Friday, 27 February 2015

சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்

இன்றைய தி இந்து (27.2.2015) நாளிதழில் மீசை வைத்த புத்தர், சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம் என்ற தலைப்பிலான இக்கட்டுரை வெளியாகியுள்ளது. இக்கட்டுரையை வெளியிட்ட தி இந்து நாளிதழுக்கு நன்றி.

என் ஆய்வில் துணை நிற்கும் எனது நண்பர்கள், அறிஞர்கள், தமிழ்ப்பல்கலைக்கழக நண்பர்கள் அனைவரையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.


சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்!
புத்தர் சிலைகளைத் தேடத் தொடங்கியபோது தெரிய வில்லை, அந்த ஆய்வு இந்த அளவுக்கு என் வாழ்க்கையை அர்த்தபூர்வமாக்கும் என்பது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நீளும் ஒரு பயணம்! வயற்காடுகள், ஆற்றங்கரைகள், இன்றைய நவீனத்தின் வெளிச்சம் அவ்வளவாகப் படாத கிராமங்கள் என்று சோழநாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் பயணித்திருக்கிறேன். அந்தப் பயணத்தின் விளைவாகக் கண்டுபிடித்தவைதான் 65 புத்தர் சிலைகள்.
எதிர்கொண்ட இனிய அனுபவங்கள் மட்டுமல்ல, எத்தனையோ தோல்விகளும் ஏமாற்றங்களும் அலைச் சல்களும் சேர்ந்து இந்தக் கண்டுபிடிப்புகளை எனக்கு அவ்வளவு முக்கியமாக ஆக்குகின்றன. புத்தர் சிலை களைக் கண்டுகொண்ட தருணங்களைப் போலவே புத்தர் சிலைகள் என்று நம்பப்பட்ட சிலைகள் புத்தர் சிலைகள் அல்ல என்று கண்டறிந்த தருணங்களும் முக்கிய மானவை.

தொடங்கிய இடம்
1993-ல் பௌத்தம் தொடர்பான ஆய்வில் கால்பதித்தபோது, ஆய்வுகள்தானே சர்வசாதாரணமாக முடித்துவிடலாம் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. இலக்கியச் செய்திகளையும், தத்துவக் கருத்துகளையும் ஒருங்கிணைத்து நிறைவுசெய்துவிடலாம் என்ற அசட்டுத் துணிச்சலுடன் களத்தில் இறங்கிய பின்னர்தான் சிக்கல்களை உணர முடிந்தது. ‘தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம்’ என்பதுதான் என்னுடைய ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்துக்கான தலைப்பு. தொடர்ந்து எல்லை விரிவானது. இறுதியில் ‘சோழநாட்டில் பௌத்தம்’ என்ற தலைப்பை முனைவர் பட்டத்துக்குத் தேர்வு செய்தேன். ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பை எனது ஆய்வுக்கான எல்லையாக முடிவுசெய்துகொண்டேன். களப்பணியை அடிப்படை யாகக் கொண்டு ஆய்வை மேற்கொள்ளலாம் என்று குடவாயில் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட அறிஞர்கள் பலர் தெளிவுபடுத்தினார்கள்.


விகாரைகள்
தமிழகத்தில் காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக சோழநாட்டில்தான் பௌத்தத்தின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கிறது. பூம்புகாரிலும் நாகப்பட்டினத்திலும் புத்த விகாரைகள் இருந்ததாகக் கூறப்பட்டாலும், அதற் கான எச்சங்களைத் தற்போது பூம்புகாரில் மட்டுமே காண முடியும். எனினும், தமிழகத்தின் பல இடங்களில் புத்தருக்கு வழிபாடு நடைபெற்றுவருவது எனது களப்பணியின்போது கிடைத்த ஆச்சரியங்களுள் ஒன்று.

தேடல் வேட்டையில் இறங்கும் முன், அதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் கற்சிலைகளைப் பற்றிய குறிப்புகளைப் பார்த்து, அந்தச் சிலைகள் சம்பந்தப்பட்ட இடங்களில் இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்துகொண்டேன். தேடலைத் தொடங்கிய பின், பல புதிய செய்திகளும் சிலைகளும் திசைகள்தோறும் கிடைத்தன. கற்சிலைகளைத் தவிர, நாகப்பட்டினத்தில் புத்த விகாரை இருந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புத்த செப்புத் திருமேனிகள் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதை அறியமுடிந்தது.

புத்தர் வேறு, தீர்த்தங்கரர் வேறு!
ஆரம்பத்தில் புத்தர் சிலைக்கும் சமண தீர்த்தங்கரர் சிலைக்குமே வேறுபாடு தெரியாத நிலைதான். தொடர்ந்து மேற்கொண்ட களப்பணியின்போது வேறுபாடுகள் தெளி வாகத் தெரிய ஆரம்பித்தன. களப்பகுதியில் உள்ள புத்தர் கற்சிலைகளில் பெரும்பாலானவை அமர்ந்த நிலையில் தியானக் கோலத்தில் உள்ளன. நின்ற நிலையில் உள்ள சிலைகள் மிகக் குறைவே. கிடந்த கோலத்திலோ புத்தர் கற்சிலைகள் சோழநாட்டில் காணப்படவில்லை. மயிலை சீனி. வேங்கடசாமி ‘பௌத்தமும் தமிழும்’என்ற நூலில், காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில், கிடந்த நிலையில் ஒரு புத்தர் சிலை இருந்ததைப் படத்துடன் குறிப்பிட்டிருந்தார். எனது களமாக இல்லாவிட்டாலும் பரிநிர்வாண நிலையில் இருந்த அந்த புத்தரைப் பார்க்க காஞ்சிபுரம் சென்றபோது எனக்கு ஏமாற்றமே காத்திருந்தது. தமிழகத்தின் ஒரே பரிநிர்வாண புத்தரை அங்கு காண முடியவில்லை!

புத்தர் சிலைகளில் பெரும்பாலும் தலையில் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர் வடிவில் முடி, நீண்டு தொங்கிய காதுகள், உதட்டில் புன்னகை, சற்றே மூடிய கண்கள், பரந்த மார்பு, திரண்ட தோள்கள், கையில் தர்மசக்கரக்குறி, நெற்றியில் திலகக்குறி, மார்பில் மேலாடை, இடுப்பில் ஆடை போன்ற பொதுக் கூறுகள் காணப்படும். இந்த அடையாளங்கள் புத்தர் சிலைக ளுக்கு மிகவும் முக்கியமானவை.

மீசை வைத்த புத்தர்!
என்னுடைய களப்பணியில் நான் கண்டுபிடித்த சிலைகள் மிகவும் ஆச்சரியமூட்டுபவை. திருச்சி மாவட்டத்தில் மங்கலம் என்னும் ஊரில் மீசையுடன் இருந்த ஒரு புத்தர் சிலையைக் கண்டுபிடித்தேன். இது போன்ற ஒரு புத்தர் சிலையைத் தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியவில்லை. புத்தர் சிலைகளுக்குரிய எல்லாக் கூறுகளும் இருந்தன. கூடுதலாக மீசையும்! மன்னர் என்று குறிப்பதற்காகவோ, வீரத்தைக் குறிப்பதற் காகவோ, சிற்பி தனது ஆசைக்காகவோ இதனை வைத்தி ருக்கலாம். முதலில் பல அறிஞர்களும் ஆய்வாளர்களும் இதனை நம்பவில்லை. நேரில் பார்த்த பின்னர்தான் ஏற்றுக் கொண்டார்கள். நாம் நினைப்பதைவிட மகத்தான ஆச்சரியங்களைக் களமும் காலமும் ஒளித்துவைத்தி ருக்கும் என்பதற்கு ஓர் உதாரணம் இது.

கும்பகோணம் பகவர்
கும்பகோணம் பகவ விநாயகர் கோயிலில் ஒரு புத்தர் சிலை உள்ளதாக மயிலை சீனி. வேங்கடசாமி கூறியுள்ளார். கல்லூரி நாட்கள் முதலே இந்தச் சிலை யைப் பற்றி எனக்குப் பெரும் ஆர்வம்! முதன்முதலில் (1993) காணச் சென்றபோது, அந்தச் சிலை புத்தரைப் போலவே தெரிந்தது. நாளடைவில் மற்றைய புத்தர் சிலைகளின் அமைப்புடனும் செய்திகளுடனும் ஒப்பு நோக்கியபோது, அது புத்தர் அல்ல என்பதும் பகவர் எனப்படும் ஒரு ரிஷி என்பதும் தெரியவந்தது. ‘காசிக்கு வீசம் பெரிது கும்பகோணம்’ என்பதை உணர்த்த அந்தச் சிலை சின்முத்திரையோடு இருப்பதாகச் சிலாகிப்பது அங்குள்ளவர்களின் வழக்கம்.

பெரண்டாக்கோட்டை ‘சாம்பான்’
தஞ்சாவூர்-மன்னார்குடி சாலையில் பெரண்டாக் கோட்டை என்ற ஊரில் புத்தர் சிலையின் தலைப் பகுதி மட்டும் இருப்பதாக ‘தி மெயில்’ இதழில் ஒருமுறை செய்தி வந்திருந்தது. அந்தச் செய்தி நறுக்கைத் தொல்லியல் அறிஞர் கி. ஸ்ரீதரன் எனக்கு அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியில் இருந்த புகைப்படத்தை வைத்து அந்தச் சிலையை உறுதி செய்துகொள்ள முடியாத நிலையில், நேரில் சென்று பார்ப்பதென்று முடிவெடுத்தேன். நேரில் பார்த்த பின்னரே, அது புத்தர் சிலை என்பது உறுதி யானது. அந்த ஊர் மக்கள் அது புத்தரின் சிலை என்றறியாமல் ‘சாம்பான்’ என்று வழிபட்டுவருவதுதான் விசித்திரம்!

சிலையின் சுவடு எங்கே?
தஞ்சாவூர் மூல அனுமார் கோயிலின் பின்புறம் ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கேள்விப்பட்டுச் சென்றபோது, அங்கு ஒரு சிலையைக் காண முடிந்தது. பல ஆண்டுகளாக அந்தச் சிலை அங்கு இருப்பதாகக் களப்பணியின்போது கூறினார்கள். பராமரிப்பின்றி இருந்த அந்தச் சிலையைப் புகைப்படம் எடுத்துவந்து, பிற புத்தர் சிலைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். புத்தர் சிலைகளுக்குரிய கூறுகள் அந்தச் சிலையில் இல்லா ததைக் காண முடிந்தது. அந்தச் சிலை சமணத் தீர்த்தங் கரர் சிலை என்பது உறுதியானது. புத்தர் சிலையோ தீர்த்தங்கரர் சிலையோ எதுவாக இருந்தாலும் பாதுகாக்கப் பட வேண்டுமல்லவா?! அந்தச் சிலை இருந்த சுவடு தெரியாமல் தற்போது மறைந்துவிட்டது. நம் பாரம்பரியச் சின்னங்களைக் காப்பதில் நாம் எந்த அளவுக்கு அக்கறை காட்டிவருகிறோம் என்பதன் எடுத்துக்காட்டுதான் இது!
களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் எனக்குச் சில விஷயங்களை உணர்த்தின. பௌத்தத்தின் வீச்சு மிகப் பெரிய அளவில் இருந்திருக்கிறது. அது மட்டுமல்ல, பௌத்தம் புத்துயிர் பெற்றுவருவதையும் உணர முடிகிறது. மகிழ்ச்சியூட்டும் விஷயம்தான் இது. ஆனால், நமது பௌத்தச் சுவடுகளான அந்தச் சிலைகள் அழியாமல் காக்கப்பட்டால் அதுதான் பெருமகிழ்ச்சி!

பா. ஜம்புலிங்கம், முனைவர், தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர்.
தொடர்புக்கு: drbjambulingam@gmail.com

தி இந்து நாளிதழில் இக்கட்டுரையைப் பின்வரும் இணைப்பில் வாசிக்கலாம்.
சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்

23 comments:

 1. முனைவர் அவர்களுக்கு அறிய பல விடயங்கள் தந்தமைக்கு முதற்கண் நன்றி தங்களின் தேடுதலில் கிடைத்த அனுபவங்கள் பகிர்வது நாளைய தலைமுறையினருக்கு ஒரு பாடம் என்பது நிதர்சனமான உண்மை தொடரட்டும் உமது தேடுதல்கள் வாழ்த்துகள்.
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 2. Near Pondicherry, a place called Bahoor is there. Here a very big stature of Buddha resides inside a temple solely for it. It is maintained by Archaeological Society of India. This place is also well known as a seat of an ancient University.

  ReplyDelete
 3. அறியாத தகவல்கள்... மீசை வைத்த புத்தர் குறித்து முதல் முறை படிக்கிறேன்... அருமையான தேடல் ஐயா.... அருமை...

  ReplyDelete
 4. புத்தர் குறித்து தங்களின் களப்பணிக்கு வாழ்த்துக்கள் ஐயா. அறியாத விஷயங்கள். புத்தரின் வழிபாடு வடநாட்டுப்பக்கம் தான் அதிகம் என நினைத்து இருந்தேன். அந்தக்காலத்திலேயே இங்கு அது அதிகம் இருந்து இருக்கும் போலும். சுவாரஸ்யமாக இருக்கிறது.நன்றி

  தம் 3

  ReplyDelete
 5. புத்தர் குறித்து தங்களின் களப்பணிக்கு வாழ்த்துக்கள் ஐயா. அறியாத விஷயங்கள். புத்தரின் வழிபாடு வடநாட்டுப்பக்கம் தான் அதிகம் என நினைத்து இருந்தேன். அந்தக்காலத்திலேயே இங்கு அது அதிகம் இருந்து இருக்கும் போலும். சுவாரஸ்யமாக இருக்கிறது.நன்றி

  தம் 3

  ReplyDelete
 6. தொடர்ந்த உங்கள் களப்பணிக்கும் ஆராய்ச்சிக்கும் என் தலை தாழ்ந்த வணக்கங்கள்.

  உங்கள் தேடல்களும், சிரமங்களும், ஆய்வுகளும் எனக்கு அசோகர் என்ற நூலை மொழியாக்கம் செய்த போது, அசோகரின் கல்வெட்டுகள், புத்தரின் வரலாறு பற்றி அறிய பல ஆங்கிலேயர்கள் எடுத்த சிரமங்கள் பற்றிய செய்தி கண்டு நான் ஆச்சரியப்பட்டது நினைவுக்கு வருகிறது.

  வரலாறு தொடர்கிறது. வளர வாழ்த்துகள்

  ReplyDelete
 7. முயற்சி உடையார் இகழ்ச்சியடையார் என்பது உங்கள் தேடல்கள் மூலம் அறியமுடிகிறது-வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. ஐயா.

  ஒவ்வொரு தகவலும் அதிசயமாக உள்ளது அறிந்தேன் தங்களின் பதிவு வழி தேடலுக்கு எனது பாராட்டுக்கள் ஐயா. த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 9. இவைகள் எல்லாம் உங்களால் மட்டுமே முடியும்...

  பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. நேற்றைய தி இந்துவில் உங்கள் கட்டுரை படித்து மகிழ்ந்தேன். தீர்த்தங்கரர், புத்தர் வித்தியாசங்கள் பற்றி எல்லாமும் அறிந்து கொண்டேன். வீட்டில் பேப்பர் வாங்குவதால், நேற்று படித்த உடனேயே, நேற்றே உங்கள் தளம் வந்து படித்து வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்! நான் கொஞ்சம் சோம்பேறி!

  ReplyDelete
 11. பௌத்தம் பற்றிய உங்களது கட்டுரைகள் “ தி இந்து” தமிழ் நாளிதழில் அடிக்கடி வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு கட்டுரையிலும் உங்களுடைய அனுபவங்கள் மக்கள் மறந்த அன்றைய வரலாற்றினை இன்று கண்முன்னே கொணரும் உங்களது களப்பணி (FIELD WORK) பாராட்டிற்கு உரியது.
  த.ம.7

  ReplyDelete
 12. வாழத்துக்கள் !

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் ஐயா
  தங்களின் தொய்வில்லா களப் பணி தொடரவும்,
  புத்தம் புது கண்டுபிடிப்புகளை,
  தங்களால் இவ்வுலகு அறியவும் வாழ்த்துக்கள் ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
 14. மீசை வைத்த புத்தர் குறித்து முதல் முறையாக இப்போது தான் படிக்கிறேன்... பல அரிய தகவல்களைப் பதிவில் தரும் தங்கள் பணி மேலும் சிறக்க வேண்டுகின்றேன்.. வாழ்க நலம்!..

  ReplyDelete
 15. #பௌத்தச் சுவடுகளான அந்தச் சிலைகள் அழியாமல் காக்கப்பட்டால் அதுதான் பெருமகிழ்ச்சி!#
  தாலிபான்கள் பல அரிய புத்தர் சிலைகளை குண்டுவைத்து தகர்த்த கொடுமை நினைவுக்கு வருகிறது !
  த ம 9

  ReplyDelete
 16. மீசை வைத்த புத்தர் ஆச்சர்யம்தான் . ஐயா தங்கள் பணி மகத்தானது . எத்தனை தகவல்கள்! நிச்சயம் உங்கள் தேடல் ஒரு வரலாற்றுப் பதிவு.

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. //புத்தர் சிலையோ தீர்த்தங்கரர் சிலையோ எதுவாக இருந்தாலும் பாதுகாக்கப் பட வேண்டுமல்லவா?! அந்தச் சிலை இருந்த சுவடு தெரியாமல் தற்போது மறைந்துவிட்டது. நம் பாரம்பரியச் சின்னங்களைக் காப்பதில் நாம் எந்த அளவுக்கு அக்கறை காட்டிவருகிறோம் என்பதன் எடுத்துக்காட்டுதான் இது! // நமது மரபுச் செல்வங்களை வெறும் கல்லாக மட்டுமே நாம் பார்க்கப் பழகியதன் விளைவு இது. தங்களின் ஆதங்கம் பொருளுடையது. இத்தொல்லியில் சின்னங்களை காக்க அந்தந்த பகுதி மக்களோடு இணைந்து முயற்சிகளை எங்ஙனம் உருவாக்கலாம் என சிந்திக்க வேண்டிய கட்டயாத்தில் நாம் இருக்கிறோம்.

  பெளத்த தற்காலத்தில் பெருகி வருவதற்கு தலித் விழிப்புணர்வு அரசியல் எழுச்சியும் ஒரு காரணமாக இருக்கலாமா?

  ReplyDelete
 19. Mr K.Sridharan (மின்னஞ்சல் sridharmythily@gmail.com வழியாக) sir, vanakkam. today in tamil hindu I have seen the article. thanks for mentioning about Perandakottai find.. we have identified as Buddha, and exposed the head portion. but we have not able to expose fully because it was under worship as SAMBAN, thanks for your information. k.sridaran.

  ReplyDelete
 20. Mr S.M.Perumal (மின்னஞ்சல் perumal.s.m.t.u@gmail.com வழியாக) Hi Sir,
  This is S.M.Perumal today i read your article in The Hindu(tamil) it came out very well. It is useful for all academic fields. Definitely your article will create a big deal in our Tamil University.

  ReplyDelete
 21. Mr Sathish Vengat (மின்னஞ்சல் vengatsathish92@gmail.com மூலமாக)
  Hello sir hindu'la chola nattil poutham artical pathen intha artical'a vara prendarkottai en oor angu sampanaga valipaduvathu puthar silai endru angu ulla anaivarum arinthathe antha kattu pakuthil samapan silai illatha karanathal puthar silaiyai sampanaga valipadukirom

  ReplyDelete
 22. Mr. Nedunchezhiyan ganesan (மின்னஞ்சல் gnedu74@yahoo.co.in வழியாக)
  sir, your article is really good sir. i want to know more details about that.
  thank you

  ReplyDelete
 23. Mr. R. Thangaraju (மின்னஞ்சல் thanga.dinamani@gmail.com வழியாக>
  Already read the Hindu Tamil paper your story. Very good message. Congratulations. Sir. Thank you.

  ReplyDelete