்கி சமணத்திலிருந்து சைவத்துக்கு மாறினார். ஆகவே, திருவதிகைக்கும் சமணத்துக்கும் கூட தொடர்பிருக்கலாம். திருவதிகை வீரட்டானேச்சரம் பழமையான கோயில் என்பதற்கு அறிகுறியாக கருவறைக்கு மேலேயுள்ள விமானமும், கோபுரம் போலவே பெரிதாக, உயரமாக உள்ளது. ஆகவே அந்தக் கோயில் கூட முற்காலத்தில் சமண அல்லது பெளத்த கோயிலாக இருந்திருக்கலாம் என்று அங்கு போகும் போதெல்லாம் நினைத்துக் கொள்வதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. அது புத்தர்சிலையே. நான் பார்த்துள்ளேன். நன்றி.

      Delete
  16. அன்பின் ஐயா,

    தங்கள் பணி மிக சிறந்தது. தொடர்ந்துப் படித்து வருகிறேன் ஐயா.

    இரண்டு சிலைகளும் சமண சிலைகள்போல் தான் தெரிகின்றன. புகைப்படத்தைப் பெரிதுப்படுத்திப் பார்த்தாலும், ஆடைகள் ஏதும் எனக்குத் தெரியவில்லை ஐயா. அதனால் அவைகள் சமண சிற்பங்கள் என்றுத் தெரிகிறது.

    மேலும் சில சமண சிற்பத்தகவல்களுக்கு யான் எழுதியக் கட்டுரைப் பயன்படும் என்று நினைக்கிறேன் ஐயா.

    http://banukumar_r.blogspot.com/2011/09/blog-post.html

    http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-01-20-30-58/2011-09-03-07-33-46


    இரா.பானுகுமார்,
    பெங்களூரு

    ReplyDelete
  17. தங்கள் மறுமொழிக்கு நன்றி. இரண்டும் சமணரா, இரண்டில் ஒன்று புத்தரா என்ற நிலை ஒரு புறமும், ஒன்று புத்தர் என்ற நிலை ஒரு புறமும் மனதில் பதிந்துள்ளது. தொடர் களப்பணிகளும், வாசிப்பும் எனக்குத் தெளிவைத் தரும் என்ற நம்பிக்கையில் கோயிலை விட்டுக் கிளம்பினேன் என்ற சொற்றொடர்கள் மூலமாக எனது நிலையைத் தாங்கள் புரிந்துகொள்ளலாம். இப்பதிவில் ஒரு சிலையில் புத்தர் என்று குறிப்பிடக் காரணம் அச்சிலையில் ஆடை இருப்பதை நேரில் காணமுடிந்ததே. மறுபடியும் அங்கு செல்லவுள்ளேன். விரைவில் தெளிவான விடை காண்பேன். நன்றி.

    ReplyDelete
  18. வணக்கம் சகோதரரே!

    அனைத்தும் அரிய தகவல்களை தரும் பதிவுகளாக உள்ளது.
    அனைத்தையும் நிதானமாக படிக்கிறேன்.
    என் தளம் வந்து கருத்திட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    தங்களுக்கும், தங்கள் உற்றார், உறவினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்….

    நன்றி கலந்த நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  19. தங்களின் தகவலுக்கு நன்றி ஐயா......!!

    ReplyDelete
  20. P. I. Arasu (மின்னஞ்சல் arasutor@hotmail.com வழியாக) : திரு. Jambulingam அவர்களுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    அக்டோபர் 2014ல் "ஆசிய ஜோதி" யை பற்றிய உங்கள பதிவை படித்த பின் துவங்கியது:"ஆசிய ஜோதி"யை இணையதளத்தில் சொற்பொருளுடன் படிக்க: bautham.net/asiajothi
    நன்றி
    அரசு

    ReplyDelete

Post a Comment