Thursday, 1 December 2016

வெற்றிக்கான வழி : இலக்கு நோக்கிய பயணம் : சும்மா வலைத்தளம்

வலைப்பதிவர் திருமதி தேனம்மை லெஷ்மணன் அவரது தளத்தின் சாட்டர்டே போஸ்ட் பதிவிற்காக என்னிடம் ஒரு கட்டுரை கேட்டிருந்தார். என் பௌத்த ஆய்வினை மையமாகக் கொண்டு எழுதிய கட்டுரையை அவரது வலைப்பூவில் பகிர்ந்திருந்தார். அவர் என்னை அறிமுகப்படுத்திய விதம் என்னை நெகிழவைத்துவிட்டது. என் கட்டுரை வெளியான அவரது தளத்தின் பக்கத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன். 

எனது மதிப்புக்கும் பிரமிப்புக்கும் உரிய வலைப்பதிவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் பௌத்தம் பற்றி எழுதிவரும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள். இவரைப் பற்றிச் சொல்ல ஏராளம் இருக்கிறது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார், முனைவர், பௌத்தம், சமணம், பிறதுறைகள், விக்கிபீடியா, சிறுகதைகள் போன்றவற்றில் 800 க்கும் மேற்பட்ட அரிய பதிவுகளை எழுதியவர். பௌத்தம் பற்றிய தொல்பொருள் ஆய்வுக் கட்டுரைகளை நான் இவரது தளத்தில் விரும்பி வாசித்திருக்கிறேன். சமீபத்தில் கீழடி பற்றிய இவரது தொல்பொருள் ஆய்வுக் கட்டுரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. 

இவரது சாதனைக்கு வானமே எல்லை எனலாம். பூமிக்கடியிலும் தேடல்கள் நிகழ்த்தி சாதித்திருக்கும் இவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே இவரைப் பற்றி முழுமையாக இங்கே வாசியுங்கள் :) ! . 

இவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக ஏதேனும் எழுதித்தரும்படிக் கேட்டபோது இன்றைய சூழலில் அதி முக்கியத் தேவையான இலக்கு நோக்கிய பயணம் என்ற கட்டுரையை அனுப்பி இருந்தார்கள். ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய கட்டுரை இது. 


டிஸ்கி:- எவ்வளவு அரிய தகவல்கள். எவ்வளவு உழைப்பு அதோடு கூடவே தன்னடக்கம். பிரமிப்பாய் இருக்கிறது சார். இலக்கு நோக்கிய பயணத்தில் உங்கள் விடாமுயற்சி வெற்றி ஈட்டித் தந்தது. உங்களை முன்மாதிரியாகக் கொள்கிறேன். புத்தர் சிலை, சமண தீர்த்தங்கரர் சிலைகளை உங்கள் பதிவில் பார்த்தபோதே மிரண்டிருக்கிறேன். குமாஸ்தா பணியிலிருந்து கொண்டே முனைவர் பட்டம் பெற்றது மாபெரும் சிறப்பு. சாட்டர்டே ஜாலி கார்னரை சிலாக்கியமான ஒன்றாக ஆக்கியமைக்கும் அன்பும் நன்றியும். :) தொடரட்டும் உங்கள் தேடல்கள். வாழ்க வளமுடன்.


ஒரு சாதனையைச் செய்வதற்கு ஓர் இலக்கினை நோக்கிய உறுதியான பயணமும் மன உறுதியும் தேவை என்பதை எனது ஆய்வின் அனுபவம் உணர்த்தியது. 1993வாக்கில் பௌத்தம் தொடர்பான ஆய்வில் தடம் பதிக்கும்போது நான் எதிர்கொண்ட நேர்மறைக் கருத்துகளைவிட எதிர்மறைக் கருத்துகள் அதிகமானவை. எதிர்மறைக் கருத்துகளை நேர்மறையாக்கிக் கொண்டு களம் இறங்கியதால் தமிழ்நாட்டில் கால் நூற்றாண்டு காலத்தில் 29 புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நண்பர்களும் ஆய்வாளர்களும் ஆசிரியர்களும் அப்போது சொன்னவற்றைச் சிந்திக்கும்போது இக்களத்தில் எவ்வாறு நான் துணிவோடு இறங்கினேன் என்பது எனக்கு வியப்பாக உள்ளது.  ·         தம்பிநீ பாக்குற அலுவலக வேலையை முழுசாப் பாரு. அதுபோதும்.
·         உன்னாலெல்லாம் முடியாது. ஆய்வுங்கிறது கடல்.
·         ஆய்வுப் பணிய கல்வியாளர்கள்தான் பாக்க முடியும். அனாவசியமா இதுல தலையிடாதே. உன்னால முடியாது.
·         வேலையும் பாத்துக்கிட்டுஆய்வும் செய்யறதா அது எப்படி?
·         ஏம்ப்பா படிச்சுட்டு இன்னம நீ ஆசிரியரா ஆவப்போறியா. இப்படியே இருந்து  வேலையைப் பார்த்துக்கிட்டு ஏதாவது பதவி உயர்வு கிடைக்குதான்னா பார்.
·         கிளார்க் வேலை பாக்குற உனக்கு அதெல்லாம் முடியாது.
·         எப்பயும் ஆய்வுச் சிந்தனையோட இருந்தாத்தான் ஆய்வுல ஈடுபடலாம்.
·         அங்கங்க சில நூல்களைப் படி. குறிப்பெடு. காலவாரியாகத் தொகுத்துவிடு.
·         தடயமே இல்லாத ஒரு பொருள் குறித்து ஆய்வு செய்வது வீண்.
·         தலைப்பு அப்படியே இருக்கட்டும்சிரமமின்றி செய்திகளைத் தொகுத்து   உள்ளடக்கத்திற்குத் தந்துவிடு.
·         ஏதாவது 200-300 பக்கங்களுக்குத் தொகுத்து ஆங்காங்கே தலைப்புகள்உள் தலைப்புகள் கொடுத்து முடித்துவிடு.
·         அப்பப்ப சில கட்டுரைகளை எழுது. ஒண்ணா தொகுத்துடு. ஆய்வேடு தயார்.
·         உன்னால முடியாது. ரொம்ப ஆசைப்பட்டா ஒண்ணு செய். காளியம்மன்கோயில்,மாரியம்மன் கோயில் வரலாறுன்னு எடுத்து ஏதாவது  எழுதிக்கொடுத்து முடிச்சுடு.
·         நாலு புத்தகத்தைப் பாரு. அங்கங்க கொஞ்சத்தை எடு. முடிச்சுடு.
·         இல்லாததைத் தேடி அதில் புதியவற்றைக் கண்டுபிடி. வரலாற்றுக்கு உதவும்.
·         முன்னவர்கள் போட்ட பாதையில் செல். புதியதாக எதையாவது   வெளிக்கொணர முடிகிறதா என்று பார்.
·         எளிதில் எவரும் தொடாத துறை. கண்டிப்பாகச் சாதிக்கலாம்.
·         நேரம் காலம் பார்க்காம அலையணும். அப்பத்தான் முடியும்.
·         பௌத்த சமயச் சுவடு எதுவுமே இல்லை. ஆய்வை ஆரம்பித்தாலும் முடிக்க முடியாது.
·         நீ வாத்தியார் இல்லப்பா. உன்னால முடியாதுப்பா.
·         நம்மளோட வேலை பார்க்குற டைப்பிஸ்ட். இவரு ஆய்வு பண்ணப்போறாராம்.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக ஒரு ஆசிரிய நண்பர் சொன்னது மனதில் ஆழப்பதிந்தது. அவர், "நீ ஒரு கிளார்க். உன்னால எல்லாம் ஆய்வு செய்ய முடியாது", என்று கூறினார். இது நடந்தது 1993இல். 

அனைவர் சொன்ன கருத்துகளையும் உள்வாங்கிக்கொண்டேன். அனைத்தையும் தீர அலசிப் பார்த்தேன். அவரவர்களின் போக்கில்அவரவர் தகுதிக்கும் இயலாமைக்கும் தகுந்தபடியாக அவர்கள் கூறியதை உணர்ந்தேன். நம்மால் ஏன் முடியாது என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். எந்த ஒரு வெற்றிக்கும் தொடர் முயற்சியும்ஈடுபாடும்அயரா உழைப்பும் தேவை.  தமிழக வரலாற்றில் பல வருடங்களுக்குப் பின்னர் பேசப்படும் அளவில் ஒரு துறையில் நம்மால் முயன்ற வரை சாதிக்கமுடியும் என்ற நிலையில் களம் இறங்கினேன். 

அலுவலகப்பணி பாதிக்கப்படாத வகையில் விடுமுறை நாள்களில் எனது படிப்பும்ஆய்வும் தொடர்ந்ததுதொடர்கிறது. விடுமுறை நாள்களுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு எங்கெங்கு செல்லவேண்டும்எந்தந்த நூல்களைப் படிக்கவேண்டும் என்ற குறிப்பினை வைத்துக்கொண்டு நடைமுறைப்படுத்த ஆரம்பித்தேன். என் முயற்சிக்கு ஓரளவு பயன் கிடைத்ததை உணர ஆரம்பித்தேன்.

முக்கியமான அலுவலக வேலை இருக்கும் நாள்களில் ஆய்வு தொடர்பான செய்திகள் வரும்போது அதனை உறுதி செய்ய விடுப்பு எடுக்க இயலா நிலை அமையும். அவ்வாறான நிலைகளில் அதிகம் சிரமப்பட்டுள்ளேன். ஒரு குறிப்பிட்ட துறைக்கு நம்மால் ஆன பங்களிப்பு என்ற நிலையில் தொடர்ந்து வருகின்ற விடுமுறை நாள்களில் அதற்கான தீர்வினைக் காண ஆரம்பித்தேன்.

குடும்பம் என்ற நிலையில், மனைவி மற்றும் படித்துக்கொண்டிருககும் இரு மகன்கள். பொருளாதார நிலையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றுவருவதற்கான செலவினைப் பார்த்தபோது மலைப்பாக இருந்தது. ஆய்வினைத் தொடர்முடியுமோ என்ற ஐயம் பல முறை ஏற்பட்டது. இருந்தாலும் மேற்கொண்ட முயற்சிக்கு எந்த தடையும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதன் பயனாக எதிர்கொண்ட சிரமங்களும் அதிகமாயின.

நான் இருக்கும் இடத்தையும்அருகிலுள்ள இடங்களையும் களமாகக் கொண்டு சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் ஆய்வு தொடர்பான தேடலைத் தொடர்ந்ததன் விளைவு அரிய கண்டுபிடிப்புகளைக் காண உதவியது. 

பௌத்தம் தொடர்பான துறையில் முதன்மை ஆதாரங்களாகக் கொள்ளும் அளவு இக்கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன என்பதை நினைக்கும்போது நான்  பெருமை அடைகிறேன். 1993இல் சற்று நான் யோசித்து பின்வாங்கியிருந்தால் என் முயற்சியில் தோற்றிருப்பேன். எதிர்மறைக் கருத்துகளையும் நேர்மறைக் கருத்துக்களாகக் கொண்டு நாம் எடுக்கும் முயற்சிகள் உரிய பலனைத் தரும் என்பதைத் தற்போது உணர்கிறேன். 

"நீ ஒரு கிளார்க். உன்னால எல்லாம் ஆய்வு செய்ய முடியாது", என்று கூறிய ஆசிரிய நண்பர் சில நாள்களுக்கு முன்பு என்னை நேரில் பார்த்து தான் அப்போது சொன்னதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டாம் என்று இருக்கையில் வந்து பாராட்டிவிட்டுச் சென்றார். "உங்களைப் போன்றோரின் கருத்துகளே என்னை ஓர் ஆய்வாளனாக ஆக்கிவிட்டன" என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்தேன். அவரும் வலிந்த, வெற்றுப் புன்னகையோடு விடை பெற்றார். இவரைப் போல பலரை அடையாளம் காண உதவியது எனது ஆய்வுக்களம். 

பௌத்தம் மற்றும் சமணம் (65 கட்டுரைகள்), பிற துறைகள் (65), சிறுகதைகள் (40), தமிழ் விக்கிபீடியா (300+), ஆஙகில விக்கிபீடியா (100+), நாளிதழ்களில் கட்டுரைகள் (20), சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ  (85), முனைவர் ஜம்புலிங்கம் வலைப்பூ (135), கண்டுபிடிப்பு பற்றிய செய்திகள் (150+), எண்ணிடலங்கா வாசகர் கடிதங்கள்  என்ற நிலையில் 800க்கும் மேற்பட்ட பதிவுகளையும் ஆறு நூல்களையும் எழுதவும், 16 புத்தர் சிலைகளையும் 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் கண்டுபிடிக்கவும் உதவியது அப்போது எடுத்த தீர்க்கமான முடிவே. தமிழுலகிற்கு என்னால் ஆன எழுத்துபபணியும் ஆய்வுப்பணியும் தொடரும். 

நான் ரசிக்கும் இயக்குநர் பாலசந்தரின் திரைப்படம் ஒன்றைப் பற்றி ஆங்கில தி இந்து நாளிதழில் வந்த விமர்சனத்தில் "அவருடன் போட்டி போட ஒருவரும் இல்லை. ஆகையால் அவர் தனக்குத் தானே போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்" என்று படித்தது இன்னும் என் நினைவில் உள்ளது. இதனை அப்படியே எனக்குப் பொருத்திப் பார்த்து மனம் நிறைவு கொள்கிறேன். எனது பயணம் தொடரும், என் எழுத்துக்கும் ஆய்விற்கும் துணை நிற்கும் அனைவருடைய வாழ்த்துக்களுடனும். 
----------------------------
ஆய்வு தொடர்பான சந்திப்புகள்
வலைப்பதிவர் திரு துரைராஜ் எங்கள் இல்லம் வந்திருந்தார். ஆய்வு தொடங்கி ஆன்மீகம் வரை பல துறைகளில் நல்ல உரையாடல்.
திரு துரை செல்வராஜ் உடன் ஜம்புலிங்கம்
(எங்கள் இல்லம், 15 நவம்பர் 2016)

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிற்பத்துறை சார்பாக நடைபெற்ற பன்முகப்பார்வையில் சமணக்கலை என்ற தலைப்பிலான பயிலரங்கில் (15-23 நவம்பர் 2016) கலந்துகொள்ள வந்த அறிஞர் பெருமக்கள் என்னைக் காண வந்திருந்தனர். ஆய்வுகள் தொடர்பாக சிறிய விவாதம். இவர்கள் என்னைக் காண வந்ததைப் பெரும் பேறாகக் கருதுகிறேன். 2006இல் குழுமூரில் புத்தர் சிலை கண்டுபிடிக்க உதவிய திரு ம.செல்வபாண்டியன், பெரம்பலூர் மாவட்டத்தில் சமணம் என்ற தலைப்பில் உரையாற்றியதை என்னுடன் பகிர்ந்து கொண்டார். 
முனைவர் லதா, திரு அப்பண்டைராஜன், திரு கனக அஜிததாஸ், திரு சுகுமாரன்  உடன் ஜம்புலிங்கம் (தமிழ்ப்பல்கலைக்கழகம், 21 நவம்பர் 2016)


திரு ம.செல்வபாண்டியன் உடன் ஜம்புலிங்கம்
(தமிழ்ப்பல்கலைக்கழகம், 21 நவம்பர் 2016)
தமிழ் இன்று இதழுக்காக எழுதிய பதிவின் மேம்பட்ட வடிவம். 

Tuesday, 1 November 2016

பெரம்பலூர் திரு இரத்தினம் ஜெயபால் வருகை

ஆகஸ்டு 2016இல் ஒரு நாள். பெரம்பலூரிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. திரு இரத்தினம் ஜெயபால் என்பவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். என் பௌத்த ஆய்வு தொடர்பான வலைப்பூவைத் தொடர்ந்து படித்து வருவதாகவும், தான் எழுதவுள்ள நூல் தொடர்பாக என்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். பிற நாள்களில் அலுவலகப்பணி என்ற நிலையில் அரசு விடுமுறை நாள்களில் மட்டுமே அறிஞர்களையும், நண்பர்களையும் ஆய்வு தொடர்பாக சந்தித்து வரும் நிலையில் வாய்ப்பான ஒரு விடுமுறை நாளில் வரும்படி கூறினேன். ஓய்வு நேரம் ஆய்வு நேரமே.
திரு இரத்தினம் ஜெயபால் உடன் ஜம்புலிங்கம் (இல்ல நூலகத்தில்)
இருவருக்கும் வசதியான 15 ஆகஸ்டு 2016 அன்று வருவதாகக் கூறி, அன்று வந்திருந்தார். பேரூராட்சியில் இணை இயக்குநராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்ற அவர் தொல் பழங்காலம் முதல் தற்காலம் வரை பெரம்பலூர் வட்டார வரலாறு தொடர்பாக நூல் எழுதவுள்ளதாகவும், பௌத்தம் மற்றும் சமணம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செய்திளைப் பற்றி அறிய விரும்புவதாகவும் தன் ஆவலை வெளிப்படுத்தினார். பெரம்பலூரைத் தலைநகராகக் கொண்டு அமைந்துள்ள இம்மாவட்டத்தில் அரும்பாவூர், இலப்பைகுடிகாடு, குறும்பாளூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சிகள் அமைந்துள்ளன. பெரம்பலூர் பகுதியில் பௌத்த ஆய்விற்காக களப்பணி சென்றிருந்த நிலையில் அவர் கூறிய சில ஊர்களை நான் முன்னரே அறிந்திருந்தேன். பெரம்பலூரைப் பற்றிய அவரது ஆர்வத்தையும், செய்திகளைத் திரட்டுவதற்காக அவர் மேற்கொண்டுள்ள முயற்சியையும் பாராட்டினேன். அந்த பகுதியைப் பற்றி அவர் கூறிய செய்திகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. பெரம்பலூரைப் பற்றிய செய்திகளைத் திரட்டி அனாயாசமாக பகிர்ந்துகொண்டார்.  

விவாதத்தின்போது பெரம்பலூர் மாவட்டத்தில் பௌத்தம் தொடர்பாக என் ஆய்வேட்டைக் காண விழைவதாகக் கூறினார். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒகுளூர் மற்றும் பரவாய் ஆகிய இடங்களில் நான் பார்த்த புத்தர் சிலைகளைப் பற்றிக் கூறினேன். அந்த சிலைகளை அவர் பார்த்துவிட்டதாகக் கூறினார். ஒரு துறை தொடர்பான செய்திகள் முழுமையாக  நூலில் இடம் பெறவேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கனவாக அமைந்தன. 

என் பௌத்த ஆய்வினைத் தொடங்கிய காலகட்டத்தில் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், அமரர் திரு கும்பகோணம் சேதுராமன், திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி, முனைவர் இரா.கலைக்கோவன், திரு அய்யம்பேட்டை செல்வராஜ், திரு தில்லை கோவிந்தராஜன், முனைவர் ராஜா முகமது உள்ளிட்ட பல அறிஞர்களைச் சந்திக்கச் சென்றது என் நினைவிற்கு வந்தது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பல ஆசிரியப் பெருமக்கள் என் ஆய்விற்கு நல்ல கருத்துகளை வழங்கினார்கள். என் நெறியாட்டியான முனைவர் க.பாஸ்கரன் (இந்நாள் துணைவேந்தர்) அவர்கள் என் ஆய்வேடு சிறப்பாக அமையக் காரணமாக இருந்தார். ஆய்வேடு உருப்பெறும் காலத்திலும் தொடர்ந்து நான் புத்தர் சிலைகளைக் கண்டுபிடிக்கும்போதும் பெற்று வரும் அனுபவங்கள் என் எழுத்தையும் ஆய்வினையும் சிறப்புற அமைக்க உதவுவதை கண்டுவருகிறேன். 

அந்நிலையில் பெரம்பலூர் தொடர்பாக வெளியாகியுள்ள நூல்களை முடிந்தவரைப் பார்க்கும்படி கூறினேன். முகநூலில் தொடர்ந்து பதிவுகளை எழுதும் திரு ஆறகழூர் வெங்கடேசன் (https://www.facebook.com/venkatesanpon) மற்றும் திரு ம. செல்வபாண்டியன் (https://www.facebook.com/mahathma.selvapandiyan) ஆகியோரைப் பற்றியும் அவர்கள் புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றிய பதிவுகளைத் தொடர்ந்து எழுதுவதைப் பற்றியும் கூறினேன். உடனே அவர் அவ்விருவரையும் சந்தித்ததாகக் கூறினார். குழுமூரில் புத்தர் சிலையைக் கண்டுபிடிக்க திரு செல்வபாண்டியன் உதவியாக இருந்தார். பல்துறை சாராத பலர் இவ்வாறாக மேற்கொள்ளும் முயற்சிகள் நமக்கு பிரமிப்பை ஊட்டுவனவாக உள்ளன. பௌத்த ஆய்வில் நான் இறங்கியபோது பலர் அந்த நிலையில் என்னைப் பாராட்டியது இன்னும் என் நினைவில் உள்ளது. 
திரு பெரியார்தாசன் உடன் ஜம்புலிங்கம் (28.2.2002)

சுமார் 15 வருடங்களுக்கு முன் ஒரு கருத்தரங்கிற்காக எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்த பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களைச் சந்தித்தேன். என் ஆய்வைப் பற்றி ஆர்வமாகப் பேசி, களப்பணியைக் குறித்து பாராட்டினார். விவாதத்தின் நிறைவில் அவர், என்னிடம்,  "நீங்கள் என்ன பணிநிலையில் இருக்கின்றீர்கள்" என்றார். அப்போது நான், "ஐயா, நான் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்க்கிறேன்" என்றேன். அதற்கு அவர் "என்னைப் போன்ற ஆசிரியரைவிட உங்களைப் போன்றோரால்தான் இவ்வாறாக சாதிக்க முடியும்" என்று கூறி என் ஆய்விற்கு வாழ்த்து தெரிவித்தார். திரு ஜெயபால் அவர்களுடன் பேசும்போது அதனை நான் உணர்ந்தேன். அரசுத்துறையில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற அவருடைய சுறுசுறுப்பையும், ஈடுபாட்டையும் கண்டு வியந்தேன். தேவையான விவரங்களைக் கேட்டறிந்த அவர், வாய்ப்பு கிடைக்கும்போது தன் ஊருக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அவரது நூலின் அச்சுப்பணி சிறப்பாக அமையவும் வாழ்த்து தெரிவித்தேன்.  வரலாற்று ஆர்வலர் ஒருவருடன் அந்த காலைப்பொழுது இனிமையாக அமைந்தது.  

திரு இரத்தினம் ஜெயபால் மின்னஞ்சல் முகவரி : jayabalrathinam@gmail.com

Saturday, 1 October 2016

பௌத்த சுவட்டைத் தேடி : அரியலூர்

10 பிப்ரவரி 1997
சோழ நாட்டில் பௌத்தம் என்ற எனது ஆய்வில் திருச்சி மாவட்டமும் அடங்கும் என்ற நிலையில் திருச்சி மாவட்டத்திலுள்ள ஊர்களுக்கு களப்பணி செல்லத் திட்டமிட்டேன். தஞ்சாவூரில் பல இடங்களைச் சுற்றியதால் ஓரளவு என்னால் திட்டமிட முடிந்தது. திருச்சியில் பார்க்வேண்டியவை மற்றும் பார்க்க வேண்டியவர்கள் என்ற நிலையில் திட்டமிட்டு தொல்லியல் துறை பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் அருங்காட்சியகம் சென்றேன்.  அப்போது திருச்சி அருங்காட்சியக் காப்பாளர் திரு ராஜ்மோகன் அவர்களுடன் விவாதித்ததில் எனக்குக் கிடைத்த தகவல்களில் ஒன்று, அரியலூர் கோட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒரு புத்தர் சிலை என்பதுதான். நான் களப்பணி சென்ற காலத்தில் அரியலூர் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. ஆய்வின் களம் என்ற நிலையில் அரியலூர் செல்லும் நாளுக்காகக் காத்திருந்தேன்.  

டி.என்.வாசுதேவராவ் (1979) ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் மற்றும்  புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் புத்தர் சிலைகள் உள்ள இடங்களாகக் குறிப்பிட்ட இடங்களில் அரியலூர் புத்தரும் ஒன்று. பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (French Institute of Pondicherry) தன் தொகுப்பில் இச்சிலையைப் பற்றிக் கூறியுள்ளது. பின்னர்தான் சிவராமலிங்கம் (1997) இச்சிலையைப் பற்றி குறிப்பிட்டதை அறிந்தேன். வரலாற்றறிஞர் முனைவர் அரியலூர் தியாகராஜன் முனைவர் சந்திரகுமார் இச்சிலையைப் பற்றிக் கூறியிருந்தனர்.

18 மார்ச் 1999
அரசு விடுமுறை (தெலுங்கு வருடப்பிறப்பு) நாளில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரியலூர் சென்றேன். அரியலூர் கோட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இருந்த சிலையைப் பார்த்ததும் சோழ நாட்டில் பிற இடங்களில் நான் பார்த்த பல புத்தர் சிலைகள் நினைவிற்கு வந்தன. இச்சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்தது. கோட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிலையைப் புகைப்படம் எடுக்க உதவி செய்து ஆய்வினைப் பாராட்டினார். அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். தொடர்ந்து இராயம்புரம், பரவாய், ஒகுளூர் சென்று நான்கு புத்தர் சிலைகளைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். இதனைப்பற்றி முன்பொரு பதிவில் விவாதித்துள்ளோம்.
அரியலூர் புத்தர் (தற்போது அருங்காட்சியகத்தில உள்ளது)
டிசம்பர் 2003
அவ்வப்போது அருகிலுள்ள அருங்காட்சியங்களுடன் தொடர்பு கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில் கங்கை கொண்ட சோழபுரம்  தொல்லியல் துறை அருங்காட்சியக் காப்பாட்சியர் என்னுடைய கடிதத்திற்கு கீழ்க்கண்டவாறு மறுமொழி எழுதியிருந்தார்.

அன்பார்ந்த ஐயா,
வணக்கம். தங்கள் கடிதம் கண்டு விவரம் அறிந்தேன். புதிதாகக் கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தர் சிற்பம் அரியலூர் கோட்டாட்சியர்அலுவலகத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகும். இச்சிற்பத்துடன் மொத்தம் மூன்று புத்தர் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர வேறு புத்தர் சிலையேதும் இங்கு இல்லை.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
(ஒம்)……………………..23.12.2003

அவரது கடிதம் கிடைத்ததும் அவருக்கு நன்றி கூறி கடிதம் எழுதினேன், எனது ஆய்விற்கு அவரது தகவல் மிகவும் உதவியாக இருக்கும் என்று அக்கடிதத்தில் கூறினேன்.

களப்பணியின்போது பொதுவிடத்தில் வெயிலிலும் மழையிலும் இருந்த ஒரு புத்தர் சிலை அருங்காட்சியகத்திற்குச் சென்றதறிந்து மகிழ்ந்தேன். இவ்வாறாக ஒருசில புத்தர் சிலைகள் மட்டுமே இவ்வாறாக உரிய நேரத்தில், இடத்தில் பாதுகாப்பாகச் சென்றடைகிறது.

2001-2007
பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு, பெரம்பலூர் மாவட்டத்துடன் 2002இல் இணைக்கப்பட்டு, மறுபடியும் நவம்பர் 2007இல் அரியலூர் மாவட்டம் உருவானது. (நன்றி : விக்கிபீடியா) இந்த நிலையில் தற்போது இந்த சிலை அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. 

Thursday, 1 September 2016

பௌத்த சுவட்டைத்தேடி : சுத்தமல்லி

21 மற்றும் 23 ஆகஸ்டு 1999
பௌத்த ஆய்வு தொடர்பாக களப்பணி மேற்கொண்டபோது தமிழகத்திலுள்ள பல அருங்காட்சியகங்களுக்குச் சென்று சோழ நாட்டு புத்தர் சிலைகள் தொடர்பான விவரங்களைச் சேகரிக்கச் சென்றேன். களத்தில் உள்ள சிலைகளைக் காணும்போது கிடைக்கும் அனுபவத்திலிருந்து வித்தியாசமானது அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளைக் காணும்போது கிடைக்கும் அனுபவம். அவ்வகையில் சுத்தமல்லி சிலையைக் கண்டேன். இந்த சுத்தமல்லி எந்த மாவட்டத்தில் தற்பொழுது உள்ளது என்ற ஆர்வத்தை உண்டாக்கியது இந்தப் பயணம். மற்ற புத்தர் சிலைகளிலிருந்து சற்று வித்தியாசமான நிலையில் இந்த புத்தர். வாருங்கள் பார்ப்போம். 
சுத்தமல்லி புத்தர், அரசு அருங்காட்சியகம், சென்னை
(புகைப்படம் : பா.ஜம்புலிங்கம், 1999)
சென்னை எழும்பூரிலுள்ள அரசு அருங்காட்சியகம் சென்றபோது சோழ நாடு தொடர்பான மூன்று புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது. அவை தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவலஞ்சுழி (நின்ற நிலை புத்தர்), எரையூர் (அமர்ந்த நிலை) மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுத்தமல்லி (அமர்ந்த நிலை) என்ற குறிப்புடன் இருந்தன. முதன்முதலாக நின்ற நிலையிலான புத்தரின் கற்சிலையை அங்குதான் கண்டேன். சுத்தமல்லி புத்தர் சிலை 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்ற குறிப்போடு (Accession No.1432/62) காணப்பட்டது. தஞ்சாவூர் (தஞ்சாவூர், நாகபட்டினம், திருவாரூர்) மற்றும் திருச்சி (திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர்) மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோது பல இடங்களின் மாவட்டங்கள் மாறியுள்ள நிலையில் சுத்தமல்லி தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது என்பதைக் காண வேண்டியுள்ளது.  

18 அக்டோபர் 2010
பிறிதொரு பணிக்காக சென்னை சென்றபோது அருங்காட்சியகம் சென்றேன். சோழ நாட்டைச் சார்ந்த, முன்னர் பார்த்த மூன்று  புத்தர் சிலைகளை மறுபடியும் கண்டேன். 

எரையூர் (திருவாரூர் மாவட்டம்): மயிலை சீனி.வேங்கடசாமி உள்ளிட்ட பல அறிஞர்கள் இச்சிலையைப் பற்றி விவாதித்துள்ளனர். எலயனூர், எலையூர் என்ற பலவாறான நிலையில் இந்த ஊரின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. 

திருவலஞ்சுழி (தஞ்சாவூர் மாவட்டம்): மயிலை சீனி.வேங்கடசாமி உள்ளிட்ட பல அறிஞர்கள் இச்சிலையைப் பற்றி விவாதித்துள்ளனர். 

சுத்தமல்லி (அரியலூர் மாவட்டம்):  மாவட்டங்கள் பிரிப்பு என்ற நிலையில் இச்சிலை இருந்த இடம் தற்போது அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.  மார்பில் மேலாடை, தலையில் தீச்சுடர் வடிவில் சுருள் முடி போன்றவை சோழ நாட்டில் பிற புத்தர் சிலைகளில் காணப்படுவதைப் போன்றே உள்ளன. சிலையின் இரு புறமும் (சமண தீர்த்தங்கரர் சிலைகளில் காணப்படுவது போன்று) யட்சர்கள் காணப்படுகின்றனர். அந்த நிலையில் இந்த சிலையில் வித்தியாசமாக உள்ளது. குழுமணி, மன்னார்குடி, கிள்ளியூர் போன்ற இடங்களில் உள்ள புத்தர் சிலைகள் சற்றொப்ப இச்சிலையைப் போலவே உள்ளன. அந்த நிலையில் இச்சிலை சற்று வித்தியாசமாக உள்ளது. புத்தர் சிலைகளில் சில வித்தியாசமான கூறுகளை இவ்வாறான களப்பணிகள் மூலமாகவே உணரமுடிகிறது. 

இந்த ஊர் உடையார்பாளையம் வட்டம் விக்கிரமங்கலம் அருகேயுள்ளதாக சிவராமலிங்கம் தன் நூலில் (Archaeological Atlas of the antique remains of Buddhism in Tamil Nadu, p.111) குறிப்பிட்டுள்ளார். மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் முன்னர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுத்தமல்லி தற்போது அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்ததாகக் கொள்ளலாம். இருந்தாலும் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ள களப்பணி மூலமாக இது உறுதி செய்யப்படும். 


துணை நின்றவை : 
களப்பணி தொகுதி 4, பக்.283,285  
களப்பணி தொகுதி 7, பக்.147  

Monday, 1 August 2016

புத்த தம்மம் அடிப்படைக்கொள்கைகள்

கடந்த பதிவில் களப்பணி சென்றுவந்த நிலையில் தற்போது பௌத்தக் கொள்கைகள் தொடர்பான ஒரு நூலைப் பார்ப்போம். ஆய்வில் சேர்ந்த காலகட்டத்தில் (1993) நான் படித்த நூல்களில் ஒன்று பௌத்த அடிப்படைக் கொள்கைகளைக் கொண்ட புத்த தம்மம் அடிப்படைக்கொள்கைகள் என்னும் நூல். பௌத்தக் கொள்கைகளை மிகவும் எளிதாக இந்நூல் முன்வைக்கிறது. புத்தரும் பவுத்தமும், புத்தரின் வாழ்க்கை, தம்மம், சில அடிப்படை போதனைகள், நான்கு உன்னத வாய்மைகள், உன்னத எண்வழிப்பாதை, மனித ஆளுமையின் பகுப்பாய்வு, இருப்பின் உண்மை நிலை, மறுபிறப்பு, தியானம், நிப்பாணம், அறவோர், சங்கம் போன்றவை உள்ளிட்ட 21 தலைப்புகளைக் கொண்டமைந்துள்ளது.  இந்நூலில் காணப்படும் சில கருத்துகளைக் காண்போம்.    

புத்தரின் போதனைகள் கற்கத்தக்கன. பயிலத்தக்கன. உணரத்தக்கன. நடைமுறைப்படுத்துதலும், உணர்தலும் வலியுறுத்தப்படுகின்றன. ஏனெனில் வை உடனுக்குடன் பயனளிக்கின்றன. (ப.8)

ஒருவர் ஒரு கயிற்கைக் கண்டு பாம்பென எண்ணிக்கொண்டால் அங்கே அச்சம், சலனம், கவலை, துன்பம் அனைத்தும் தோன்றுகிறது. இருந்தாலும், அது உண்மையில் ஒரு துண்டுக்கயிறே என்று அவர் அறியமுற்படும்போது அச்சம், சலனம், கவலை, துன்பம் ஆகிய எதுவும் இல்லை. மாறாக மகிழ்ச்சியும் நம்பிக்கையுமே நிலவும்.  (ப.16)

பிரபஞ்சத்தில், மாறாததும், நிலையானதும் எப்போதும் ஒன்றாகவே இருப்பதுமான ஏதுமே இல்லையெனப் பௌத்தம் போதிக்கிறது. (ப.20)

நம் மனங்கள் அவாவினால், அகந்தையால் தவறான கருத்துநோக்குகளால் மாசுற்றிருப்பதன் காரணமாக நாம் 'நான்''எனது' என்ற வகையில் சிந்திக்கிறோம். ஒருவர் 'இது என்னுடையது' என எண்ணும்போது அது அவாவினால் உந்தப்பட்டதாயுள்ளது. ஒருவர் 'இது நான்' என எண்ணும்போது அது அகந்தையால் உந்தப்பட்டதாயுள்ளது. ஒருவர் 'இது நானே' என எண்ணும்போது அது தவறான கருத்து நோக்கால் உந்தப்பட்டதாயுள்ளது. (ப.24)

தன்னுடைய மதத்தைப் பெருமைப்படுத்துவதற்காக யாரேனும் பிறர் மதத்தை இழிவுபடுத்தினால், அதன் காரணமாக அவன் தன் மதத்தையே இழிவுபடுத்திக் கொள்கின்றவனாவான். இவ்வாறு செய்வது மேல் நோக்கி எச்சில் உமிழ்பவன் தன் முகத்தையே கறைபடுத்திக்கொள்வது போலாகும். (ப.26)

மனம் ஒன்றைவிட்டு மற்றொன்றுக்குத் தாவும் தன்மை உடையது. பேராசை, பொறாமை, வெறுப்பு, ஏமாற்றம் முதலிய குறைபாடான குணங்களால் எளிதில் கறை படியக்கூடியது. மனிதர்களைப் பரபரப்புக்கும் கவலைக்கும் உள்ளாக்குவது. மனத்தை தியானத்தால் அமைதிப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் முடியும். (46)

நிப்பாணம் என்பது உன்னதமான இன்ப நிலையாகும். துன்பமிலா வாழ்நிலையாகும். பௌத்தர்களின் இறுதி இலக்கு நிப்பாணமே. நிப்பாணம் இவ்வாழ்விலேயே அடையப்படுவது, இறந்தபின் அடையப்படுவதல்ல. எடுத்துக்காட்டாக புத்தர் தமது 35ஆவது வயதில் நிப்பாணம் எய்தி 80ஆவது வயது வரை உயிர் வாழ்ந்தார். (ப.49)

பசித்திருக்கும் மனிதனிடம் போதனை செய்வதில் பொருளில்லை என்று காட்டினார் புத்தர். அலவி என்னுமிடத்தில் ஒரு குறிப்பிட்ட ஏழை மனிதர் மிகுந்த பசியால் வாடியபோதும், தம்ம போதனையைச் செவிமடுக்க வந்தார். புத்தர், அவருக்கு உணவளிக்கக் கூறி, அவர் பசி தணிந்தபின்னரே அவர்க்கு தம்மத்தைப் போதித்தார். (69).

பௌத்தக்கொள்கைகள் எக்காலத்திற்கும் பொருந்தி வருவன. நம்மை நல்வழிப்படுத்துவன. அக்கொள்கைகளைக் கொண்டு அமைந்துள்ள இந்நூலை வாசிப்போம், வாருங்கள்.

நூல் : புத்த தம்மம் அடிப்படைக்கொள்கைகள் 
ஆசிரியர் : எஸ்.ஏ.எதிரிவீர
தமிழாக்கம் : டாக்டர் வீ.சித்தார்த்தா (பெரியார்தாசன்)
வெளியிடுபவர் : பிக்கு யு ரதனபால, மகாபோதி சொஸைட்டி, 17, கென்னட் லேன், எழும்பூர், சென்னை 600 008
Reprinted and donated by: The Corporate Body of the Buddha Educational Foundation, Taipei Taiwan, ROC, 1996


Friday, 1 July 2016

பௌத்த சுவட்டைத் தேடி : தஞ்சாவூர் கீழவாசல்

1999இல் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் (French Institute of Pondicherry) புத்தர் சிலை தொகுப்பில் இருந்த புகைப்படங்களில் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள வீரபத்திரர் சிற்பத்தைக் கண்டபோது, அது புத்தர் அல்ல என்றதும், நான் தெரிவித்ததன் அடிப்படையில் அந்நிறுவனத்தார் உரிய திருத்தத்தினை தம் தொகுப்பில் மேற்கொண்டதும், அந்த சிலையைப் பார்க்க சுமார் 20 ஆண்டுகள் ஆனதும் ஒரு மறக்க முடியாத அனுபவம். 1999இல் தொடங்கிய தேடல் சூன் 2016இல் நிசும்பசூதனி கோயிலின் குடமுழுக்கின்போது நிறைவேறியது.  சற்றே பின்னோக்கிச் செல்வோமா?

பிப்ரவரி 1999 
முதன்முதலாக என் ஆய்வு தொடர்பாக புத்தர் சிலைகளைப் பற்றிய விவரங்களைத் திரட்ட புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றபோது அங்குள்ள சுமார் 50க்கு மேற்பட்ட புத்தர் சிற்பங்கள் தொடர்பான பதிவுகளைக் காணமுடிந்தது. அப்பதிவுகளில் (எண்.5671.7) ஒரு சிலை கீழவாசல், தஞ்சாவூர் என்ற குறிப்புடன் வீரபத்திரர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புத்தர் சிலைகளைப் பற்றிய தொகுப்பில் இவ்வாறான புகைப்படம் இருந்தது வித்தியாசமாக இருந்தது. பாண்டிச்சேரி களப்பணி முடிந்து தஞ்சாவூர் திரும்பிய முதல் அந்த சிலை எங்கிருக்கிறது எனத் தேட ஆரம்பித்தேன். கீழவாசல் வெள்ளைபிள்ளையார் கோயில் தொடங்கி பகுதி முழுவதிலும் தேடினேன். அச்சிலையைப் பற்றி விசாரித்தேன். யாருக்கும் தெரியவில்லை. இருந்தாலும் விடாமல் தேடிக்கொண்டே இருந்தேன். அச்சிலையைப் பற்றி யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. 

நவம்பர் 2011
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகளை ஆவணப்படுத்தும் திட்டத்தின்கீழ் களப்பணி வருவதாகவும், வாய்ப்பிருப்பின் என்னையும் திரு தில்லை.கோவிந்தராஜன் அவர்களையும் வரும்படியும் பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் முனைவர் முருகேசன் கேட்டுக்கொண்டபடி 2.11.2011 அன்று திட்டமிட்டு 3.11.2011 பிரெஞ்சு ஆய்வு நிறுவன ஆய்வாளர் முனைவர் முருகேசன், அந்நிறுவன புகைப்படக்கலைஞர் திரு ரமேஷ்குமார், திரு தில்லை. கோவிந்தராஜன் ஆகியோரைக் கொண்ட குழுவுடன் களப்பணி மேற்கொண்டோம். களப்பணியின்போது புகைப்படத்தை வைத்து நோக்கும்போது கீழவாசல் பகுதியில் வீரபத்திரர் என்ற குறிப்புடன் உள்ள சிலை புத்தர் சிலை அல்ல என்று அவரிடம் கூறினேன். அப்போது அவர் தம் நிறுவனத்தின் பதிவுகளில் உரிய திருத்தம் மேற்கொள்வதாகக் கூறினார். அந்த சிலை இருக்கும் விவரம் பற்றிக் கேட்கத் தவறிவிட்டேன். அதுநாள் வரையில் அந்த சிலையை நான் பார்க்கவில்லை. அதே சமயம் அச்சிலையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். 

சூன் 2016

23 சூன் 2016 குடமுழுக்கினை முன்னிட்டு நிசும்பசூதனி கோயிலுக்கு 18 சூன் 2016 அன்று என் மனைவியுடன் சென்றபோது அவர் நிசும்பசூதனி கோயிலுக்கு அருகில் ஒரு சிவன் கோயில் இருப்பதாகக் கூறி அழைத்துச் சென்றார். பூமால்ராவுத்தன் கோயில் என்று அழைக்கப்படுகின்ற வைத்யநாதேஸ்வரர் கோயிலுக்கு அதுவரை நான் சென்றதில்லை.
மூலவர் கருவறையுடன் கூடிய விமானம்

கோயிலின் மற்றொரு நுழைவாயில்

கோயிலின் நுழைவாயில்
அங்கு 1999 முதல் நான் வெளியில் தேடி வந்த முன்னர் புத்தர் சிலைகள் பட்டியலில் இடம் பெற்றிருந்த சிலையினைக் கண்டேன். சிலையைப் புகைப்படம் எடுத்தேன். 1999இல் புத்தராக பட்டியலில் காணப்பட்ட இச்சிலையை நேரில் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தேன்.  
புத்தராக இல்லாவிட்டாலும்  புதுச்சேரி பிரெஞ்சு நிறுவன ஆராய்ச்சியாளர் முருகேசன் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பூமால்ராவுத்தன் கோயிலில் சிலை உள்ள விவரத்தையும், அந்த சிலையை அங்கு பிச்சாண்டவர் என்ற குறிப்போடு பார்த்ததையும் கூறினேன். அப்போது அவர் அக்கோயிலில் இருப்பது தனக்குத் தெரியும் என்றும், பின்னர் நான் கூறியதன் அடிப்படையில் புத்தர் சிலை பட்டியலில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். அவரிடம் தெளிவாக நான் கேட்டிருந்தால் அந்த சிலை அக்கோயிலில் இருப்பதை முன்னரே பார்த்திருப்பேன். வரலாற்றறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் இச்சிலை யோக பட்டத்தில் உள்ள சிவன் சிலை என்றும், இச்சிலை கி.பி.8-9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும்  தஞ்சாவூர் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய களப்பணிகளில் புத்தர் சிலைகளைத் தேடிச் சென்றுள்ளேன்.  புத்தர் சிலை அல்லாத ஒரு சிலையைப் பற்றிய பதிவினை உறுதி செய்ய இக்களப்பணி எனக்கு உதவியது என் ஆய்வில் மறக்கமுடியாத அனுபவமே. பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் தம் பட்டியலில் உரிய திருத்தம் மேற்கொண்டு தெரிவித்ததும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

நன்றி  
உடன் வந்த என் மனைவி திருமதி பாக்கியவதி
தகவலை உறுதி செய்த பிரெஞ்சு நிறுவன ஆய்வாளர் முனைவர் முருகேசன் 

Wednesday, 1 June 2016

தம்ம பதம் : ப.ராமஸ்வாமி

புத்த பெருமான் அருளிய அறநெறிகளைக் கொண்டது தம்ம பதம். பௌத்தத் திருமுறைகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்நூல் ப.இராமஸ்வாமி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இரட்டைச் செய்யுட்கள், கருத்துடைமை, சிந்தனை, புஷ்பங்கள், பேதை, ஞானி, முனிவர், ஆயிரம், தீயொழுக்கம், தண்டனை, முதுமை, ஆன்மா, உலகம், புத்தர், களிப்பு, இன்பம், கோபம், குற்றம், சான்றோர், மார்க்கம், பலகை, நரகம், யானை, அவா பிக்கு, பிராமணன் என்ற 26 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.  இந்நூலில் உள்ள அறநெறிக்கருத்துகள் சிலவற்றைப் பார்ப்போம்.  
இரட்டைச் செய்யுள்:(ஒவ்வொரு கருத்தும் இரண்டு சூத்திரங்களால் விளக்கப் பெற்றது)
கூரை செம்மையாக வேயப்படாத வீட்டினுள் மழை நீர் பாய்வதுபோல் நன்னெறிப் பயிற்சியில்லாத மனத்தினுள் ஆசைகள் புகுந்துவிடுகின்றன. (13)
கூரை செம்மையாக வேயப்பட்ட வீட்டினுள் மழை நீர் இறங்காததுபோல் நன்னெறிப் பயிற்சியுள்ள மனத்தினுள் ஆசைகள் நுழைய முடியா. (14)

பேதை: 
எந்தக் காரியத்தைச் செய்தால் பின்னால் மனம் இன்பமடையுமோ, எதன் பயனை உள்ளக்களிப்போடு அனுபவிக்க வேண்டியிருக்குமோ, அதுவே நற்செயல். (10) 

ஞானி: 
நன்மக்கள் எதிலும் பற்றுக் கொள்வதில்லை; இன்பங்களை விரும்பி இரைச்சல் போடுவதில்லை. சுகமோ, துக்கமோ வந்தால், ஞானிகள் எழுச்சியடைவதுமில்லைஅயர்வு கொள்வதுமில்லை. (3) 

ஆயிரம்:(சூத்திரங்களில் ஆயிரம் என்ற சொல் பல முறை வருவதால் அவ்வாறே தலைப்பு அமைந்தது)
மாதந்தோறும் ஆயிரம் யாகங்களாக நூறு வருடம் யாகம் செய்பவன் தம்மைத் தாமே அடக்கிக் கொண்ட ஒருவரை ஒரு கணம் வணங்குதல் அந்த நூறு வருட வேள்வியைவிட மேலானது. (5)

தண்டனை: 
எவரிடத்தும் கடுஞ்சொல் பேசாதே. அதே முறையில் மற்றவர்களும் பதிலுரைப்பார்கள். கோபமான பேச்சு துக்கமளிப்பதால், பதில் பேச்சு உன்னைத் தாக்கும். (5) 

முதுமை: 
அஸ்திகளைக் கொண்டு ஒரு மாளிகை கட்டி ஊனும் உதிரமும் கலந்த சாந்து பூசப் பட்டிருக்கிறது. இதிலே வசிக்கின்றன முதுமையும், மரணமும், கர்வமும், கபடமும். (5)

ஆன்மா: 
தீமை பயக்கும் தீவினைகளைச் செய்தல் எளிது. நன்மை பயக்கும் நல்வினையைச் செய்தலே மிகவும் கஷ்டமாகும். (7)  

புத்தர்: 
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்;
அரிது அரிது மானிட வாழ்க்கை;
அரிது அரிது நல்லறம் கேட்டல்;
அரிது அரிது புத்த நிலை அடைதல். (4) 

இன்பம்: 
ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது;
ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது;
ஆசையற்றவனுக்குச் சோகமில்லை; - பயம்தான் ஏது? (4)  

கோபம்: 
மனத்தில் வரும் கோபத்தை அடக்கிக் காக்கவும். மன அடக்கத்தில் பழக வேண்டும். மனத்தில் உண்டாகும் தீமையை அழித்து, நல்ல ஒழுக்கத்தைப் பேணி வரவும். (12)  

குற்றம்: 
இரும்பிலிருந்து துரு தோன்றினாலும், அதை அது அரித்துவிடுகிறது. அதுபோலவே (அற நெறி) பிறழ்ந்தவனை அவனுடைய கருமங்களே தீய கதியில் கொண்டு சேர்க்கின்றன. (5) 

அவா: 
இவ்வுலகில் எவன் அடக்க அரிதான இந்தக் கொடிய அவாவை அடக்கி வெல்கிறானோ, அவனுடைய சோகங்கள், தாமரையிலையில் நீர்த்துளிகள் ஒட்டாமல் சிதறுவதுபோல் உதிர்ந்து ஒழிகின்றன. (2)

நூல் : தம்ம பதம் (புத்தர் பெருமான் அருளிய அறநெறி) 
தமிழாக்கம் : ப.ராமஸ்வாமி
பதிப்பகம் : முல்லை நிலையம், 9, பாரதி நகர், முதல் தெரு, தி.நகர், சென்னை 600 017
மறுபதிப்பு பதிப்பு : 2000

1/6/206  மதியம் மேம்படுத்தப்பட்டது.