பௌத்த சுவட்டைத் தேடி : 23 ஆண்டு களப்பணியில் 29 சிலைகள்

தமிழ்ப்பல்கலைக்கழகம், மதுரை தம்ம விஜயவிகாரை, புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை சென்னை இணைந்து இன்று (4.12.2015) நடத்தும் பன்முகப் பார்வையில் பௌத்தக்கலை என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கிற்காக அளிக்கப்பட்ட கட்டுரை.



தமிழகத்தில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பௌத்த ஆய்வின்போது 16 புத்தர் சிலைகளையும், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. 1993இல் பௌத்த ஆய்வில் அடியெடுக்கும்போது இவ்வாறாகத் தேடல் முயற்சி அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. மயிலை சீனி வேங்கடசாமியை அடியொற்றியும், பின் வந்த அறிஞர்களைத் தொடர்ந்தும் சென்ற வகையில் பல இடங்களில் சிலைகளைக் காணமுடிந்தது. தமிழகத்தில் இக்காலகட்டத்தில் இவ்வாறாக அதிக எண்ணிக்கையில் இப்பகுதியில்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது என் எண்ணம். பௌத்த ஆய்விற்கு வழிவகுத்துத் தந்த தமிழ்ப்பல்கலைக்கழகத்தை நன்றியோடு, நினைவுகூர்ந்து, என் ஆய்விற்குத் துணை நிற்கும் அனைவருக்கும் நன்றிகூறி  களத்திற்கு அழைக்கின்றேன்.  

களப்பணி மிக எளிதாக இருக்கும் என எண்ணி களத்தில் இறங்கினேன். இறங்கியபின்னர்தான் அதிலுள்ள சிரமங்களை அறியமுடிந்தது. சில இடங்களில் உள்ளூர் மக்கள் தாமாகவே முன்வந்து உதவினர். சில இடங்களில் போதிய உதவி கிடைக்கவில்லை. பல இடங்களில் சிலையைப் பார்க்க அனுமதிகூட கிடைக்கவில்லை. தொடர்ந்து மேற்கொண்ட களப்பணிகளின்மூலமாக அவ்வாறான சிலைகளைப் பற்றிய குறிப்புகளை சேகரிக்க முடிந்தது. ஒவ்வொரு களப்பணியும் ஒரு பாடமாகவே அமைந்தது. 

ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் மேற்கொண்டுவரும் களப்பணியின்போது மங்கலம் (1999), அய்யம்பேட்டை (1999),  புதூர் (2000), கோபிநாதப்பெருமாள்கோயில் (2002)  (தலையின்றி), கோபிநாதப்பெருமாள்கோயில் (2002) (இடுப்புப்பகுதி மட்டும்), குடவாசல் (2002), சுந்தரபாண்டியன்பட்டனம் (2002), திருநாட்டியத்தான்குடி (2003), உள்ளிக்கோட்டை (2005), குழுமூர் (2006), ராசேந்திரப்பட்டினம் (2007), வளையமாபுரம் (2007), திருச்சி (2008), கண்டிரமாணிக்கம் (2012), கிராந்தி (2013), மணலூர் (2015) ஆகிய இடங்களில் 16 புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது.  

மங்கலம் (1999)
வரலாற்றறிஞர் திரு கி.ஸ்ரீதரன் உதவியுடன் திருச்சி மாவட்டத்திலுள்ள மங்கலம் என்னுமிடத்தில் உள்ள அரவாண்டியம்மன் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலை முதன்முதலாகப் பார்க்கப்பட்ட சிலையாகும். இச்சிலை தமிழகத்திலுள்ள பெரிய புத்தர் சிலைகளில் ஒன்றாகும். வேறு எந்த புத்தர் சிலையிலும் காணப்படாத மீசையுடன் இச்சிலை இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இக்கோயிலில் புத்தருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.

அய்யம்பேட்டை (1999)
ஆய்வின்போது இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள அருங்காட்சியகங்களிலிருந்து நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகளின் புகைப்படங்கள் பெருமுயற்சி எடுத்து தொகுக்கப்பட்டன. அவ்வாறான பணியின்போது வரலாற்றறிஞர் திரு அய்யம்பேட்டை செல்வராஜ், தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியின் அமைப்பில் ஒரு சிற்பத்தைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்தார். தஞ்சாவூரிலுள்ள கலைக்கூடத்தில் ஒரு நாகப்பட்டின செப்புத்திருமேனி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

புதூர் (2000)
25 கிமீ மிதிவண்டியில் சென்று பார்த்த வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது புதூரிலுள்ள புத்தர் சிலை. அசராமல் உடன் மற்றொரு மிதிவண்டியில் வந்த திரு மழவை சிங்காரவேலன் என்னைவிட அதிகமாகக் காணப்பட்டார். உள்ளூரில் இந்த புத்தரை வழிபட்டு வருகின்றனர். புதூரில் குளம் வெட்டும்போது இச்சிலை கிடைத்ததால் குளம் இருக்கும் இடத்தை போத்தன்குட்டை (புத்தன்குட்டை) என்றழைக்கின்றனர்.இச்சிலையை உள்ளூரில் வழிபட்டு வருகின்றனர்.

கோபிநாதப்பெருமாள்கோயில் (2002)  (தலையின்றி)
தஞ்சாவூர் மாவட்டம் கோபிநாதப்பெருமாள் கோயிலிலிருந்து திருவலஞ்சுழி செல்லும் சாலையில் கோபிநாதப்பெருமாள்கோயில் என்னும் இடத்தருகே தலையில்லாத புத்தர் சிலையைக் காணமுடிந்தது. களப்பணியின் முதன்முதலாக தலையில்லாமல் பார்த்த புத்தர் சிலை இதுவேயாகும். தொடர்ந்து மேற்கொண்ட களப்பணியின்போது இராயம்புரம், கீழக்குறிச்சி, வளையமாபுரம், மணலூர் உள்ளிட்ட பல இடங்களில் தலையில்லாத புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது. 

கோபிநாதப்பெருமாள்கோயில் (2002) (இடுப்புப்பகுதி மட்டும்)
கோபிநாதப்பெருமாள் கோயிலில் காணப்பட்ட புத்தர் சிலையைப் பற்றி பேட்டி எடுக்க தனியார் தொலைக்காட்சியினருடன் அங்கு சென்றபோது உடன் வந்த தொலைக்காட்சி நண்பர் உதவியுடன் மற்றொரு புத்தர் சிலையின் இடுப்புப்பகுதி மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. முந்தைய புத்தர் சிலை இருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் இச்சிலை காணப்பட்டது. தற்போது இந்த இரு சிலைகளும் அங்கு காணப்படவில்லை.

குடவாசல் (2002)
குடவாசல் பகுதியில் புத்தர் சிலையில் தலைப்பகுதி ஒன்றினைப் பார்த்து அதன் புகைப்படத்தை ஆய்வாளர் திரு கோவிந்தராஜ் காண்பித்தார். முதன்முதலாக தனியாக புத்தரின் தலைப்பகுதியைப் மட்டும் பார்த்தது குடவாசல் பகுதியிலிருந்துதான். தொடர்ந்து மேற்கொண்ட களப்பணியின் போது இவ்வாறான புத்தர் சிலையின் தலைகளை பெரண்டாக்கோட்டை, முழையூர் ஆகிய இடங்களில் காணமுடிந்தது.

சுந்தரபாண்டியன்பட்டனம் (2002)
வரலாற்றுப்பேராசிரியர் திரு சந்திரபோஸ் உதவியுடன் புதுக்கோட்டை ராமநாதபுரம் எல்லையில் சுந்தரபாண்டியன்பட்டனத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் ஒரு புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிலை நின்ற நிலையில் இருந்தது. களப்பணியின்போது முதன்முதலாக நின்ற நிலையில் காணப்பட்ட புத்தர் சிலை இதுவாகும். வரலாற்றறிஞர் முனைவர் ராஜா முகமது இச்சிலையைப் பற்றி விவாதித்துள்ளார். சோழ நாட்டைச் சேர்ந்த, ஆய்வுப்பகுதியில் இல்லாத இடமாக இருந்தாலும் அருகில் உள்ள மாவட்டம் என்ற நிலையில் இவ்விடத்தில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியைப் போல இச்சிலை காணப்படும். 

திருநாட்டியத்தான்குடி (2003)
வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், திரு கண்ணன் ஆகியோருடன் மேற்கொண்ட களப்பணியின்போது திருவாரூர் மாவட்டம் திருநாட்டியத்தான்குடியில் அமர்ந்த நிலையிலான புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட களப்பணியின்போது தலைப்பகுதியைக் காணமுடியவில்லை.  

உள்ளிக்கோட்டை (2005)
உள்ளிக்கோட்டையைச் சேர்ந்த திரு மாதவகுமாரசுவாமி உதவியுடன் இச்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்த இந்த அழகான சிலையினைப் பற்றி உள்ளூரில் ஒரு கதையைக் கூறிவருகின்றனர். அடுத்த முறை இந்த சிலையைக் காணச் சென்றபோது அச்சிலை காணாமல் போயிருந்தது. நன்கு விசாரித்தும் எவ்வித செய்தியும் கிடைக்கவில்லை.

குழுமூர் (2006)
இதழில் வந்த செய்தியின் அடிப்படையில் திரு அரும்பாவூர் செல்வபாண்டியன் உதவியுடன் இச்சிலையைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பராமரிப்பு எதுவும் இல்லாமல் இருந்த சிலையினை சுத்தம் செய்து உள்ளூர் மக்களிடம் அச்சிலையைப் பற்றிய செய்தியைக் கூறிவிட்டு வந்தோம். அமர்ந்தநிலையில் அழகாக இருந்த சிலையின் தலைப்பகுதி பின்னர் காணாமல் போய்விட்டதாகக் கூறினர்.  

ராசேந்திரப்பட்டினம் (2007)
வரலாற்றறிஞர் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி, திருகடலூர் வேல்முருகன், திரு ராஜேந்திரப்பட்டினம் சிவக்குமார் உதவியுடன் இச்சிலையைக் காணமுடிந்தது. அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்த இந்த சிலை பல ஆண்டுகளாக அவ்விடத்தில் இருப்பதாகக் கூறினர். இச்சிலையை இங்கு மஞ்சள் விற்கும் செட்டியார் என்று குறிப்பிடுவதைக் களப்பணியின்போது அறியமுடிந்தது. இப்பகுதி ஆய்வுப்பகுதியாக இல்லாவிட்டாலும்கூட புத்தர் சிலை என்ற நிலையில் அங்கு களப்பணி மேற்கொள்ளப்பட்டது.

வளையமாபுரம் (2007)
பல வருடங்களுக்கு முன்பே வலங்கைமான் பகுதியில் சில புத்தர் சிலைகள் இருப்பதாகக் களப்பணியின்போது அறிந்தேன். இப்பகுதியைச் சேர்ந்த மிகச் சிறிய அளவிலான புத்தர் சிலை கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு சிலையினை களப்பணியின்போது காணமுடிந்தது. கோபிநாதப்பெருமாள் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட சிலையினைப் போல இச்சிலை தலையின்றி காணப்பட்டது. தமிழகத்தில காணப்படுகின்ற பெரிய புத்தர் சிலைகளில் இதுவும் ஒன்றாகும். வயல் வரப்பில் அமர்ந்திருந்த கோலத்தில் இருந்த இச்சிலை கம்பீரமாக இருந்தது.

திருச்சி (2008)
திருச்சியில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் பெரியார் தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு அன்பழகன் தந்த தகவலின் அடிப்படையில் ஒரு புத்தர் சிலையைக் காணமுடிந்தது. அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள இந்த புத்தர் சிலை சற்றொப்ப சோழ நாட்டில் காணப்பட்டுள்ள பிற புத்தர் சிலைகளின் கலைப்பாணியைக் கொண்டு உள்ளது. 

கண்டிரமாணிக்கம் (2012)
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் கண்டிரமாணிக்கம் என்னுமிடத்தில் ஒரு வீட்டுக்கொல்லையில் பள்ளம் தோண்டும் போது புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் துணையோடு அங்கு சென்றபோது அமர்ந்த நிலையிலான புத்தர் சிலையைக் காணமுடிந்தது.  முதலாம் ராஜராஜன் நாகப்பட்டினத்திலிருந்த புத்த விகாரத்திற்கு நிலதானம் அளித்தபோது அந்தச் சாசனத்தில்ர கையொப்பமிட்ட ஒருவரான ஸ்ரீதரபட்டன் என்பவர் கண்டிரமாணிக்கத்தைச் அடுத்த சீதக்கமங்கலத்தைச் சேர்ந்தவர் என்று முனைவர் குடவாயில் சுப்பிரமணியன் தெரிவித்தார். இப்போது இச்சிலை திருவாரூரில் உள்ளது.

கிராந்தி (2013)
நாகப்பட்டினத்தைச்சேர்ந்த வரலாற்று ஆர்வலர் திரு இராமச்சந்திரன் தந்த தகவலின் அடிப்படையில் திரு தில்லை கோவிந்தராஜனுடன் மேற்கொண்ட களப்பணியின் அமர்ந்த நிலையிலான புத்தர் சிலையைக் காணமுடிந்தது. களப்பணியின்போது வேறு எங்கும்காணாத வகையில் சிலையின் இந்த பீடத்தில் கிராந்தி தெப்பிள்ளை என்ற  கி.பி.11-12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்து உள்ளதைக் காணமுடிந்தது.  கிராந்தி தெப்பிள்ளை என்பது இந்த சிலையைக் கொடையாக கொடுத்தவரைக் குறிக்கும் என்று தில்லை கோவிந்தராஜன் கூறினார்.

மணலூர் (2015)
மணலூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் திரு சேதுராமன் தந்த தகவலின் அடிப்படையில் தமிழ்ப்பண்டிதர் திரு மணி.மாறனுடன் மேற்கொண்ட களப்பணியின்போது அமர்ந்த நிலையிலான புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிலையும் தலையில்லாமல் இருந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் திரு அய்யம்பேட்டை செல்வராஜ், அய்யம்பட்டைக்குத் தெற்கே 3 கிமீ தொலைவில் வையச்சேரி கிராமத்தின் குளக்கரையில் புத்தர் சிலையின் தலைப்பகுதி இருப்பதாகக் கூறி அதன் புகைப்படத்தை அனுப்பியிருந்தார். அப்போது அங்கு சென்றபோது தலைப்பகுதியைக் காணமுடியவில்லை. இந்நிலையில் மணலூரில் கண்டெக்கப்பட்ட புத்தர் சிலை, வையச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட தலைப்பகுதியுடன் பொருந்த வாய்ப்புள்ளது. 

சமண தீர்த்தங்கரர் சிலைகள்
புத்தர் சிலைகளைத் தேடி களப்பணி மேற்கொண்ட போது ஜெயங்கொண்டம் (1998),  காரியாங்குடி (1998), ஆலங்குடிப்பட்டி (1999), செங்கங்காடு (1999), தஞ்சாவூர் (1999),  பெருமத்தூர் (1999), அடஞ்சூர் (2003), செருமாக்கநல்லூர்  (2009), சுரைக்குடிப்பட்டி (2010), பஞ்சநதிக்குளம் (2010),  தோலி (2011),  கவிநாடு (2013), நாட்டாணி (2015) ஆகிய இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தனியாகவும், திரு தில்லை கோவிந்தராஜன், முனைவர் சந்திரபோஸ், திரு மணி.மாறன் ஆகியோரின் உதவியுடனும் கண்டுபிடிக்கப்பட்டன. 

களப்பணியில் வெள்ளிவிழா ஆண்டினை நெருங்கிவரும் நிலையில் 29 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டபோது கிடைத்த அனுபவங்கள் சோழ நாட்டில் பௌத்தம் வேரூன்றி இருந்த நிலையை எடுத்துக்காட்டுகின்றது. பல இடங்களில் புத்தர் சிலைக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. புத்தர், சமணர், பழுப்பர், சாம்பான், சிவனார், முனீஸ்வரன் என்ற பலவாறான பெயர்களில் புத்தரை அழைத்து வருகின்றனர். முந்தைய களப்பணின்போது பார்த்த சிலைகள் அடுத்தடுத்த களப்பணிகளின்போது காணாமல் போயிருப்பதைப் பார்க்கும்போது சற்றே வேதனையாக இருந்தது. இந்த சிலைகள் நம் வரலாற்றின் எச்சங்கள் என்ற நிலையிலும், பௌத்த சமயம் சோழ நாட்டில் நல்ல நிலையில் பரவியிருந்ததை உணர்த்தும் சான்றுகள் என்ற நிலையிலும் உரிய முறையில் பாதுகாக்கவேண்டியது அனைவரின் கடமையாகும்.

During the field study carried out, from 1993 to 2015, in the Chola country in Tamil Nadu comprising composite Thanjavur, composite Trichy and Pudukottai districts Buddha statues were found in Mangalam (1999), Ayyampet (1999), Puthur (2000), Gopinathaperumalkovil (2002) (Two statues), Kudavasal (2002), Sundarapandianpattinam (2002), Tirunattiyattankudi (2003), Ullikottai (2005), Kuzhumur (2006), Rajendrapattinam (2007), Valayamapuram  (2007), Trichy (2008), Kandramanickam (2012), Kiranthi (2013) and Manalur (2015). Jain Tirthankaras were found in Jayamkondam (1998),  Kariyankudi (1998), Alangudipatti (1999), Sengangadu (1999), Thanjavur (1999), Perumattur (1999), Adanjur (2003), Serumakkanallur  (2009), Suraikkudipatti (2010), Panchanathikulam (2010), Doli (2011), Kavinadu (2013) and Nattani (2015)


---------------------------------------------------------------
வரலாற்றறிஞர் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி மற்றும் வலைப்பதிவர் திரு கரந்தை ஜெயக்குமார் ஆகியோருடன் விக்ரமம் புத்தர் சிலையைப் பார்க்கச் சென்றபோது பெற்ற அனுபவம் பற்றி நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் தன் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு என் நன்றி.

---------------------------------------------------------------

Comments

  1. அயராத உங்கள் பணி வியக்க வைக்கிறது.

    பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  2. தங்களின் தளரா முயற்சி வியக்க வைக்கிறது ஐயா
    தங்களின் களப் பணி தொடரட்டும்
    நன்றி ஐயா

    ReplyDelete
  3. அருமையான தொகுப்பு ஐயா...

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. அரிய தகவல் அறியத் தந்த முனைவருக்கு நன்றி
    தமிழ் மணம் வழக்கம் போல..

    ReplyDelete
  5. ஒரே லட்சியமாய் தேடும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  6. உங்களின் காலத்தேரால், உயரிய வரலாற்றைக் கண்டோம். மிக்க நன்றி.

    ReplyDelete
  7. அருமையான தகவல்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  8. மிக கடினமான அயராத உழைப்பு அய்யா தங்களுடையது. பாராட்டுகள். தொடர்ந்து பல கண்டுபிடிப்புகளை கண்டடைய வாழ்த்துகள்!
    த ம 7

    ReplyDelete
  9. அயராத உங்கள் பணி வியக்க வைக்கிறது.

    பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  10. அயராத உங்கள் பணி வியக்க வைக்கிறது.

    பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  11. தங்களின் பணி வியக்க வைத்தது சார். பாராட்டுக்கள் சார்.

    ReplyDelete
  12. Mr Arasu ezhilan (மின்னஞ்சல் வழியாக: email: arasezhilanpr@gmail.com) பன்முகப்பார்வையில் பௌத்தக்கலை என்ற கருத்தரங்கிற்காக அளிக்கப்பட்ட உங்கள் கட்டுரையினை என் பார்வைக்கு அனுப்பியமைக்காக நன்றி அய்யா.

    Mr E.Anban (thro email: anbumalar89@gmail.com)
    Dear Sir, Happy to receive your paper thank you for your contributions
    In Dhamma, E Anban

    Mr G. Arularasan (மின்னஞ்சல் வழியாக: arulghsr@gmail.com)
    அன்பு ஜம்புலிஙகம், தங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி. வணக்கம். புத்தர் சிலைகளைத் தேடி தாங்கள் செய்த பயணங்களைப்பற்றி தாங்கள் தி இந்து தமிழில் எழுதிய கட்டுரையை மற்றும் தாங்கள் விக்கிபீடியாவில் தொகுத்துவரும் கட்டுரைகளையும் பார்த்து வருகிறேன் வலை தளத்திலும் படிக்கிறேன்.

    ReplyDelete
  13. தங்களது பணி உண்மையாக வியக்க வைக்கின்றது ஐயா, வாழ்த்துகள் ஐயா. பாராட்டுகள். தங்கள் பணி தொடரவும் வாழ்த்துகள் ஐயா.

    கீதா: ஐயா தாங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் மேற்கொள்கின்றீர்களோ? ஏனென்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்..ஆந்திரா குண்டூரில் புத்த விகார் கல்வெட்டுகள் இருப்பதாக. தற்போது கணவர் அங்குதான் வேலையாக இருக்கின்றார். அங்கு செல்ல நேர்ந்தால் அதைப் பார்த்து பதிவிட எண்ணியுள்ளேன். ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகின்றது.

    ReplyDelete
    Replies
    1. தமிழ்நாட்டில், குறிப்பாக சோழ நாட்டில் மட்டுமே மேற்கொண்டு வருகிறேன். தங்களின் ஆர்வத்திற்கும் ஈடுபாட்டிற்கும் நன்றி.

      Delete
  14. தங்கள் ஆய்வுப் பணி தொடர வேண்டும்
    வரலாறுகளை
    தமிழர் மீட்டுப் பார்க்க வேண்டும்

    ReplyDelete
  15. பௌத்த சுவட்டைத்தேடி, தங்களது வாழ்வில் 23 ஆண்டுகள் களப்பணி என்பது பிரம்மிப்பான விஷயம் அய்யா! தங்களுடைய கட்டுரைகளில் இதுபற்றிய விவரங்கள் இருப்பினும், தாங்கள் கண்டறிந்த 29 சிலைகளின் படங்களையும் ஒருசேர வெளியிட்டால் நன்றாக இருக்கும். முனைவருக்கு பாராட்டுக்கள்.


    ReplyDelete
    Replies
    1. நூலாக்கத்தின்போது தங்கள் கூறியுள்ள மேற்கண்ட கருத்து உட்பட பலவற்றைச் சேர்க்கவுள்ளேன். நன்றி.

      Delete
  16. வணக்கம்.

    தங்களின் சேவையை தமிழுலகம் உணர்ந்து கொள்ளும்நாள் தொலைவில் இல்லை.

    வாழ்த்துகளும் வணக்கங்களும் ஐயா.

    ReplyDelete
  17. ஆஹா!! இத்தனை ஆண்டுகள் வெயிலிலும் மழையிலும் சென்று களப்பணி செய்து நீங்கள் கண்டுபிடித்தவற்றை எங்களுக்கு எளிதாகக் கொடுத்ததற்கு நன்றி ஐயா! ஆனால் சிலைகள் காணாமல் போனது வருத்தமாக இருக்கிறது..அதிலும் நன்றாக இருந்த சிலைகளின் தலைகள் பின்னர் காணாமல் போனது ஏன் ஐயா? சிலைகளைப் பாதுகாக்க ஒன்றும் செய்ய முடியவில்லையா ஐயா? அந்த அனுபவங்களைப் பற்றியும் பகிருங்களேன். ஒரு களப் பணிக்காவது உங்களுடன் வர வேண்டும் என்று ஆசை வருகிறது..நிறைவேறுமா என்று தெரியவில்லை.
    உங்கள் சிறந்த பணிக்கு மனமார்ந்த நன்றி ஐயா. நூல் வரக் காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நமது கவனக்குறைவும் பண்பாட்டு எச்சங்களைக் காப்பாற்றத் தவறிய நிலையும் இவ்வாறாக காணாமல் போவதற்குக் காரணமாகின்றன. இவை பற்றி பின்னர் எழுதவுள்ளேன். நன்றி.

      Delete
    2. வருத்தம் தான்..
      நன்றி ஐயா

      Delete
  18. Mr Subramanian kamatchi gouder (subramaniankamatchigouder@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    வெள்ளிவிழா கடந்து தொடரும் தங்களது ஆய்வுப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. 23 ஆண்டுகள் அயராது களப்பணியாற்றிவரும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. தங்கள் பயணம் மேலும் சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  21. தங்கள் பணி வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment