பௌத்த சுவட்டைத் தேடி : சந்தைதோப்பு, நாகப்பட்டினம் மாவட்டம்

27 ஆகஸ்டு 1998
வேதாரண்யம் பகுதியில் களப்பணி சென்றபோது நாகை வேளாங்கண்ணி சாலையில் வீரன்குடிகாடு என்னுமிடத்தில் புத்தர் சிலைகள் இருப்பதாக களப்பணியின்போது அறியமுடிந்தது.

2007 
களப்பணியின்போது நாகை வேதாரண்யம் சாலையில் பரவைக்கு முன், தென்பொய்கைநல்லூருக்கு மேற்கே கருவேலங்கடை என்னுமிடத்தில், புத்தர் சிலை இருப்பதாகக் கூறினர். 

1 மே 2013
மேற்கண்ட இடங்களுக்குக் களப்பணி செல்ல எண்ணியிருந்தபோது நாகப்பட்டினம் பகுதியில் புத்தர் சிலைகள் இருப்பதை அறியமுடிந்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிராந்தியிலும், சந்தைத்தோப்பிலும் புத்தர் சிலைகள் இருப்பதாக திரு க.இராமச்சந்திரன் தந்த தகவலின் அடிப்படையில் அவருடன் களப்பணி மேற்கொண்டு இரு சிலைகளையும் பார்த்தோம். 

கிராந்தி புத்தரைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்துள்ளோம். அதே நாளில் நாங்கள் பார்த்த மற்றொரு புத்தர் சிலை வேளாங்கண்ணி அருகே (நாகப்பட்டினம் வேளாங்கண்ணி சாலையில் வேளாங்கண்ணிக்கு சற்று முன்பாக) சந்தைத்தோப்பு என்னுமிடத்தில் இருந்த தலையில்லாத புத்தர் சிலையாகும். அமர்ந்த நிலையில் 32" உயரமும், 22" அகலமும் கொண்ட சிலையின் கையில் தர்ம சக்கரம் சிதைந்திருந்தது. மார்பில் ஆடை அழகாக இருந்தது. வலது கை கட்டை விரல் உடைந்திருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தான் சிறுவனாக இருந்தபோது அருகில் விளையாடிக்கொண்டிருந்ததாகவும், அழகாக தலையோடு இருந்ததாகவும், அப்பகுதியில் பெரிய சந்தை கூடும் என்றும், சந்தைக்கு வருபவர்கள் இந்தச் சிலையைப் பார்த்துப் பிரமித்துப் போவார்கள் என்றும், சில வருடங்களுக்கு முன் இச்சிலையின் தலையைக் காணவில்லை என்றும் கூறினார். 

இரு சிலைகளைப் பற்றிய செய்தியையும் நாளிதழ்களுக்கு செய்தியாகத் தருவோம் என்றபோது, திரு இராமச்சந்திரன்  "முதலில் கிராந்தி புத்தரைப் பற்றிய செய்தியினைப் பகிர்வோம், பின்னர் சந்தைத்தோப்பு புத்தரைப் பற்றி எழுதுவோம்"  என்றார். கிராந்தி புத்தரைப் பற்றிய செய்தி மட்டும் நாளிதழ்களில் தரப்பட்டு பெரும்பாலான இதழ்களில் வெளியாயின. 



11 மார்ச் 2019
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மறுபடியும் சந்தைத்தோப்பு புத்தரைப் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடைப்பட்ட காலங்களில் அவரிடம் நினைவூட்டியிருந்த போதிலும், ஓர் ஆய்வாளரின் நாகப்பட்டின ஆய்வு தொடர்பான தேடல் அந்த புத்தரைப் பற்றிய விவாதத்தினை மறுபடியும் ஆரம்பித்தது. விஷ்வபாரதி மத்திய பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் (சாந்திநிகேதன், கொல்கத்தா, மேற்கு வங்காளம்)  முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் திரு தமிழ் சங்கர், தன் ஆய்வு தொடர்பாக என்னைக் காண வந்திருந்தார். அப்போது திரு இராமச்சந்திரன் அவர்களை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். அதிகமான அலுவலகப்பணிகளுக்கிடையேயும் அவர் தொலைபேசியில் பேசினார். அப்போது அவரிடம் சந்தைத்தோப்பு புத்தரை மறுபடியும் பார்க்கவேண்டும் என்றும் அதனை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்று நினைவூட்டியபோது அவர் மிகவும் மகிழ்ந்து, விரைவில் களப்பணியினை மேற்கொள்வோம் என்றார். அவரிடம் பேசியது மன நிறைவினைத் தந்தது. சந்தைத்தோப்பு புத்தரை மறுபடியும் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். சென்றுவந்தபின் அனுபவத்தை எழுதுவேன்.
 

நன்றி :
திரு க.இராமச்சந்திரன்
திரு தில்லை கோவிந்தராஜன்
திரு செல்வம் 

ஆய்வாளர்கள் வருகை

அரிய கண்டுபிடிப்புகளின் நாயகர்கள், களப்பணி முன்னோடிகள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் திரு ம.செல்வபாண்டியன் மற்றும் திரு சி.பொன்னம்பலம் ஆகிய இருவரும் 30 மார்ச் 2019 அன்று எங்கள் இல்லம் வந்திருந்தனர். பௌத்தம், சமணம் தொடர்பான களப்பணி, கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் தொடர்பாக விவாதம் மேற்கொண்டோம். இவர்களுடனான விவாதம் என் ஆய்வின் மீதான ஆர்வத்தை மேலும் மிகுவிக்கிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

துணை நின்றவை
களப்பணித் தொகுதி 4,  1998-99, ப.143
ஆதாரம்  2000-2007, ப.259
களப்பணித் தொகுதி 9,  2013-16, ப.43

20 அக்டோபர் 2022இல் மேம்படுத்தப்பட்டது.   

Since 2007, based on the information received during the field work, I have been expecting to see the Buddha statues which were said to have found near Velankanni in Nagapattinam district of Tamil Nadu. During our field work in 1 March 2013, as per the information given by Mr K.Ramachandran, myself alongwith Mr Thillai Govindarajan went to Kiranthai and Santhaithoppu near Velankanni and saw two Buddha statues. While we discussed about the Kiranthai Buddha earlier, we are expecting time to see the Santhaithoppu Buddha again and write about it shortly.   

Comments

  1. உங்கள் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது. உங்கள் தேடுதல்கள் தொடரட்டும். தொடரட்டும் தேடல்களும் களப்பணியும்.

    ReplyDelete
  2. தங்களின் தேடலும்
    ஆய்வாளர்களுக்குத் தங்களின் மேலான வழிகாட்டலும் தொடரட்டும் ஐயா

    ReplyDelete
  3. உதவிய அன்பு நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. முன்பு கருத்துரை இட்ட நினைவு.
    தங்களது தேடுதலுக்கு ஒரு சல்யூட்.

    ReplyDelete
  5. வாழ்க தமிழுடன்!

    ReplyDelete
  6. அருமை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. தோழர் கில்லர்ஜீ அவர்களையே நானும் பின் பற்றி - ஒரு சல்யூட் தங்களின் தீராத வேட்கைக்கு

    ReplyDelete
  8. தங்கள் தேடலும், ஆராய்ச்சியும் போற்றுதலுக்குரிய விஷயம் ஐயா. இது முன்னரே பார்த்தது போலவும் இருக்கு. சில படங்கள்..
    இதில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    துளசிதரன், கீதா















    ReplyDelete
  9. எதிர்கால சமூகத்திற்கு இது பயன்படக்கூடும்.

    ReplyDelete
  10. அருமையான களப்பணி. தேவையானதும் கூட!

    ReplyDelete

Post a Comment