Friday, 1 January 2016

சமண சுவட்டைத் தேடி : செங்கங்காடு

சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ ஐந்தாண்டு நிறைவு
மகாமகம் காணவுள்ள 2016இல் சோழ நாட்டில் பௌத்தம் என்ற எனது முதல் வலைப்பூ ஐந்தாண்டு நிறைவு பெறுவதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். என் எழுத்துக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். களப்பணியைத் தொடர்வோம். 

1993 முதல் மேற்கொண்டு வரும் களப்பணியின்போது புத்தர் சிலைகளை மட்டுமே பார்த்துவந்தேன். திரு தில்லை கோவிந்தராஜன் உள்ளிட்ட பல நண்பர்கள் சமண தீர்த்தங்கரர் சிலைகளின் கூறுகளை எடுத்துக் கூறி அவற்றையும் பார்க்கும்படிக் கூறியதன் அடிப்படையில் புதிய சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தேன். இவ்வகையில் புத்தருடன் மகாவீரரும் சேர்ந்துகொண்டார். இவ்வாறான வகையில் 29 புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் களப்பணியில் காணும் வாய்ப்பு கிடைத்தது. 1999இல் விக்ரமத்தில் ஒரு புத்தர் சிலையைப் பார்த்தேன்.  அச்சிலையைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில் செங்கங்காடு என்னுமிடத்தில் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலையைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.  அந்த சமணரைக் காண செங்கங்காடு செல்வோம். 

13 பிப்ரவரி 1999
விக்ரமத்தில் உள்ள புத்தர் சிலையைப் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் வேறு ஏதாவது புத்தர் சிலை இருக்கிறதா என்று விசாரித்துக்கொண்டே வந்தேன். அப்போது செங்கங்காடு என்னும் இடத்தில் ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கூறினர். விக்ரமத்திலிருந்து செங்கங்காடு செல்வதற்காக விசாரிக்கும்போது ஒவ்வொருவரும் பல வழிகளைக் கூறினர். இறுதியாக பட்டுக்கோட்டை-வேதாரண்யம் சாலையில் முத்துப்பேட்டை தர்கா, தில்லைவளாகம் வழியாகச் செல்லும் பேருந்தில் அங்கு செல்லலாம் என்பதை அறிந்தேன். பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போதே சிலையைப் பற்றி கேட்டேன். பத்தர் கடை நிறுத்தத்தில் இறங்கும்படி கூறினர். அங்கு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். எந்தவித சிலையும் காணவில்லை. தொடர்ந்து சுமார் மூன்று கி.மீ நடந்தேன். விசாரித்துச் சென்று ஒரு சமணர் சிலையைக் கண்டேன். அங்குள்ளவர்கள் அந்த சிலை சமணர் என்றும், ஆனால் புத்தர் என்றே கூறிவருவதாகவும் கூறினர். விழா நாள்களில் சூடம் கொளுத்துவதாகவும், சாம்பிராணி போடுவதாகவும், அடிக்கடி எண்ணெய் சேவிப்பதாகவும் (போட்டு  மெழுகுவதாகவும்)  கூறினர். ஒரு புத்தரைக் காணவந்து புதிதாக சமண தீர்த்தங்கரரைக் கண்டுபிடித்தது மறக்கமுடியாத அனுபவமாகும்.சென்னை அருங்காட்சியக நூலில் (Iconography of the Jain Images in the Districts of Tamil Nadu, 2002) என்னால் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிலைகளில் நான்கு சிலைகளைப் பற்றிய செய்தி வெளிவந்துள்ளது.  அவற்றில் செங்கங்காடு சமணர் சிலையும் ஒன்றாகும்.  


"Dr B.Jambulingam, a research scholar of Thanjavur Tamil University in his survey for Buddhist antiquities in Thanjavur region came across a few Jain sculptures scattered in different desolate spots. He has identified four seated Tirthankara stone sculptures at places like Kariyankudi near Taplampuliyur in Tiruvarur Taluk, Tiruvarur District (Sl.No.30), Kottaimedu near Alangudipatti of Pudukottai district (Sl.No.31), on the back side of the Moola Anumar temple in Thanjavur (Sl.No.32) and in Senkadu of Tiruthuraipooondi Taluk of erstwhile Thanjavur district........."


3 நவம்பர் 2011
புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தார் மேற்கொள்ளும் சமணத்திட்டத்திற்காக முனைவர் நா.முருகேசன் தலைமையிலான குழுவினர் அழைத்தபோது அவர்களுடன் நானும், திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களும் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்க்கச் சென்றபோது மறுபடியும் செங்கங்காடு சென்றோம். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், 1999இல் நான் சமண தீர்த்தங்கரர் சிலையைப் பார்க்க வந்ததை நினைவுகூர்ந்தார் திரு வி.என்.கோவிந்தசாமி வைத்தியர்.  மறுபடியும் அந்த சமணரைப் பார்த்துவிட்டு, புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். விக்ரமம் என்னுமிடத்தில் புத்தரைப் பார்க்கச் சென்றபோது ஒரு சமணர் சிலையைப் பார்த்த அனுபவம் வித்தியாசமாக அமைந்தது.

நன்றி
1999 மற்றும் 2011 களப்பணிகளின்போது  உதவிய திரு வி.என்.கோவிந்தசாமி வைத்தியர் 
---------------------------------------------------------------
வரலாற்றறிஞர் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி மற்றும் வலைப்பதிவர் திரு கரந்தை ஜெயக்குமார் ஆகியோருடன் இரண்டாவது முறையாக (முதலில் 1999இல் தனியாகச் சென்றேன்) விக்ரமம் புத்தர் சிலையைப் பார்க்கச் சென்றபோது பெற்ற அனுபவம் பற்றி நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் தன் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு என் நன்றி.
---------------------------------------------------------------