Thursday, 1 January 2015

பௌத்த சுவட்டைத் தேடி : திருநாகேஸ்வரம்

டிசம்பர் 1996
1993இல் பௌத்த ஆய்விற்குப் பதிவு செய்த முதல் பௌத்தம் தொடர்பான விவரங்களைக் குறித்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.  அப்போது, தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்  நண்பர் திரு நா. ராமகிருட்டிணன் (சிறப்பு நிலைத் தட்டச்சர்) திருநாகேஸ்வரம்- திருவிடைமருதூர் அருகே சன்னாபுரம் என்ற ஊருக்கு அருகில் புத்தர் சிலை உள்ளதாகக் கூறிக்கொள்கிறார்கள் என்றும், திருநாகேஸ்வரம் ராகுஸ்தலம் எனப்படும் கோயிலில் நான்கைந்து புத்தர் சிலைகளோ, சமணர் சிலையோ இருப்பதாகக்  கூறிக்கொள்கிறார்கள் என்றும் கூறியிருந்தார். சன்னாபுரம் சென்று சிலைகளைத் தேடினேன். எங்கும் சிலை இல்லை. சமணபுரம் என்பது சன்னாபுரம் ஆகிவிட்டது என்று அப்பகுதியில் கூறினர். போதிய நேரமின்மையால் திருநாகேஸ்வரம் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை.

 ஆகஸ்டு 1998
காலை மன்னார்குடிக்கு சமணக்கோயிலுக்குப் பயணித்தேன். அங்கிருந்த புத்தர் சிலையைப் பார்க்கச் சென்றபோது திரு ஜெ.சந்திரமோகன் அறிமுகமானார். அவர், கூறிய செய்திகளில் ஒன்று திருநாகேஸ்வரம் சிவன் கோயிலில் அம்மன் சன்னதியில் சமணர் சிலை உள்ளது என்பதாகும்.  தகவலை உறுதி செய்துகொண்டேன்.
திருநாகேஸ்வரம் செண்பகராண்யேஸ்வரர் கோயில் வளாகம்

1998இல் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம் (இரண்டர்ம் பகுதி கி.பி.900-1300) என்ற நூலில் திருநாகேஸ்வரம் கோயிலில் அம்மன் கோயில் திருசசுற்றின் பின்புறம், அமர்ந்த நிலையிலுள்ள புத்தர் சிற்பங்கள் காணப்படுகின்றன என்ற குறிப்பினைக் கண்டேன். 

செண்பகராண்யேஸ்வரர் கோயில் வளாகத்தில்
 பிப்ரவரி 1999
இடையில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குக் களப்பணி சென்றபோது தமிழகத்தில் உள்ள புத்தர் சிலைகளின் பட்டியலையும், புகைப்படங்களையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. அதில் உள்ள புகைப்படங்களில் ஒன்றில் திருநாகேஸ்வரம் செண்பகரன்யேஸ்வரர் கோயிலில் புத்தர் சிலை என்ற பதிவினைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. மற்ற புத்தர் சிலைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அது புத்தர் சிலையாகத் தெரியவில்லை.

மே 2010
நண்பர் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களுடன் களப்பணி மேற்கொண்டபோது திருநாகேஸ்வரம் சென்றேன். அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் இரு சிலைகளைக் காணமுடிந்தது. மேம்போக்காகப் பார்க்கும்போது இரண்டும் சமணர் சிலைகளைப் போல இருந்தது. உடன் வந்த அவர், ஒன்று புத்தர் சிலை என்றும், மற்றொன்று சமணர் சிலை என்றும் கூறினார். எனக்கும் அவ்வாறே தோன்றியது. இருப்பினும் சோழ நாட்டில் உள்ள பிற புத்தர் சிலைகளைப் போல அந்த சிலை காணப்படவில்லை.

மார்ச் 2012
மறுபடியும் அக்கோயிலுக்கு ஒரு முறை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது மறுபடியும் இரு சிலைகளையும் பார்த்தேன்.  களப்பணியாக இல்லாமல் சென்ற நிலையில் சிலையினை அளவெடுக்கச் சற்று சிரமப்பட்டேன்.
செண்பகராண்யேஸ்வரர் கோயில் அம்மன் சன்னதியின் திருச்சுற்றில்
இரண்டு சிலைகளைப் பார்த்தபோது வழக்கமாக என்னுள் காணப்படும் குழப்பம் ஆரம்பித்தது. ஏனெனில் இரண்டு சிலைகளும் சமண சிலைகளைப் போல இருந்தன. பல முறை பல நோக்கில் பார்த்துக் கொண்டிருந்தேன். கோயில் பிரகாரத்திலேயே நான் எடுத்துச்சென்ற பிற புத்தர் சிலைகளின் புகைப்படங்களையும் வைத்து ஒப்புநோக்கினேன்.

திருநாகேஸ்வரம்   புத்தர் (2012)
 புகைப்படம் ஜம்புலிங்கம்
 பல அறிஞர்கள் இச்சிலைகளை சமணர் சிலைகள் என்று கூறுவதை நான் அவர்களிடம் பேசும்போது அறிந்தேன். ஆங்காங்கே இது புத்தர் என்ற குறிப்புகளையும் கண்டுள்ளேன். இருப்பினும் இரண்டில் ஒரு சிலை மட்டும் அதன்மேல் காணப்படும் ஆடையினை வைத்து புத்தராக இருக்க வாய்ப்புண்டு என உணர்ந்தேன். ஆனால் உறுதி செய்யமுடியாமல் தவித்தேன்.

திருநாகேஸ்வரம் சமணர்  (2012)
 புகைப்படம் ஜம்புலிங்கம்
இரண்டும் சமணரா, இரண்டில் ஒன்று புத்தரா என்ற நிலை ஒரு புறமும், ஒன்று புத்தர் என்ற நிலை ஒரு புறமும் மனதில் பதிந்துள்ளது. தொடர் களப்பணிகளும், வாசிப்பும் எனக்குத் தெளிவைத் தரும் என்ற நம்பிக்கையில் கோயிலை விட்டுக் கிளம்பினேன்.

நன்றி : திரு நா.ராமகிருட்டிணன், திரு ஜெ.சந்திரமோகன், நண்பர் திரு தில்லை கோவிந்தராஜன், பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

2.5.2014இல் மேம்படுத்தப்பட்டது