பௌத்த சுவட்டைத் தேடி : பிள்ளைபாளையம், அரியலூர்

25 ஆகஸ்டு 2019 அன்று மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள பிள்ளைபாளையம் என்னுமிடத்தில் புத்தர் சிலையினைக் கண்ட அனுபவத்தை இப்பதிவில் காண்போம்.

பௌத்த, சமண மற்றும் பிற சிற்பங்களைத் தேடி களப்பணி மேற்கொள்ளும் நண்பர் முனைவர் ம.செல்வபாண்டியன் பெரம்பலூரிலிருந்தும்,  முனைவர் பட்ட ஆய்வாளர் திரு க.ரவிக்குமார் திருச்சியிலிருந்தும் வந்தனர். நான் தஞ்சாவூரிலிருந்து அவர்களோடு இணைவதாக முடிவெடுத்து, கங்கைகொண்டசோழபுரம் அருகேயுள்ள குறுக்கு ரோட்டில் சந்தித்துப் பின்னர் களப்பணியைத் தொடங்கத் திட்டமிட்டோம். தஞ்சாவூரிலிருந்து கீழப்பழுவூர்-ஜெயங்கொண்டம்-கங்கைகொண்டசோழபுரம் குறுக்கு ரோடு என்ற வகையில் நான் வந்து சேர்ந்து அவர்களைத் தொடர்புகொண்டேன். பேருந்து கிடைக்காததால் அவர்கள் அங்கு வர தாமதமாக, அருகில் வேறு ஏதாவது இடம் இருக்கிறதா என்று திரு செல்வபாண்டியன் அவர்களிடம் கேட்டேன். அவர் முதலாம் இராஜேந்திரசோழன் வெற்றியின் அடையாளமாக கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவந்த சிற்பங்களை கீழச்செங்கல்மேட்டில் காணலாம் என்றார். அதன்படி அங்கிருந்து 1.5 கிமீ தொலைவில் இருந்த அவ்விடத்திற்கு நடந்து சென்று அச்சிற்பங்களைக் கண்டேன். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்தேன். நான் திரும்பவும், அவர்கள் வந்து சேரவும் சரியாக இருந்தது. 

குறுக்கு ரோட்டில் தேநீர் அருந்திவிட்டு சிலை உள்ள இடத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தோம். அங்கிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் (கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து 5 கிமீ) பிள்ளைபாளையம் இருப்பதாகக் கூறினர். சிலர் அவ்விடத்தை பிள்ளாபாளையம் என்றும் பள்ளிபாளையம் என்றும் கூறினர். அங்கிருந்து ஆட்டோவில் சென்றோம். பாண்டியன் ஏரியைப் பார்த்துக்கொண்டே சென்றோம். அழகான அமைதியான கிராமம். கிராமத்து நடுவில் பெரிய அரச மரத்தின்கீழ் புத்தர் சிலை. அருகே இரு விநாயகர் சிலைகள். புத்தரைப் பார்த்ததும் சற்றே அதிர்ச்சியானேன். தமிழகத்தில் இதுவரை நான் பார்த்த சிலைகளில் மிகவும் சிதைந்த நிலையில் அச்சிலை இருந்தது. 

கிராம மக்களிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு களத்தில் இறங்கினோம். அங்கிருந்தோர் அச்சிலையின் இடுப்புப்பகுதிக்குக் கீழே எதுவும் இல்லை என்று கூறினர். தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி பட்டீஸ்வரம் சாலையில் உள்ள கோபிநாதப்பெருமாள் கோயில் என்னுமிடத்தில் பிப்ரவரி 2002இல் காணப்பட்ட இரு சிலைகளில் ஒரு சிலையை தலையின்றி, இடுப்புப்பகுதிக்கீழ் எதுவுமின்றி முன்னர் பார்த்துள்ளேன். பிற இடங்களில் சற்று சிதைந்த நிலையில் நான் புத்தர் சிலைகளைப் பார்த்த எனக்கு, இடுப்புக்குக் கீழும் இருக்கும் என்ற எண்ணம். சிலையை ஒட்டி கையை வைத்து தரையின் அடியில் சிறிது தூரம் வைத்துப்பார்த்தேன். சிறிது தூரத்திற்குப் பின் மண்ணையே தொடமுடிந்தது. என் ஐயத்தைத் தெளிவிப்பதற்காக சிலையை வெளியே எடுத்துப் பார்க்கமுடியுமோ என்று கேட்டபோது கிராம மக்கள் முன்வந்து உதவினர். 







சிலையை வெளியே எடுத்துப் பார்த்தபோது 97 செமீ உயரமுள்ள சிலையினைக் காணமுடிந்தது. தண்ணீர் எடுத்து வரச்சொல்லி அந்த சிலையைச் சுத்தம் செய்தோம். முன்னைவிட இப்போது சிலை தெளிவாகத் தெரிந்தது. சுருள் முடியுடன் கூடிய தலையின் மேல் தீச்சுடர், சற்றே மூடிய கண்கள், மார்பில் ஆடை, நீண்டு வளர்ந்த காதுகள், பரந்த மார்புடன் இருந்த அச்சிலையில் இடுப்புப்பகுதி வரை மட்டுமே இருந்தது. சிலை பாதிக்குமேல் சிதைந்த நிலையில் இருந்தது. வலது கை முற்றிலும், இடது கை பாதிக்கு மேலும் உடைந்த நிலையிலும், தீச்சுடர், மூக்கு, உதடுகள் சிதைந்த நிலையிலும் இருந்தன. சிதைந்த நிலையிலும் இச்சிலையினை உள்ளூர் மக்கள் வழிபட்டு வருவதாகக் கூறினர். 15 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியன் ஏரிக்குக் கரை கட்டும்போது அச்சிலையைக் கண்டதாகவும், பின்னர் அரச மரத்தடியில் வைத்து வழிபட ஆரம்பித்ததாகவும் கூறினர். 

முனைவர் பட்ட ஆய்விற்காகவும், தொடர்ந்தும் கடந்த 25 ஆண்டுகளாக மேற்கொண்டுவருகின்ற களப்பணியின்போது அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், கீழக்கொளத்தூர், குழுமூர், சுத்தமல்லி, முத்துசேர் வைமடம், பெரிய திருக்கோணம், ராயம்புரம், விக்ரமங்கலம் ஆகிய இடங்களில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள புத்தர் சிலைகளைக் கண்டுள்ளேன். இதன் அமைப்பில் இதுவும் அமர்ந்த நிலையிலான சிலை என்பதை அறியமுடிந்தது. 

இதற்கு முன்னர் அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் புத்தர் சிலையை முனைவர் ம.செல்வபாண்டியன் அவர்களோடு ஜுன் 2006இல் மேற்கொண்ட களப்பணியின்போது கண்ட அனுபவத்தை பௌத்த சுவட்டைத் தேடி : குழுமூர் என்ற பதிவில் காணலாம்.   

வழக்கம்போல சிலையினைப் பற்றிய குறிப்புகளைத் தொகுக்க ஆரம்பித்து, மறுபடியும் சிலையை பழைய நிலையில் அமைத்தோம். சிறிய மேடை ஒன்றினைக் கட்டி அதனை பாதுகாக்கும்படி கேட்டுக்கொண்டோம். புத்தரையும், ஊர் மக்களையும் பிரிய மனமின்றி விடைபெற்றோம்.
  • உடன் வந்த முனைவர் ம.செல்வபாண்டியன், திரு க.ரவிக்குமார்
  • பிள்ளைபாளையத்தில் களப்பணியில் உதவிய திரு சக்திவேல், திரு தமிழ்ச்செல்வன், ஆட்டோ ஓட்டுநர் திரு கொல்லாபுரம் ரவி மற்றும் கிராம மக்கள்
  • செய்திகளை வெளியிட்ட நாளிதழ்கள்
28 செப்டம்பர் 2022இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. தங்களது அயரா உழைப்புக்கும், தங்களோடு இணைந்து பணியாற்றிய
    முனைவர் திரு.ம.செல்வபாண்டியன் மற்றும் திரு க.ரவிக்குமார் அவர்களுக்கும் எமது வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. உங்கள் களப்பணி சிறப்பானது. தொடரட்டும் உங்கள் சீரிய பணி.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. தொடரட்டும் தங்கள் பணி
    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  4. மிக மிக அருமை அய்யா

    ReplyDelete
  5. உங்கள் பணி வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும் வாழ்த்துக்கள் நன்றிகள்

    ReplyDelete
  6. மிக மிக அருமை .... உண்மயிலேயே இப்பணி அற்புதமானது .. உங்களை பாராட்டியே ஆகவேண்டும்...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete
  7. 11 ஆம் நூற்றாண்டு. ஒரு தலைமுறைக்கு 30 வருடங்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டாலும் முப்பது தலைமுறைகள் கடந்து வந்துள்ள ஆவணங்களை இத்தனை விருப்பங்களுடன் தங்கள் வாழ்க்கையின் ஒரு கடமையாக வைத்துள்ளது ஆச்சரியமாகவே உள்ளது.

    ReplyDelete
  8. சிலையின் தொன்மையை அறிய செய்யப்படும் கார்பன் டேட்டிங் பற்றி கூற முடியுமா

    ReplyDelete
  9. தங்கள் அயரா உழைப்பும் , உங்கள் நண்பர்களின் துணையும் இருந்தால் மேலும் பல அறிய விஷயங்கள் வெளி வரும் என்ற நம்பிக்கையிலும் மகிழ்ச்சியிலும் நாங்கள் இருக்கிறோம்.

    ReplyDelete

Post a Comment