மகாமகம் காணும் கும்பகோணத்தில் பௌத்தம்
![]() |
மகாமகம் காணும் கும்பகோணத்தில் பௌத்தம்
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரிக்குத் தென்கரையில் உள்ள குடமூக்கு என்னும் பெயர் பெற்று விளங்கும்
கும்பகோணம் நகரில் இரு சான்றுகள் பௌத்தம் தொடர்பாக இருந்ததாக அறிஞர்கள் விவாதிக்கின்றனர். ஒருங்கிணைந்த
தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பௌத்த ஆய்வு தொடர்பாக
1993 முதல் புத்தர் சிலைகளைத் தேடிச் சென்றபோது பல இடங்களில் புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது.
புதிய புத்தர் சிலைகளைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் கும்பகோணம் நகரில்
புத்தர் சிலைகளைக் காணமுடியவில்லை.
பகவ விநாயகர் கோயிலில் ஒரு சிற்பமும், கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள ஒரு
கல்வெட்டும் பௌத்தம் தொடர்பானவையாகக் கருதப்படுகின்றன. பகவ விநாயகர் கோயிலில் உள்ள
சிற்பம் புத்தர் இல்லை என்பதையும், கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டு பௌத்தத்தின்
பெருமை பேசுகின்ற கல்வெட்டு என்பதையும் களப்பணி மூலம் அறிய முடிந்தது.
மகாமகம் கொண்டாடப்படும் இவ்வினிய வேளையில் கும்பகோணத்தில் பௌத்தம் தொடர்பான
இச்சான்றுகளைக் காண்போம்.
கும்பகோணம் பகவ விநாயகர் கோயில்
வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி பெளத்தமும் தமிழும் (1940)
என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்: "கும்பகோணம் நாகேசுவரசுவாமி திருமஞ்சன வீதியில்
உள்ள ஒரு விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் உருவம் இருக்கிறது.
பகவன் என்பது புத்தர் பெயர்களில் ஒன்று. புத்தருக்கு விநாயகன் என்னும் பெயர் உண்டென்று
நிகண்டுகள் கூறுகின்றன. புத்தர் கோயில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோயில்களாக்கப்பட்டன.
இங்குள்ள விநாயகர் கோயிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்".
முதன்முதலாக அக்கோயிலுக்குக் களப்பணி சென்றபோது கருவறையில் விநாயகர்
சிலையை கண்டேன். மயிலை சீனி வேங்கடசாமி புத்தர் என்று குறிப்பிட்டிருந்த சிலை கருவறையின்
வெளியே இருந்தது. அச்சிலை அமர்ந்த நிலையில் இருந்தது. அவர் கூறியபடி அச்சிலை புத்தர்
என நினைத்துக்கொண்டு அதனைப் பார்த்துவிட்டுத் திரும்பினேன். பல ஆண்டுகளுக்குப் பின்னர்
மறுபடியும் அங்கு சென்றேன். அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள புத்தர் சிலைகள்
தலையில் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர், சற்றே மூடிய கண்கள், நீண்டு வளர்ந்த காதுகள்,
நெற்றியில் திலகக்குறி, மார்பில் மேலாடை, இடுப்பில் ஆடை, உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி
போன்ற சில கூறுகளைக் கொண்டுள்ளன. சோழ நாட்டில் உள்ள புத்தர் கற்சிலைகளில் இவற்றில்
அனைத்துக் கூறுகளையோ, சில கூறுகளையோ காணமுடியும். ஆனால் இக்கோயிலிலுள்ள சிலை புத்தரின்
சிலைக்கான கலையமைதியைக் கொண்டிருக்கவில்லை. அதனடிப்படையில் அச்சிலை புத்தர் இல்லை என்பதை
உறுதியாக அறிந்தேன். பகவர் தொடர்பாக அங்கு வாய்மொழியாக ஒரு கதையைக் கூறினர்.
"வேதாரண்யத்தில் தன் சீடருடன் வசித்துவந்தவர் பகவர். ஒரு நாள் பகவரின் வயதான தாயார் தான் காலமான பிறகு, தன் அஸ்தியை அது எந்த இடத்தில் மலர்களாக மலர்கிறதோ அந்த இடத்தில் கரைக்குமாறு கேட்டுக்கொண்டார். தாயாரின் மறைவுக்குப் பிறகு, பகவர் தன் சீடருடன் தாயாரின் அஸ்தியை எடுத்துக்கொண்டு தீர்த்த யாத்திரை செல்கிறார். கும்பகோணம் வந்து காவிரி நதியில் நீராடும்போது அவருடைய சீடர் பெட்டியைத் திறந்துப் பார்க்க, அதில் மலர்கள் இருக்கக் கண்டு குரு கோபிப்பாரோ என்று பயந்து மூடி விடுகிறார். இச்செயல் குருவிற்குத் தெரியாது. பின் அவர் காசி செல்கிறார். காசியில் அஸ்தி மலராக மாறவில்லை. அப்போது அருகிலிருந்த சீடர் கும்பகோணத்தில் நடந்ததைக் கூறுகிறார். மீண்டும் கும்பகோணம் அடைந்து காவியாற்றில் புனித நீராடிவிட்டு அஸ்தி மலர்களாக மாறியிருப்பது கண்டு மிக்க மிகிழ்ச்சியுற்று அஸ்தியைக் கரைக்கிறார். கும்பகோணத்துக்கு காசியைவிடவும் வீசம் அதிகம் என்று காட்டியருளிய மரத்தடியில் இருந்த விநாயகரை இங்கேயே தங்கி தன் சீடருடன் வழிபடவே அன்று முதல் இந்த கணபதிக்கு ஸ்ரீ பகவத் விநாயகர் என்ற பெயர் வரலாயிற்று. காசிக்கு வீசம் பெரிது கும்பகோணம் என்று உணர்த்தும் வகையில் பகவரின் வலது கை முத்திரை உள்ளது". இச்செய்தி படத்துடன் கோயிலின் கருவறைச் சுவற்றில் அழகான சித்திரங்களாகத் தீட்டப்பட்டிருந்ததைக் கண்டேன். வரலாற்றறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி கூறிய சிலை புத்தர் அல்ல என்பதை உணரமுடிந்தது.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்
மற்றொரு சான்று கும்பேஸ்வரர் கோயிலில் பௌத்தம் கி.பி.16ஆம் நூற்றாண்டு
வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்ததை நமக்கு அளிக்கிறது.
இக்கோயிலின் ராஜகோபுரத்தைக் கடந்து சன்னதி வழியாக உள்ளே செல்லும்போது
கொடி மரம் காணப்படுகிறது. தொடர்ந்து முன் மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது நந்தியைக்
காணலாம். அதற்கடுத்து காணப்படும் உட்பிரகார வாயிலின் நிலைக்காலில் பௌத்தம் தொடர்பான
கல்வெட்டு காணப்படுகிறது.
இக்கல்வெட்டு செவ்வப்ப நாயக்கரின் ஆட்சியின்போது விக்கிரம ஆண்டு ஆடி
மாதம் 22ஆம் நாள் எழுதப்பட்டதாகும். இது குறிக்கும் நாள் கி.பி.1580ஆம் ஆண்டு ஜூலைத்திங்கள்
ஆகும். இக்கல்வெட்டு கூறும் செய்தி பின்வருமாறு அமையும்.
செவ்வப்ப நாயக்க ஐயன் தர்மமாக
திருவிலந்துறை புத்தர் கோயிலில்
தீத்தமாமருந்தார் நாயகர் நிலத்திலே
திருமலைராசபுரத்து விசேச
மகாசனங்கள் வாக்கால் வெட்டிப் போகையில்
திருமலைராசபுரத்தில் அகரத்தில்
திருப்பணி சேர்வையாக விட்ட நிலம்...."
கும்பகோணம்-காரைக்கால் நெடுஞ்சாலையில் திருநாகேஸ்வரம்-
திருநீலக்குடி ஆகிய ஊர்களுக்கு அருகாமையில் உள்ள சிறுகிராமம் எலந்துறை. செவ்வப்ப
நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் இவ்வூர் திருவிளந்துறை என அழைக்கப்பெற்றது. இவ்வூரின்
கிழக்கே அமைந்த ஊர் திருமலைராஜபுரம். திருமலைராஜபுரம் அந்தணர்கள் கிராமமாகவும், எலந்துறை
பௌத்தர்கள் கிராமமாகவும் திகழ்ந்தன. திருமலைராஜபுரத்திற்குப் புதிய பாசன வாய்க்கால்
வெட்டியமையால் எலந்துறையிலிருந்த புத்தர் கோயிலின் நிலத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இதனை
ஈடு செய்ய திருமலைராஜபுரத்து ஊரார் தங்கள் ஊரில் உரிய அளவு நிலத்தை புத்தர் கோயிலுக்காக
அளித்ததைக் கும்பகோணம் கல்வெட்டு கூறுகின்றது. கி.பி.1580இல் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள
எலந்துறையில புத்தர் கோயில் இருந்ததை இதன்மூலம் அறியமுடிகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை
புத்தர் கோயிலொன்று பௌத்தர்களால் போற்றப் பெற்று வந்ததற்கான இறுதிச்சான்றாகத் திகழ்வது
இந்தக் கல்வெட்டேயாகும் என்கிறார் வரலாற்றறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன். களப்பணி
மேற்கொண்டபோது அவ்வூரில் புத்தர் கோயில் இருந்ததற்கான சான்றையோ புத்தர் சிலையையோ காணமுடியவில்லை.
இருந்தாலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 16ஆம் நூற்றாண்டு வரை பௌத்தம் இருந்ததை இக்கல்வெட்டு
தெளிவாக எடுத்துரைக்கிறது.
கோயில் நகரம் என்று பெயர் பெற்றுள்ள கும்பகோணத்தில் சைவ வைணவக் கோயில்கள் மட்டுமன்றி பௌத்தத்தின் பெருமையை உணர்த்தும் கல்வெட்டு இருப்பது என்பதானது பௌத்த சமய வரலாற்றிற்கு ஒரு முக்கியமான சான்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மகாமகத்திற்காக கும்பகோணம் வரும்போது இக்கல்வெட்டினைக் காண்போம்.
கோயில் நகரம் என்று பெயர் பெற்றுள்ள கும்பகோணத்தில் சைவ வைணவக் கோயில்கள் மட்டுமன்றி பௌத்தத்தின் பெருமையை உணர்த்தும் கல்வெட்டு இருப்பது என்பதானது பௌத்த சமய வரலாற்றிற்கு ஒரு முக்கியமான சான்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மகாமகத்திற்காக கும்பகோணம் வரும்போது இக்கல்வெட்டினைக் காண்போம்.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: தினமணி,
மகாமகம் தீர்த்தவாரி விளம்பரச்சிறப்பிதழ், 22 பிப்ரவரி 2016
(கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம்)
-------------------------------------------------------------------------------------------
7 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.
Dr Karthikeyan (thro email: drkarthik53@gmail.com)
ReplyDeletevaazhttukkaL, A Karthikeyan.
அடுத்த முறை கும்பேஸ்வரர் கோயில் செல்லும் போது காண வேண்டும் ஐயா... நன்றி...
ReplyDeleteசைவ மதத்துக்கு எதிரான கருத்துப் போரை பௌத்தமும், சமணமும் நடத்தியது. அனல் வாதம், புனல் வாதம் என்பதெல்லாம் தங்களுக்குக் கீழ்ப்படிந்த அரசர்களது அதிகாரத்தை வைத்து சமணர்களை, பவுத்தர்களை "தீர்த்துக் கட்டியது" தீவிர சைவ வெறி.
ReplyDeleteகழுவேற்றம் என்பது அதன் கோரவடிவம்....பழமுதிர்ச் சோலை சித்தர்களை ஒட்டுமொத்தமாக காலி செய்த இடம் என்று சொல்லப்படுகிறது.
புலையறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் என்று பாடுகிறார் ஓர் ஆழ்வார். அத்தனை எதிர்க் கருத்துக்களாக பவுத்தம், சமணம் பார்க்கப்பட்டதற்குக் காரணம் உருவ வழிபாடு, புனிதங்களை வைத்து மக்களை ஆட்சி செய்த தத்துவங்களை அவர்கள் கேள்விக்கு உட்படுத்தியது தான்.
சமணர் பள்ளிகள் பலவும் இடித்துத் தகர்க்கப்பட்டன. பவுத்த அடையாளங்களும் தான்...
எஞ்சி மிஞ்சியவை இப்போது உங்களது ஆய்வுப் பார்வையில் பட்டுக் கொண்டிருக்கின்றன...வரலாற்றின் மீட்சி அது...
வாழ்த்துக்கள்....
எஸ் வி வேணுகோபாலன்
வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteபகவ விநாயகர் கோவிலில் உள்ள பகவர் சிலை( படத்தில் உள்ளது) ஒரு நோக்குக்கு புத்தர் சிலைபோல்தான் காட்சிதருகிறது விநாயகர் சிலைக்கான எந்த அடையாளமும் காண்வில்லை.
ReplyDeleteஐயா, அது விநாயகரோ, புத்தரோ இல்லை. சிற்பக்கூறுகளை வைத்து இச்சிலை புத்தர் இல்லை என்பது உறுதியாகக்கூறமுடியும். தவிரவும் கடந்த சுமார் கால் நூற்றாண்டுகளாக களப்பணியில் நான் பார்த்து வருகின்ற புத்தர் சிலைகளோடு இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போதும் அதனை உணர்ந்தேன்.நன்றி.
ReplyDeleteபதிவிற்கு நன்றி!
ReplyDeleteமுனைவர் மென் மேலும் சிகரம் தொட எமது மனமார்ந்த வாழ்த்துகள்
ReplyDeleteதமிழ் மணம் 3
த.உழவன் (tha.uzhavan@gmail.com மின்னஞ்சல் வழியாக)
ReplyDeleteஅயரா உங்கள் உழைப்பால், பல அரிய தகவல்களை அறிய முடிகிறது. உங்கள் பணிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தற்போது பெங்களூரில் இருந்து தமிழுக்கா செயற்படுகிறேன். நாட்டுடைமை நூல்கள் அனைத்தையும் எழுத்து வடிவில் கொண்டு வரும் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்கிறேன். அப்பொழுது கீழ்வரும் புத்த நூலைக் கண்டேன். உங்களுக்கு பயனாகுமென எண்ணுகிறேன். இது பற்றி அறிய ஆவல்.
https://commons.wikimedia.org/wiki/File%3A%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81.pdf
தங்களின் தகவல் என் ஆய்வுக்கு உதவும். நன்றி.
DeleteMr SV Venugopalan (thro' email: sv.venu@gmail.com)
ReplyDeletecongrats, Sir,saw your nice letter in the Hindu. svv.
உங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன்
ReplyDeletehttp://thaenmaduratamil.blogspot.com/2016/03/blog-post.html
நன்றி ஐயா
தைகளின் பணி தொடர வாழ்த்துகள்!
ReplyDeleteஐயா, தங்களின் பணி தொடர வாழ்த்துகள்!
ReplyDeleteதங்கள் பணி தொடர
ReplyDeleteஎனது வாழ்த்துகள்!