Thursday, 1 October 2015

பௌத்த நல்லிணக்க சிந்தனைகள்

முந்தைய பதிவுகளில் பௌத்தம் தொடர்பாக களப்பணிகள் குறித்தும், பௌத்தம் தொடர்பாக வெளிவந்த நூல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இப்பதிவில் பௌத்தம் போற்றும் நல்லிணக்கச் சிந்தனைகளைக் காண்போம். பௌத்தம் போதித்த முதன்மையான நன்னடத்தைகள் அன்புறு நேயம், கருணை, இரக்க நல்லின்பம், நிதானம் ஆகியவையாகும். இவற்றில் அன்புறு நேயம் முதலிடத்தைப் பெறுகிறது. இவ்வாறான நேயம் காணப்படும்போது வாழ்வில் நிம்மதியைக் காணமுடிகிறது. அது வீட்டையும் நாட்டையும் மேம்படுத்தும்.

நல்லிணக்கத்தின் அடிப்படை அன்பு
நல்லிணக்கம் பேணப்படுவதற்கு அன்பு அடிப்படையாக அமைகிறது. நல்ல சிந்தனைகள் மேம்படும் நிலையில்  நல்லிணக்கம் நிலவும். அவ்வாறான நல்லிணக்கத்தை பல நிலைகளில் உருவாக்கிக்கொள்ள முடியும்.

பகைமை தவிர்த்தல்
"இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்8ல. பகைமை அன்பினாலோய தணியும். இதுவே பண்டைய நெறி" என்கிறது பௌத்த அடிப்படை நூலான தம்ம பதம்"தாய் தன் சேயை அரவணைத்துப் போற்றுவது போல, உங்கள் அன்பு உலகிலே பரவட்டும், ஒவ்வோர் உயிரையும் அரவணைத்துக் கொள்ளட்டும், தடையற்ற சுதந்திரத்துடன் அது உயரேயும் கீழேயும் பறக்கட்டும், துவேஷமும், பகையும் விலகி ஒழியட்டும் என்கிறது பௌத்த நூலான சுத்த நிபாதம்

கோபத்தை அடக்குதல்
"வாக்கினால் வரும் கோபத்தை அடக்கிக் காக்கவும். நா அடக்கத்தில் பழகவேண்டும். வாக்கினால் உண்டாகும் தீமையை அழித்து நல்லொழுக்கத்தைதப் பேணி வருக" என்றும், "மனத்தினால் வரும் கோபத்தை அடக்கிக் காக்கவும், மன அடக்கத்தில பழகவேண்டும். மனத்தில் உண்டாகும் தீமையை ஒழித்து நல்ல ஒழுக்கத்தைப் பேணி வருக" என்றும் தம்ம பதம் கூறுகிறது. எது நல்லது, எது தீயது என்பதைக் கண்டறிய கௌதம புத்தர் ஓர் எளிய வழியைக் காட்டியுள்ளார். "தங்களின் செயற்பாடுகள் தங்களுக்கோ பிறருக்கோ துன்பமிழைக்காவிட்டால் அதனை மேற்கொள்ளுங்கள். அவை திறனுடையவை, முழு நிறைவானவை, நல்லவை" என்பதே அவர் காட்டிய வழி.

துன்பம் தரா செயல்பாடுகள்
எவருக்கும் துன்பமிழைக்கா வகையில் அமையும் செயல்பாடுகள் அனைத்தும் நல்லிணக்கத்தில் முடியும். அச்சூழலில் சாத, சமயம், இனம், குலம் என்ற எந்தப் பிரிவுகளும் ஒரு தடையாக இருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு இல்லாத நிலையில்தான் மனித நேயம் மாய்க்கப்பட்டு, நல்லிணக்கம் என்ற ஆணிவேர் ஆட்டம் காண்கிறது. இதன் இறுதி நிலை வன்முறையில் வந்துமுடிகிறது. "வன்முறை விளைவிப்பது அச்சமே. தேசமே சச்சரவில் மூழ்கிவிடும். கொடூரமாய் மக்கள் திரிவதைக் காணுங்கள். பேராசை, வெறுப்பு, தற்பெருமை போன்றவற்றைக் கடக்கும் நிலையில் மக்கள் எங்கும் எப்போதும் இன்பமும் அமைதியும் அடையலாம்" என்கிறது சுத்த நிபாதம்.  

மானுடத்தின் ஒருமை
வாசெட்ட சுத்தம் எனப்படும் பௌத்த நூல் அனைத்து மனிதர்களும் ஒரே உயிரியல் வகையைச் சார்ந்தவர்கள் என்று கூறுகிறது. "தாவரங்களுக்கிடையேயும், விலங்குகளுக்கிடையேயும், பறவைகளுக்கிடையேயும், மீன்கள், பூச்சிகள், பாலூட்டிகள் ஆகியவற்றுக்கிடையேயும்  பல வகைகளும் இனங்களும் உள்ளன. ஆனால் மனிதரிடையே வேறுபாடு இல்லை". பிறப்பால் எவ்வித வேறுபாடும் இல்லாத நிலையில், ஒருவர் செய்யும் செயல்களே அவரை மேன்மக்களாக்கும். அவ்வாறான செயல்கள் நல்லிணக்கத்தை வளர்ப்பதாய் அமைய வேண்டும்.  

வீழ்ச்சிக்கான காரணங்கள்
"தீயோரை விரும்புவதும் நன்னடத்தையை வெறுப்பதும், பிறப்பு, செல்வம், குலம் ஆகியவற்றைக் கொண்டு பெருமைப்பட்டுப் பிறரைத் தூற்றுதலும், ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்படுதலும் ஒரு மனிதனின் வீழ்ச்சிக்குரிய காரணங்கள் பராபவ சுத்தம் என்ற பௌத்த நூல் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்று கூறுகிறது.

தாழ்வுற்ற மனிதன்
பௌத்தம், பிறப்பால் எவரும் தாழ்வுற்ற மனிதன் இல்லை என்றும், பிறப்பால் எவரும் உயர்ந்த மனிதன்  இல்லை என்றும் கூறுகிறது. வசல சுத்தம் என்ற பௌத்த நூல், "எவனொருவன் முன்கோபமுடையவனோ, வஞ்சகனோ, தன்னலமுடையவனோ, உயிர்களை வதைப்பவனோ, கருணையற்றவனோ, நல்லறிவுரைகளை மறந்துவிடுகின்றவனோ, பிறரைத் தவறாக வழிநடத்துகின்றவனோ, தீயவை புரிந்துவிட்டு நன்மை புரிந்ததுபோல நடக்கின்றவனோ, தற்பெருமையால் தன்னை உயர்த்திப் பேசிப் பிறரைத் தாழ்த்துகின்றானோ அவனே கீழான மனிதன்" என்று கூறுகிறது.

சமத்துவ நிலை
குலம், சாதி, இனம் என்ற பல்வேறு நிலைகளில் ஒவ்வொருவரும் வேறுபட்டு நிற்கும்போது அமைதியின்மை ஏற்படுகிறது. அதுதவிர பொறாமை, கோபம், வஞ்சம் போன்ற குணங்களும் பற்றிவிடுகின்றன. இவற்றிலிருந்து விடுபட சமத்துவ நிலையில் இருக்கவேண்டும் என்கிறது பௌத்தம். "சமத்துவ நிலைச் சாதனையைப் பயில்வாயாக. அதனால் எதிர்ப்புணர்ச்சியெல்லாம் கைவிடப்படும்" என்கிறது பௌத்த நூலான மத்யம நிகாயம். 

பிறர்க்குத் துன்பமோ, இன்பமோ எது நேர்ந்தாலும், அது தமக்கு நேர்ந்ததாகக் கருதக்கூடிய அளவு மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறான மனப்பக்குவம் நல்லிணக்கத்தை நம்முள் மேம்படுத்தும். இது போன்ற கோட்பாட்டினைத் தீர்மானிக்கும்போது புத்தர் கீழ்க்கண்டவற்றை வலியுறுத்துகிறார். இவற்றை நாம் மனதில் கொள்வோம். நல்லிணக்கச் சிந்தனைகளை மேம்படுத்துவோம்.

"நல்லோர்க்கு நான் நன்மை செய்கிறேன்.
தீயோர்க்கு நான் நன்மை செய்கிறேன். 
எனவே நான் நான்மையே செய்கிறேன்
-----------------------------------------------------------------------------
21.3.2010இல் மயிலாடுதுறை ஏ.வி.சி.கல்லூரியில் நடைபெற்ற மத நல்லிணக்கக் கருத்தரங்கில் அளிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்.
-----------------------------------------------------------------------------தி இந்து நாளிதழின் ஆண்டு விழாவையொட்டி, அவ்விதழைப் பற்றி நான் எழுதிய கடிதம் 27.9.2015 அன்று வெளியாகியுள்ளது. வெளியிட்ட தி இந்துவுக்கு நன்றி.