Tuesday, 1 August 2017

புத்தம் சரணம் கச்சாமி : சாக்யா ஈ.அன்பன்

புத்தரின் வாழ்க்கையையும் அவருடைய போதனைகளையும் சுருக்கமாகக் கொண்டுள்ள நூல் திரு ஈ.அன்பன் அவர்கள் தொகுத்துள்ள "புத்தம் சரணம் கச்சாமி". 2005இல் நூலாசிரியர் அன்பளிப்பாக தந்த இந்நூலை மறுபடியும் அண்மையில் வாசித்தேன்.


புத்த தம்மத்தை அறிய விரும்பும் புதிய ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்குமாக இந்நூல் தொகுத்து வழங்கப்படுவதாகக் கூறுகின்றார் தொகுப்பாசிரியர். 11 அத்தியாயங்களைக் கொண்டு அமைந்துள்ள இந்நூல் கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல துணைத் தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.

 • புத்தரின் வாழ்க்கை 
 • முதல் பேருரை
 • நான்கு உன்னத வாய்மைகள்
 • எண் மார்க்கம்
 • புத்தரின் சமய பரப்புப்பணிகள்
 • புத்தரின் ஆளுமை
 • புத்தரின் அன்றாட செயல்பாடுகள்
 • புத்தரின் பரிநிப்பானம் (மறைவு)
 • திரிபீடகம்
 • கம்மா, நல்வினை, தீவினை
 • மனித ஆளுமையின் பகுப்பாய்வு
 • பவுத்த வாழ்முறை
 • சமூகப் போதனைகள்
 • பவுத்தம் போற்றிய தமிழர்கள் 

ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் சில பயிற்சிக் கேள்விகளும், சிறு குறிப்பு வரைக என்று சில கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. படித்ததை மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளவும் தம்மை சோதித்துக் கொள்வதற்கும் வாசகர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் இக்கேள்விகள் துணை நிற்கின்றன. இந்நூலில் குறிப்பிடத்தக்கனவாக சிலவற்றைக் காண்போம்.

புத்தர் பிறந்த இடம் லும்பினி
புத்தர் மெய்ஞ்ஞானம் பெற்ற இடம் கயா
புத்தர் முதல் தம்ம பேருரையாற்றிய இடம் சாரநாத்
புத்தர் பரிநிப்பானமடைந்தது குசினரா
மேற்கண்ட அனைத்துமே பௌர்ணமி நாளில் நிகழ்ந்தபடியால் பௌத்த நாடுகளில் பௌர்ணமி நாள் புனித நாளாகக் கொண்டாடப்படுகிறது. (ப.84)

ஒரு முறை புத்தர் தம் சீடர்களுடன் ஜேதவனத்தில் தங்கியிருந்தபேது கையில் சிறிது உதிர்ந்த இலைகளை எடுத்துக் கொண்டு கூறினார். "பிக்குகளே, நான் உங்களுக்கு போதித்தது என் கையில் உள்ள இலைகளின் அளவே, ஆயின் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இந்த வனத்தில் உள்ள இலைகளின் அளவிலும் அதிகமானது." (ப.93)

திரிபீடகம் இன்றைக்கு மிகப் பெரிய ஆழமான நன்னெறி கோட்பாடுடைய புத்தரின் போதனைகளாகும். திரிபீடகம் என்ற சொல்லுக்குக்கு மூன்று கூடைகள் என்று பொருளாகும். அவை சுத்த பீடகம் (பேருரைப்பகுதி), அபிதம்ம பீடகம் (உன்னத கோட்பாட்டுப் பகுதி) மற்றும் விநய பீடகம் (நன்னடதைக் கோட்பாட்டுப் பகுதி) என்பனவாகும். ஒவ்வொரு பகுதியும் பல உட்பிரிவுகளைக் கொண்டு 31 நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளது. (ப.87)

இளம்போதியார் (கி.பி.2ஆம் நூற்றாண்டு), சீத்தலைச்சாத்தனார் (கி.பி.2), அறவணடிகள் (கி.பி.2), மணிமேகலை  (கி.பி. 2), நாகுத்தனர் (கி.பி.4), புத்ததத்தர் (கி.பி.5), புத்தகோஷர் (கி.பி.5), தம்மபாலர் (கி.பி.5), தினகர் (கி.பி.5), போதிதம்மர் (கி.பி.6), தம்மபாலர் (கி.பி.7), தம்மகீர்த்தி (கி.பி.7), வஜ்ரபோதி (கி.பி.7), போதிசேனர் (கி.பி.7), புத்தமித்திரர் (கி.பி.10), அனுருத்தர் (கி.பி.12), திஸ்பனகரா புத்தபியாதேரர் (கி.பி.12), கஸப்பதேரர் (கி.பி.12), தம்மகீர்த்தி தேரர் (கி.பி.12) ஆகியோர் பௌத்தம் போற்றிய தமிழர்கள் ஆவர். (ப.184)

புத்தரின் வரலாற்றை சுருக்கமாக அறிந்துகொள்ளவும், பௌத்தக் கொள்கைகளை நுணுக்கமாக அறிந்துகொள்ளவும் உதவும் இந்நூலை வாசிப்போம்.

நூல் : புத்தம் சரணம் கச்சாமி
ஆசிரியர் : திரு சாக்யா ஈ.அன்பன் (அன்புமலர்)
வெளியீட்டாளர் : புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை, சென்னை கிளை, 89, மூன்றாவது தெரு, மல்லீஸ்வரி நகர், சேலையூர், சென்னை 600 073
பதிப்பு : ஏப்ரல் 2005
விலை ரூ.75     


Brief of the write up in English:
A review of the book Buddham Saranam Kachami written by Mr Sakya E.Anban (Anbumalar) 89, III Street, Malleeswari Nagar, Selaiyur, Chennai 600 073, April 2005, Rs.75  

2 நவம்பர் 2017இல் மேம்படுத்தப்பட்டது/Updated on 2 November 2017