Sunday, 3 May 2015

தமிழர் வழிபாடு : முனீஸ்வர புத்தர்-------------------------------------------------------------------------------------------
இவ்வார ராணி (3.5.2015 நாளிட்ட) இதழில் வெளியான எனது இருபதாண்டு கால ஆய்வு தொடர்பான பதிவைப் புத்த பூர்ணிமாவையொட்டி பகிர்வதில் மகிழ்கின்றேன். இதனை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றி. என் ஆய்வுக்குத் தடம் அமைத்துத் தந்த தமிழ்ப்பல்கலைக்கழகத்தை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------
அரண்மனையைத் துறந்தவர்...துறவறம் பூண்டவர இளவரசர் கௌதம புத்தர். அவரது பௌத்த மதம் ஒரு காலத்தில் தமிழகத்தில் பரவலாக பின்பற்றப்பட்டது. அவருடைய சிலைகளை தேடுவதை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வேள்வியாக செய்து வருகிறார், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் ஜம்புலிங்கம்.

அவரது அனுபவங்கள்:
"நான் 'எம்ஃபில்' பட்டத்துக்காக கல்கியின் 'பொன்னியின் செல்வன்'  நாவல் தொடர்பாக ஆய்வு செய்ய விரும்பினேன். ஆனால், ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டி இருந்தது. தமிழில் படித்து, ஆங்கிலத்தில் புரிந்துகொண்டு, எழுதுவது சிரமம் என்பதால் 'தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்தேன்.

முதலில், தஞ்சாவூர் கலைக்கூடத்தில் உள்ள புத்தர் சிலைகளைப் போய்ப் பார்த்தேன். அவை தொடர்பான விவரங்களையும் நூல்களையும் படித்து....சிலைகள் காணப்பட்ட இடங்களைப் பற்றிய முழுமையான குறிப்புகளை சேகரித்தேன். பின்னர், நேரம் கிடைத்தபோது அந்தந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன்.

இந்த மாவட்டத்தில் பெரும்பாலான புத்தர் சிலைகள்...அமர்ந்த நிலையில் அல்லது தியான கோலத்தில் உள்ளன. நின்றபடி  உள்ளவை மிகவும் குறைவு. அமர்ந்த நிலையில் சிலையில் உஷ்னிஷா எனப்படும் தீச்சுடருடன் கூடிய முடி அமைப்பு, சற்றே மூடிய கண்கள், அமைதி தவழும் முகம், நீண்ட காதுகள், மேலாடை, கையில் தர்ம சக்கரக்குறி, நெற்றியில் திலகக்குறியீடு போன்றவை காணப்படுகின்றன.

பல இடங்களில் புத்தரை வழிபடுகிறார்கள். அய்யம்பேட்டையில் 'முனீஸ்வரன்' என்றும், பெருஞ்சேரியில் 'ரிஷி' எனவும் மக்கள் வணங்குகிறார்கள். 

கும்பகோணம் பகவ விநாயகர் கோவிலில் இருக்கிற பகவர், புத்தர் அல்ல என்று கண்டுபிடித்தது..
பல இடங்களில் புத்தரைத் தேடிப் போய் சமணரைப் பார்த்தது...
கும்பகோணம் கும்பேஸ்வரர் தலத்தில் பௌத்தம் தொடர்பான கல்வெட்டைக் கண்டறிந்தது...
தஞ்சை மண்ணில் புதூர் புத்தரைக் கண்டுபிடிக்க ஒரே நாளில் 25 கிமீ தூரம் சைக்கிளில் பயணம் சென்றது...
என்ற மறக்க முடியாத அனுவங்கள். மங்கலத்தில் மீசையுடன் கூடிய புத்தர் சிலை காணப்படுகிறது.

1993இல் இருந்து தனியாகவும், நண்பர்களின் துணையோடும் 29 புத்தர் மற்றும் சமணர் சிலைகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். களப்பணிகளின் போது பல இடங்களில் புத்தர் சிலைகள் கேட்பாரின்றி கிடந்ததைக் கண்டேன். இப்போது அவை பாதுகாக்கப்பட்டு வருவதையும், வழிபாடு நடத்தப்படுவதையும் காணமுடிகிறது.

பல இடங்களில் சிதிலம் அடைந்த சிலைகளையும் பார்த்திருக்கிறேன். இருக்கும் சிலைகளை முடிந்தவரை நன்கு பராமரிக்கவும் பாதுகாக்கவும் முயற்சி மேற்கொண்டால் அதுவே வரலாற்றுக்கு செய்யும் சிறப்பாகும்!" என்கிறார்.

மனிதப்புனிதரின் தடயங்களைத் தேடும் மகத்தான பயணம் இது.  
-------------------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான  ஆய்வு தொடர்பாக 2008 தொடங்கி வெளியான பிற பேட்டிகளை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம். வெளியிட்ட இவ்விதழ்களுக்கு நன்றி.

1)தினமணி 6.1.2008 :
புத்தரைத்தேடி
2)டைம்ஸ் ஆப் இந்தியா, 29.10.2012 : 
Buddha spotting in Chola country fills his weekends 
3)தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்,15.5.2015 :
Tracing footprints of Buddhism in Chola Country

-------------------------------------------------------------------------------------------
1.11.2015 அன்று மேம்படுத்தப்பட்டது.