பௌத்த சுவட்டைத் தேடி : விக்ரமம்

1999இல் பார்த்த ஒரு புத்தர் சிலையை மறுபடியும் பார்க்கச் சென்றபோது கிடைத்த அனுபவங்களைக் காண தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விக்ரமம் செல்வோம், வாருங்கள்.

29 ஜனவரி 1999
விக்ரமம், பள்ளிவிருத்தி, பூதமங்கலம் களப்பணி சென்றபோது விக்ரமம் களப்பணி மேற்கொண்டேன். தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை-மதுக்கூர் பேருந்தில் சென்று, மதுக்கூரிலிருந்து ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு இரண்டு கிமீ தொலைவில் உள்ள விக்ரமம் சென்றேன். விசாரித்து, புத்தர் சிலை இருந்த இடத்திற்குச் சென்று, புத்தரைப் பார்த்தேன். போதிய நேரமின்மையால் உரிய விவரங்களைச் சேகரிக்கமுடியவில்லை.

13 பிப்ரவரி 1999
மறுபடியும் விக்ரமம். தோப்பில் இருந்த புத்தரைக் காண திரு சண்முகவேல் உதவி செய்தார். இச்சிலையை செட்டியார் சிலை என்றும், சிலை இருக்கும் இடத்தை புத்தடி செட்டிக்கொல்லை என்றும் கூறினார். அவரது தாயார் திருமதி பாக்கியத்தம்மாள் (72) அந்த புத்தரைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்.  "வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கலின்போது தேங்காய் உடைத்து சாம்பிராணி போடுவோம். முதலில் எண்ணெய் எடுக்கும்போது புத்தருக்கு சாத்திவிட்டே பயன்படுத்துவோம்...அவ்வப்போது வேண்டுதல் செய்பவர்கள் தேங்காய் உடைத்து நிவர்த்திக்கடனை நிறைவேற்றுவர். புதிய வேலை ஆரம்பிக்கும்போது இந்த புத்தருக்கு மாலை போட்டுவிட்டு ஆரம்பிப்பர். எனக்கு நல்ல நினைவு. 60 வருடங்களுக்கு முன் இங்கே மூட்டைப்பூச்சி தொல்லை அதிகமாக இருந்தது. புத்தருக்கு பூசை செய்தால் மூட்டைப்பூச்சித் தொல்லை குறையும் என்று கூறி பூசை செய்வர். "  


விக்ரமம் புத்தர் (1999)
அவர்கள் இருவருக்கும் நன்றி கூறிவிட்டுத் திரும்பும்போது அருகில் வேறு ஏதாவது புத்தர் சிலை இருக்கிறதா என்று விசாரித்துக்கொண்டே வந்தேன். அப்போது செங்கங்காடு என்னும் இடத்தில் ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கூறினர். சென்றுபார்த்தபோது சமணர் என்பதை அறிந்தேன். அந்த சிலையைப் பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம். 

7 ஜுலை 2009
விக்ரமத்தைச் சேர்ந்த முனைவர் சிவசுப்பிரமணியன் (உதவிப்பேராசிரியர், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் மூலிகை அறிவியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்) இச்சிலை நன்கு பராமரிக்கப்பட்டு வருவதாகவும், முன்பிருந்த இடத்திலிருந்து மாறி தற்போது அருகில் மதுக்கூர்-காடந்தங்குடி சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

4 ஜனவரி 2015
நான் பார்த்த புத்தர் சிலைகளைப் பார்க்கவேண்டும் என்று பல நண்பர்களும், அறிஞர்களும் என்னுடன் கூறியுள்ளனர். அவ்வாறான நண்பர்களில் ஒருவர் வலைப்பூவில் அருமையான கட்டுரைகளை எழுதி சாதனை படைத்து வருகின்ற  திரு திரு கரந்தை ஜெயக்குமார்.  வாய்ப்பு கிடைக்கும்போது அழைத்துச்செல்வதாக அவரிடம் கூறியிருந்தேன். அதற்கான வாய்ப்பு ஜனவரி 2015இல் அமைந்தது. தஞ்சாவூருக்கு ஒரு கருத்தரங்கிற்காக வந்த வரலாற்றறிஞர் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்கள் இப்பகுதியில் உள்ள புத்தர் சிலையைப் பார்க்கவேண்டும் என்று கூறினார். எனது பௌத்த ஆய்வின்போது கடலூர் மாவட்டத்தில் புத்தர் சிலைகளை இவரது துணையுடன் நான் பார்த்துள்ளேன். 15 ஆண்டுகளுக்கு முன் நான் முதன்முதலாகப் பார்த்த புத்தர் சிலையை தற்போது மறுபடியும் பார்ப்பதற்காக நாங்கள் மூவரும் கிளம்பினோம்.  அதற்கு முன்பாக புள்ளமங்கை கோயிலுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களைப் பார்க்க அவர் விரும்பவே, இதற்கு முன்னர் நான் பல முறை புள்ளமங்கை கோயிலுக்குச் சென்றோம். புள்ளமங்கையின் கலை அழகை ரசித்துவிட்டு அங்கிருந்து விக்ரமம் சென்றோம்.

செல்வதற்கு முன்பாக முனைவர் சிவசுப்பிரமணியம் அவர்களைத் தொடர்பு கொண்டபோது சிலை இருக்கும் இடத்தை உறுதி செய்து, அவரது சகோதரர் திரு சண்முகவேல் அங்கே இருப்பதாகவும் சிலையைப் பார்க்க உதவுவார் என்றும் கூறியிருந்தார். விக்ரமம் சென்றதும் அவரைத் தொடர்பு கொண்டோம். சிலை இருக்கும் இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். தோப்பில் அமைதியாக அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்த புத்தரைக் கண்டோம். கடந்த முறை நான் வந்ததை நினைவுகூர்ந்து மறுபடியும் வந்தமைக்குப் பாராட்டினார். வழக்கம்போல் புத்தர் சிலைகளுக்குள்ள கூறுகளைக் கண்டோம்.  அவ்வபோது பலர் வந்து இந்த புத்தர் சிலையைப் பார்த்து செல்வதை அறிந்தோம்.
  
விக்ரமம் புத்தருடன்  பா.ஜம்புலிங்கம்  
விக்ரமம் புத்தர் (2015)
விக்ரமம் புத்தருடன் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி, பா.ஜம்புலிங்கம்  

விக்ரமம் புத்தருடன் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி, பா.ஜம்புலிங்கம், 
திரு சண்முகவேல்

15 வருடங்களுக்கு முன் பார்த்த புத்தர் சிலையை மறுபடியும் பார்த்த மன நிறைவுடன் அங்கிருந்து கிளம்பினோம்.

நன்றி
புத்தரைப் பற்றிய செய்தி (1999) கூறிய திருமதி பாக்கியத்தம்மாள்
களப்பணி வந்ததோடு புகைப்படங்கள் எடுத்து உதவிய திரு கரந்தை ஜெயக்குமார்
களப்பணியில் உடன் வந்த திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி 
தகவல் கூறிய முனைவர் சிவசுப்பிரமணியன்
இரு களப்பணியின்போதும் உதவிய திரு சண்முகவேல்


--------------------------------------------------------------------------------
உங்களுடன் பகிர்ந்துகொள்ள மற்றொரு மகிழ்ச்சியான செய்தி

தமிழ் விக்கிபீடியாவின் முதற்பக்கத்தில் பங்களிப்பாளர் அறிமுகம்
இன்று (நவம்பர் 1, 2015) முதல் என்னைப் பற்றிய பங்களிப்பாளர் அறிமுகம் தமிழ் விக்கிபீடியாவில் முதற்பக்கத்தில் வெளியாகிறது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த அறிமுகமானது தொடர்ந்து சில நாள்களுக்கு முதல் பக்கத்தில் காணப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கின்றேன். தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்கத் தொடங்கி 250 கட்டுரையை அண்மையில் நிறைவு செய்த நிலையில் இவ்வாறான ஒரு அறிமுகம் என்னை மென்மேலும் எழுத ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.
பங்களிப்பாளர்கள் பக்கத்தில் என்னைப் பற்றிய அறிமுகம்
--------------------------------------------------------------------------------

25 டிசம்பர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. அன்று விக்ரமம் நோக்கிப் பயணித்ததும் பார்த்ததும்
    மனக்கண்ணில் நிழலாடுகின்றன ஐயா
    புதியதோர் அனுவபத்தினை வழங்கியமைக்கு
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலும் தனியாகவே களப்பணி சென்ற நிலையில் இப்பயணத்தில் தாங்களும், திரு அனந்தபுரம் ஐயாவும் உடன் வந்தது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. தாங்கள் எடுத்த புகைப்படங்களே பதிவிற்கு உதவியமைக்காக தங்களுக்கு மறுபடியும் நன்றி.

      Delete
  2. தங்கள் ஆய்வு முயற்சிகள் தொடர வேண்டும்.
    புத்தரின் வழிகாட்டல் பெறுமதி வாய்ந்தவை
    அதனால் தான்,
    உலகில் பௌத்தத்தை விரும்புகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. முயற்சியினைத் தொடர்வேன். வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  3. தங்களின் ஆய்வு மிக அற்புதமானது. புத்தர் பற்றிய தகவல்களை தேடி தேடி கண்டடைவது மிகச் சிறப்பு. தங்களுடன் நண்பர் கரந்தையாரும் மேலும் சிறப்பான நிகழ்வு.
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தேடலைப் போலவே, இது ஒரு வித்தியாசமான தேடல். வருகைக்கு நன்றி.

      Delete
  4. காலகாலங்கள் கடந்து இருந்திறந்த ஒரு மரபின் சாட்சியாகப் புத்தர் மோனத்திருக்கிறார்.

    வாய்ப்பில்லாத எங்களைப் போன்றோர்க்கு நீங்கள் செய்யும் உதவி மிகப்பெரிது.

    தொடர்கிறேன் ஐயா.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பட்டம் பெறவேண்டும் என்பதற்காக அல்லாமல் ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்பிய நிலையில் எனது ஆய்வு தொடர்கிறது. வருகைக்கு நன்றி.

      Delete
  5. பார்க்கத் தூண்டுகிறது அய்யா.. படங்கள் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  6. கண்டெடுத்த போது எந்தளவு மனம் மகிழ்ச்சி அடையும் என்று நினைக்கும் போது மனம் பரவசப்படுகிறது ஐயா...

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. முதன்முதலில் பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லை என்பதே இல்லை. நன்றி.

      Delete
  7. பயண அனுபவங்கள் அருமை, படங்கள் அழகு.

    ReplyDelete
  8. முனைவர் அவர்களின் தேடுதல் மென்மேலும் வளர வாழ்த்துகள்
    தமிழ் மணம் 6

    ReplyDelete
  9. தங்களின் வாழ்த்துகளுடன் பயணம் தொடரும். நன்றி.

    ReplyDelete
  10. முனைவர் அவர்களுக்கு நன்றி. நீங்கள் பவுத்தம் சுவட்டினைத் தேடிப் போகும் இடங்களில் எல்லாம் சமண சமயம் சார்ந்த வரலாற்று அடையாளங்களையும் கண்டதாகச் சொல்லுகிறீர்கள். காரணம் நமது நாட்டு வரலாற்றில் பவுத்தமும் சமணமும் பின்னிப் பிணைந்து இருந்ததுதான். சமணத்துக்கென்று இனி ஒரு பயணம் செய்ய நேரம் இருக்காது. எனவே இதுவரை தாங்கள் கண்டறிந்த, சமணம் சார்ந்த சுவடுகளையும் எழுதவும். பவுத்தமும் சமணமும் குறித்த உங்களது ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய உங்களது நூல் ஒன்றினை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  11. சமணம் சார்ந்த பதிவுகளை சமண சுவட்டைத்தேடி என்ற தலைப்பில் கட்டுரைகளாக அவ்வப்போது எழுதிவருகிறேன். நூலுக்கான ஆயத்தப்பணிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன். தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் என் முயற்சி தொடரும். நன்றி.

    ReplyDelete
  12. அழகான எளிய தமிழில் விவரங்களோடு, படங்களோடு கூடிய கட்டுரை மிகவும் அருமை. பகிர்விற்கு நன்றி!
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  13. முனைவர் அவர்களுக்கு நன்றி. எனக்குள் படிக்கும் காலத்தில் இருந்து மனதில் இருக்கும் கேள்வி இது. ”ஒரு காலத்தில் தமிழகம் முழுதும், செல்வாக்கோடு இருந்த சமணமும் பவுத்தமும், முற்றிலும் அழிக்கப்பட்டது எப்படி?” ஒருநாளில் நடந்தது போல தெரியவில்லை. திட்டமிட்டு என்னென்ன செய்தார்கள், யார் செய்தார்கள் என்றும் முழுமையாகத் தெரியவில்லை. இதுபற்றிய பார்வை உங்களுக்கு இருப்பின் அதுபற்றியும் தனியே எழுதினால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் பேசும் பொருண்மை தொடர்பான பதிவுகளைப் பற்றி விரைவில் எழுதுவேன். நன்றி.

      Delete
  14. பௌத்தம் தொடர்பான உங்களது தேடல்கள் தொடருட்டும் அவை எங்களின் தேடல்களுக்கும் விடையளிக்கட்டும். தொடருங்கள் தொடர்கிறோம் வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. தேடல்கள் தொடரும், தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன். நன்றி.

      Delete
  15. இதுபோல் தங்கள் பயணமும் தேடலும் தொடர வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுடன் பயணத்தைத் தொடர்வேன். நன்றி.

      Delete
  16. பௌத்தம் தொடர்பான தங்களது ஆய்வுகள் தேடல்கள் உழைப்பு எங்களை பிரமிக்க வைக்கின்றது ஐயா. நாங்கள் நிறைய தெரிந்து கொள்ள முடிகின்றது ஐயா. பொன்னியின் செல்வன் படித்த போதும், நூலகத்தில் பண்டைய தமிழர் வாழ்க்கை குறித்து வாசித்த போதும், நம் தமிழகத்தில் ஒரு காலத்தில் சமணம், பௌத்தம் விரவிக் கிடந்ததாகத் தெரிகின்றது. அவர்கள் போதித்த உயிர்கொல்லாமையைத்தான் சைவமும், வைணவமும் எடுத்துக் கொண்டன என்றும் சொல்லப்படுகின்றது. அவர்களுக்குள் பிற தத்துவங்கள் குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு என்பதும் அறியப்படுகின்றது.

    தங்கள் தேடல்களும் ஆய்வுகளும் தொடர வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் பல தாக்கங்களை நாம் கண்டுள்ளோம் என்பதே உண்மை. தங்களின் வருகைக்கும், ஆழ்ந்த கருத்துக்கும் நன்றி. தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் தேடலும், ஆய்வும் தொடரும்.

      Delete
  17. உங்கள் ஆய்வுப்பணி மென்மேலும் சிறக்க அவர் அருள் புரியட்டும்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  18. பௌத்தம் சமணம் தொடர்பான தேடலுக்கும் உங்கள் விக்கிபீடியா கட்டுரைக்கும் வாழ்த்துகள் ஜம்பு சார்.

    புத்தரின் பல்வேறு உருவங்கள் மோனத்தை அழகான எடுத்துரைக்கின்றன. :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  19. அறிய தகவல்கள் நன்றி அய்யா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  20. அரிய தகவல் ஐயா.......உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்......

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  21. தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உரோமாபுரிப் பயணப் பதிவில் உங்களைக் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  22. தொடர்ந்த உங்கள் தேடலுக்கும் ஆய்வுக்கும், விக்கிபீடியா பங்களிப்பிற்கும் என் வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் சேவை தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் தேடலைத் தொடர்வேன். நன்றி.

      Delete
  23. //..புத்தருக்கு பூசை செய்தால் மூட்டைப்பூச்சித் தொல்லை குறையும் என்று கூறி பூசை செய்வர்...
    வரலாற்றை பதியமால் போனால் வாழ்க்கையில் என்ன நன்மை இருந்துவிட போகிறது. வாய்மொழியாக அந்த கிராமத்து பெண்மணி சொன்னதை இணையத்தில் பதிந்தது அருமை. உங்களது பதிவுகளை படிக்க வேண்டும் என்றிருந்தேன். தற்போதுதான் வாய்ப்பு கிடைத்தது. வலைப்பூவில் எழுதுவதைவிட விக்கிபிடீயாவில் எழுதுவது மாணவர்களிடம் எளிதில் சென்றடையும். நம் பெருமை உலகறிய செய்ய ஆங்கில விக்கிபிடீயாவிலும் எழுத தொடங்கியதற்கு மிக்க நன்றி. உங்களைப் பார்த்து நிறைய கற்க வேண்டும். என்றாவது ஒருநாள் நாங்களும் விக்கிபிடீயாவில் எழுத ஆரம்பித்தால், அதற்கான ஊக்கம் உங்களது இணையப் பணியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    ReplyDelete
  24. முந்தைய களப்பணியில் (1999) நான் சந்தித்த திருமதி பாக்கியத்தம்மாள் (வயது 72) இயற்கையெய்திவிட்டதாக இரண்டாவது முறை களப்பணியின்போது அறிந்தேன். எனது முதல் களப்பணியின்போது என்னை உபசரித்து நன்கு பேசினார். இவ்வகையில் மூத்தவர்கள் தரும் தகவல்கள் முக்கியமானவையாக அமையும். அவரைச் சந்தித்ததை அப்போது நினைவுகூர்ந்தேன். தகவல்களை உள்ளது உள்ளபடி பதிந்தால் பின்னர் அவை வரலாற்றுக்குப் பேருதவியாக இருக்கும். தங்களின் ஆர்வம் கண்டு மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
  25. 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே இடத்தில் அதே சிலை இருந்ததா? களப்பணியின் போது கண்டெடுக்கப்படும் சிலைகளைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன/ ம்யூசியம் போன்ற இடங்களுக்குக் கொண்டு செல்லப் படுவதில்லையா. தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்கள் நன்கு கவனித்துக் கொள்கின்றனர். சில அருங்காட்சியகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஆய்வாளர் என்ற நிலையில் வரலாற்றுக்கு என்னால் ஆன பங்களிப்பினைச் செய்து வருகிறேன். நன்றி

      Delete
  26. நானும் உங்களோடு வந்து புத்தரை தரிசித்தது போல உண்ர்வு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  27. புத்தர் சிலைகள் பற்றிய தங்கள் ஆய்வும் சிரத்தையும் பாராட்டுக்குரியவை. அவற்றைப் பற்றிய தங்களுடைய ஆய்வேடுகள் பாதுகாக்கப்படவேண்டியவை. தங்கள் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா. விக்கிபீடியாவில் முதல் பக்கத்தில் தங்களுக்கான அங்கீகாரம் மகிழ்வளிக்கிறது. மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. தங்களின் வருகையும் கருத்தும் களத்தில் நான் எதிர்கொண்ட அனுபவங்களை மறுபடியும் நினைவூட் டுகின்றன. நன்றி.

    ReplyDelete
  29. aya vanakam vaalthukal. pudhar maru privi patri thagaval iruka.

    ReplyDelete
  30. தொடர்ந்து பதிவுகளை எழுதுவேன். தங்களது எண்ணம் பூர்த்தியாகும். நன்றி.

    ReplyDelete
  31. உங்கள் மூலம் நாங்களும் விஷயங்கள் அறிந்து கொண்டோம். நன்றி ஐயா. தொடருங்கள். நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
  32. வருகைக்கு நன்றி. களப்பயணம் தொடரும்.

    ReplyDelete
  33. Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  34. உங்கள் களப்பணி மிகப் பெரிது ஐயா.. நம் வரலாற்றை அறிய மிகவும் பயன்படும் உங்கள் பதிவுகள் நூலாக வந்தால் இன்னும் பலர் அறிவர்.. அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா. ஊர் ஊராகப் பயணம் செய்து தாங்கள் செய்யும் பணி கடினம்தானே... இருந்தும் தளராமல் இத்தனை ஆண்டுகளாய்ச் செய்து வரும் உங்களுக்கு வணக்கங்கள் .. மனம் நிறைந்த நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. நூலாக்கப்பணிக்கான முயற்சியில் இறங்கியுள்ளேன். மேலும் சில நுணுக்கமான செய்திகளை உறுதி செய்வதால் நூலாக்கப்பணியில் தாமதம். தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  35. தங்கள் பணி மிகப்பெரிது ஐயா,

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தங்களைப் போன்றோரின் வாழ்த்துகளுடன் தொடர்வேன்.

      Delete
  36. நல்ல பயனுள்ள பதிவு
    http:// kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  37. நல்ல பயனுள்ள பதிவு
    http:// kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  38. விக்ரமம் கிராமத்தில் இருக்கும் புத்தர் சிலை பற்றி தகவல்களை வெளியிட்டுள்ளீர்கள் தாங்களுக்கு விக்ரமம் கிராம மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் .
    அந்த சிலையை பாதுகாக்க வேண்டியது ஊர் மக்களின் கடமை .
    அன்புடன்
    குரு ஞானவேல்
    விக்ரமம்

    ReplyDelete
  39. உங்கள் வலைத்தளத்தில் வரும் தகவல்கள் அனைத்தும் என் ஆய்வுக்கு முன்னத்தி ஏர். நன்றி!.

    ReplyDelete

Post a Comment