தம்ம பதம் : ப.ராமஸ்வாமி

புத்த பெருமான் அருளிய அறநெறிகளைக் கொண்டது தம்ம பதம். பௌத்தத் திருமுறைகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்நூல் ப.இராமஸ்வாமி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இரட்டைச் செய்யுட்கள், கருத்துடைமை, சிந்தனை, புஷ்பங்கள், பேதை, ஞானி, முனிவர், ஆயிரம், தீயொழுக்கம், தண்டனை, முதுமை, ஆன்மா, உலகம், புத்தர், களிப்பு, இன்பம், கோபம், குற்றம், சான்றோர், மார்க்கம், பலகை, நரகம், யானை, அவா பிக்கு, பிராமணன் என்ற 26 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.  இந்நூலில் உள்ள அறநெறிக்கருத்துகள் சிலவற்றைப் பார்ப்போம்.  
இரட்டைச் செய்யுள்:(ஒவ்வொரு கருத்தும் இரண்டு சூத்திரங்களால் விளக்கப் பெற்றது)
கூரை செம்மையாக வேயப்படாத வீட்டினுள் மழை நீர் பாய்வதுபோல் நன்னெறிப் பயிற்சியில்லாத மனத்தினுள் ஆசைகள் புகுந்துவிடுகின்றன. (13)
கூரை செம்மையாக வேயப்பட்ட வீட்டினுள் மழை நீர் இறங்காததுபோல் நன்னெறிப் பயிற்சியுள்ள மனத்தினுள் ஆசைகள் நுழைய முடியா. (14)

பேதை: 
எந்தக் காரியத்தைச் செய்தால் பின்னால் மனம் இன்பமடையுமோ, எதன் பயனை உள்ளக்களிப்போடு அனுபவிக்க வேண்டியிருக்குமோ, அதுவே நற்செயல். (10) 

ஞானி: 
நன்மக்கள் எதிலும் பற்றுக் கொள்வதில்லை; இன்பங்களை விரும்பி இரைச்சல் போடுவதில்லை. சுகமோ, துக்கமோ வந்தால், ஞானிகள் எழுச்சியடைவதுமில்லைஅயர்வு கொள்வதுமில்லை. (3) 

ஆயிரம்:(சூத்திரங்களில் ஆயிரம் என்ற சொல் பல முறை வருவதால் அவ்வாறே தலைப்பு அமைந்தது)
மாதந்தோறும் ஆயிரம் யாகங்களாக நூறு வருடம் யாகம் செய்பவன் தம்மைத் தாமே அடக்கிக் கொண்ட ஒருவரை ஒரு கணம் வணங்குதல் அந்த நூறு வருட வேள்வியைவிட மேலானது. (5)

தண்டனை: 
எவரிடத்தும் கடுஞ்சொல் பேசாதே. அதே முறையில் மற்றவர்களும் பதிலுரைப்பார்கள். கோபமான பேச்சு துக்கமளிப்பதால், பதில் பேச்சு உன்னைத் தாக்கும். (5) 

முதுமை: 
அஸ்திகளைக் கொண்டு ஒரு மாளிகை கட்டி ஊனும் உதிரமும் கலந்த சாந்து பூசப் பட்டிருக்கிறது. இதிலே வசிக்கின்றன முதுமையும், மரணமும், கர்வமும், கபடமும். (5)

ஆன்மா: 
தீமை பயக்கும் தீவினைகளைச் செய்தல் எளிது. நன்மை பயக்கும் நல்வினையைச் செய்தலே மிகவும் கஷ்டமாகும். (7)  

புத்தர்: 
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்;
அரிது அரிது மானிட வாழ்க்கை;
அரிது அரிது நல்லறம் கேட்டல்;
அரிது அரிது புத்த நிலை அடைதல். (4) 

இன்பம்: 
ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது;
ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது;
ஆசையற்றவனுக்குச் சோகமில்லை; - பயம்தான் ஏது? (4)  

கோபம்: 
மனத்தில் வரும் கோபத்தை அடக்கிக் காக்கவும். மன அடக்கத்தில் பழக வேண்டும். மனத்தில் உண்டாகும் தீமையை அழித்து, நல்ல ஒழுக்கத்தைப் பேணி வரவும். (12)  

குற்றம்: 
இரும்பிலிருந்து துரு தோன்றினாலும், அதை அது அரித்துவிடுகிறது. அதுபோலவே (அற நெறி) பிறழ்ந்தவனை அவனுடைய கருமங்களே தீய கதியில் கொண்டு சேர்க்கின்றன. (5) 

அவா: 
இவ்வுலகில் எவன் அடக்க அரிதான இந்தக் கொடிய அவாவை அடக்கி வெல்கிறானோ, அவனுடைய சோகங்கள், தாமரையிலையில் நீர்த்துளிகள் ஒட்டாமல் சிதறுவதுபோல் உதிர்ந்து ஒழிகின்றன. (2)

நூல் : தம்ம பதம் (புத்தர் பெருமான் அருளிய அறநெறி) 
தமிழாக்கம் : ப.ராமஸ்வாமி
பதிப்பகம் : முல்லை நிலையம், 9, பாரதி நகர், முதல் தெரு, தி.நகர், சென்னை 600 017
மறுபதிப்பு பதிப்பு : 2000

1/6/206  மதியம் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. சிறப்பான கருத்துகளை உள்ளடக்கிய புத்தகமாகத் தெரிகிறது. படிக்க வேண்டும் எனத் தூண்டிய பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  2. நூல் விமர்சனம் படிக்க ஆவலை ஏற்படுத்துகிறது ஐயா நன்றி
    தம வரவில்லை ஐயா

    ReplyDelete
  3. தான் பெற்ற பயனை பிறருக்கும் பயன்பெற அறிய வைத்த முனைவருக்கு நன்றி
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  4. எக்காலத்தும் பொருந்தும் கருத்துக்கள்

    ReplyDelete

Post a Comment