Wednesday, 1 October 2014

ஆசிய ஜோதி : தேசிக விநாயகம்பிள்ளை

கவிதை வடிவில் புத்தரைப் பற்றிய அரிய நூல். பௌத்தம் தொடர்பான ஆய்வில் அடியெடுத்து வைத்த காலத்தில் (1993வாக்கில்) இந்நூலைப் பற்றி நண்பர்களும், அறிஞர்களும் எடுத்துக்கூறியதைக் கேட்டு வாங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அண்மையில் இந்நூலை மறுபடியும் படித்தேன். புத்தர் வரலாற்றைப் பற்றிய அரிய செய்திகள் கவிதைகளாக, படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் எளிதான வகையில் அமைந்துள்ளது. நான் வாசித்ததைப் பகிர்வதில் மகிழ்கின்றேன்.

"நமது பழந்தமிழ் நூல்களில் புத்தரைப் பற்றியும், பௌத்த சமயத்தைப் பற்றியும் பல குறிப்புகள் காணப்படுகின்றன. எனினும் அவற்றைக் கொண்டு நாம் புத்தர் பெருமானுடைய வரலாற்றை முற்றிலும் அறிந்துகொள்ள இயலாது. அக்குறையைக் கவிமணியவர்களின் ஆசிய ஜோதி இப்பொழுது போக்கிவிட்டது. ஆங்கிலத்தில் எட்வின் அர்னால்டு ஆசிய ஜோதி (Light of Asia) என்றும் பெயரில் கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். அந்நூலைத் தழுவி தமிழ் மணம் கமழக் கவிமணியவர்கள் பழகுதமிழில் பாடியளித்திருக்கிறார்கள்" என்ற குறிப்பு பதிப்புரையில் காணப்படுகிறது.


இந்நூல் புத்தர் அவதாரம், அருள் உரிமை, காதல் பிறந்த கதை, சித்தார்த்தன் கேட்ட தேவகீதம், சித்தார்த்தன் துறவு, புத்தரும் ஏழைச்சிறுவனும், கருணைக்கடல், புத்தரும் சுஜாதையும், புத்தரும் மகனிழந்த தாயும் என்ற ஒன்பது தலைப்புகளைக் கொண்டுள்ளது.

புத்தர் அவதாரம்
"வையகத்தில் உயிர்கள்மிக வாடக்கண்டேன்;
வழியறியாது அவைமயங்கி வருந்தக் கண்டேன்;
மெய்யிது என்று உய்யுநெறி காட்டி நன்மை
விளைவிப்பார் எவரையுமே கண்ணிற் காணேன்.........
 ........................
வானெழுந்து வளர்இமய மலையின் தென்பால்
வாழும் உயர் சாக்கியர்தம் மன்னனுக்கு
யானமொரு மகனாகச் செல்வேன்" என்றான்.
இமையவரை நோக்கி அருள் இறைவன் மாதோ!.......  (ப.9)

சித்தார்த்தன்
வந்தவர் யாவரும் வாழ்த்தி நின்றார்-திறை
வைத்தடி போற்றி வணங்கிநின்றார்;
சிந்தைக் கினிய திருமகனுக்கு-அவர்
சித்தார்த்தன் என்னவே நாமமிட்டார்............(ப.18)

அசித முனி உரைத்தல்
மன்னர் மன்னவ! மானிடத் தருவில்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு அப்பால்
ஒருமுறை மலரும் ஒண்மலர் இதுவாம்
மலரிதன் மணமே அறிவின் மணமாய்
மனத்தின் மாசு மாற்றிடும் ஐயா!................(ப.19)

யசோதரையைக் காணல்
யசோதரை என்னும் யெவன குமாரி
நேரேதி ராக நிமிர்ந்து நோக்கி
வருவது கண்டு மன்னர் மகனும்
திடுக்கிட்டு உள்ளம் திகைப்புக் கொண்டனன்.
இதனை, பக்கம் நின்ற பலரும் கண்டனர்.........(ப.32)

ஆசை அறுத்திடல்
உலகின் உண்மையை நீ-இன்னும்
உணர்ந்திட வில்லை;
அலகில் கருணையால்-உயிரை
ஆளவந்தோனே!
அன்பருக்காக-ஆசை
அறுத்திட வேண்டும்;
துன்பம் நீங்கிடவே-அரசும்
துறந்திட வேண்டும்..........(ப.36)

விடைகொள்ளுதல்
வாடி வருந்தி மன்னுயி ரெல்லாம்
அடையும் துன்பம் அனைத்தும் ஒழிப்பேன்
என்று கூறி இரவில் இறங்கினன்,
நன்று நாடிய ஞானிசித் தார்த்தனே.........(ப.45)

கொல்லா விரதம்
அந்நாள் முதலாப் பின்னா ளெல்லாம்
மாதமும் மாரி வானம் பொழிந்தது;
நாடு செழித்தது; நகரம் சிறந்தது;
உண்மை யறியவும் உதய மாயது;
செம்மை வளர்ந்தது; தீமை தேய்ந்தது;
புத்தன் உரையைப் பொன்னுரை யாக
நித்தம் நித்தம் நினைத்த பயனாய்க்
கொல்லா விரதம் குவலயத்து
எல்லா உயிர்க்கும் இன்பளித் ததுவே! .........(ப.45)

87 பக்கங்களில் அரிய நிகழ்வுகளைக் கொண்டது இந்நூல். படிக்கப் படிக்க மனதில் பதியும் கருத்துக்களைக் கொண்டு, எளிமையான சொற்களில் கவிதை நடையிலுள்ள புத்தரின் வாழ்க்கை வரலாற்றை படித்து உணர்ந்து ரசிப்போம். நற்குணங்களைக் கடைபிடிப்போம்.

ஆசிய ஜோதி, தேசிகவிநாயகம்பிள்ளை,  பாரி நிலையம், 184, பிராட்வே, சென்னை 600 108, முதற்பதிப்பு 1941, 25ஆம் பதிப்பு 2000 

 ---------------------------------------------------------------------------------------------------
விக்கிபீடியாவில் நான் எழுதியுள்ள கட்டுரைகளைக் காண பின்வரும்  இணைப்பினைச் சொடுக்கலாம்.
விக்கிபீடியாவில் தொடங்கிய கட்டுரைகள்
---------------------------------------------------------------------------------------------------