ஆபுத்திர காவியம் : மு.கு.ஜகந்நாதராஜா

----------------------------------------------------------------------------------------------------------  
தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாம் உலகத்தமிழ்நாட்டிற்கு வந்தபோது (1-5.1.1995) முதன்முதலாக பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது பௌத்த ஆய்வைப் பற்றி தெரிவித்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்து அம்மாநாட்டில் அவர் அளிக்கவிருந்த சமண, பௌத்த தத்துவ வேறுபாடுகள் என்ற தலைப்பிலான கட்டுரையின் படியை என்னிடம் தந்து  வாழ்த்து தெரிவித்தார். எனது ஆய்வினை பாராட்டிய பெரியோரில் இவரும் ஒருவர். இவருடைய காவியத்தைப் படித்து, பகிர்வதில் பெருமையடைகின்றேன்.
---------------------------------------------------------------------------------------------------------- 
பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா (ஜூலை 26, 1933  - டிசம்பர் 2, 2008) அவர்கள் எழுதியுள்ள ஆபுத்திரன் வரலாறு கூறும் காவியமான ஆபுத்திர காவியம் படித்தேன். முழுக்க முழுக்க காவிய நடையில் அமைந்துள்ள இந்நூலில் ஆபுத்திரனின் வரலாற்றைத் தந்துள்ளார் ஆசிரியர். முன்னுரையில் அவர் மணிமேகலையின் காவியச் சிறப்பை எடுத்துரைத்துள்ளார். "மணிமேகலை காவியம் மட்டுமே பசிக்கொடுமை பற்றியும் அதைத் தீர்க்க வேண்டும் என்றும் கூறுகிறது. உலகம் முழுதும் ஒன்றே எனும் உயர்ந்த கருத்தை நிலைநாட்ட உருவாக்கப்பட்டுள்ளது. மணிமேகலையில் வரும் எந்தத் துணைப் பாத்திரங்களும், பசிப்பிணியை மையப்படுத்தியே படைக்கப்பட்டுள்ளன" (ப.12) என்றும், "காவிய உலகில் மணிமேகலைக்கு தனிச் சிறப்புண்டு" என்றும் "இதன் பெருமையை தமிழர்களைவிட பிற மொழியினர் மொழிபெயர்ப்பு மூலமாக அறிந்து பாராட்டியுள்ளனர்" என்றும் கூறுகிறார்.  

பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா
".......மணிமேகலையில் புத்தரைப் போற்றுகிறதே தவிர அவரது வாழ்க்கைச் சம்பவமோ, ஜாதகக் கதைகளையோ பற்றி குறிப்பிட்டாலும் அதனை மையப்படுத்தி காவியம் எழுதவில்லை. அது தனித்தன்மையுடைய மாதவியின் மகள் மணிமேகலையையும், ஆபுத்திரனையும், பசிக்கொடுமை போக்கும் ஆதிரை போன்ற துணைப் பாத்திரங்களையும் கொண்டு கதையமைக்கப்பட்டுள்ளது. உலகின் பசிப்பிணி நீக்கப்படவேண்டும் என்பதற்காவும், கதை சாவகம் முதலிய தீவுகளுக்குள்ளும் படர்வதால், உலகம் ஒன்று மானுட நேயம் ஒன்றே என்னும் உயர் கருத்தை உலகம் உணரவேண்டும் என்பதற்காகவும் சாத்தனார் இக்காவியத்தைப் படைத்தளித்தார் என்பது தெளிவாகிறது.........".

மணிமேகலை காவியத்தின் ஒரு பாத்திரமாகத் திகழும் ஆபுத்திரன் வரலாற்றில் சில புதிய புனைவுகளையும் சதுரிகா என்ற கற்பனைப் பாத்திரத்தையும் இணைத்து காவிய நெறிக்கேற்ப ஆக்கியுள்ளதாக ஆசிரியர் கூறுகிறார். தனது கையில் அமுத சுரபியிருந்தும் சாவகத் தீவினர் பசி நீக்க முடியாமல் போனதால் பட்டினி கிடந்து உயிர் நீத்த ஆபுத்திரன் வரலாறு உயர்ந்த தியாக சரிதமாகும். காவிய நடையில் உள்ள ஆபுத்திர காவியத்திலிருந்து சில பாடல்களைக் காண்போம்.


 

புத்திரனில்லாக் குறை நீங்கல் 
அத்தகைக் குழந்தை தன்னை
ஆபுத்தி ரப்பே ரளித்துப்
புத்திர னில்லாக் குறையைப்
போக்கின னாகிப் புலத்தில் 
வித்திய பயிரைக் காக்கும்
விழைவுறு முழுவன் போல
சத்திய சந்த னானோன்
சந்ததம் பேணி வளர்த்தான் (பாடல் 20)

இளமை
சுவடியுங் கையு மாகத்
தோன்றுவான் நூல்கள் முற்றும்
கவனமாய்ப் படிப்பான் பிறர்போல்
கல்லெடுத் தெறிந்து திரியான்
மவுனமா யிருப்பான் பயனில்
வார்த்தைக ளெவையும் சொல்லான்
புவனமே மாற்றும் சான்றோர்
போன்றவன் தோன்றி நின்றான் (பாடல் 26) 

ஆபுரத்திரன் மறைவு
முழுமதிக்கு முதல் நாளில் மூதறிஞன் அறவணனும்
பழுதிலாஆ புத்திரனும் பண்புடனே மவுனத்தில்
எழுதரிய சித்திரத்தின் எழிலுடனே இருவருமே
தொழுதகைய ராயிருந்தார் தூயமதி வணங்கியதே.

பலபடியாய்ப் பேசலென்னோ பாரகத்தின் பசிநீக்கக்
கலமதில்வந் தாமகனும் கண்மூடி மீளாத
புலனொடுங்கிப் போதியமர் புத்தனடி சேர்ந்திட்டான்
உலகெங்கும் சாந்தநிலை உற்றதுபோல் ஆனதுவே. (பாடல் 462)  

 அறவண அடிகள் அஞ்சலி
புத்தன்பெய ரில்பலவாம் புனிதகோயில் பலவுண்டு
இத்தரையில் பசிநீக்கி இரும்பசியோ டிறந்திட்டஆ
புத்திரற்கும் ஒருகோயில் புனிதமணி பல்லவத்தில்
இத்தினமே கட்டுவல்யான் எனநினைந்தான் அறவணனே (பாடல் 464) 

காவிய வடிவில் ஆபுத்திரன் வரலாற்றை படைத்த பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்களின் முயற்சியைப் பாராட்டி, இந்நூலைப் படிப்போமே. 

ஆபுத்திர காவியம், பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாத ராஜா, ஜகந்நாதராஜா இலக்கிய தத்துவ ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவன அறக்கட்டளை, 8, அங்கைய ராஜா தெரு, இராஜபாளையம் 626 117, தமிழ்நாடு, ஏப்ரல் 2008, ரூ.200, பக்.320 

Comments

  1. ஆபுத்திர காவியம் அறிந்தேன் ஐயா
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான முறையில் சிறப்பாக அமைந்துள்ள நூலை வாங்கிப்படிக்கவுள்ளதறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  2. Aa puthiran is a revolutionary character! IT symbolises reality.In my play madhavamekalai this characterization received sound applause from the audience when it was enacted at queenmaarys college chennai. It is an universal character.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் நிகழ்த்திய மாதவமேகலை நாடகத்தில் ஆபுத்திரன் பாத்திரம் பெற்ற பாராட்டறிந்து மகிழ்ச்சி. தங்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  3. வணக்கம்
    ஐயா.
    மிகவும் அற்புதமான நூலை அறிமுகம் செய்துள்ளீர்கள். வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆசை ... பகிர்வுக்கு நன்றி ஐயா
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. இந்நூல் தங்களுக்கு படிக்கவேண்டும் என்ற ஆசையைத் தூண்டியதை நினைக்கும்போது மகிழ்வாக உள்ளது. தங்களது கவிதைப்போட்டி சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நல்லதொரு நூல் அறிமுகம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. அட்சய பாத்திரங்கள் பற்றி எழுதிய பதிவொன்றில் ஆபுத்திரன் பற்றிக் குறிப்பிட்டு இருப்பதாக நினைவு. மணிமேகலை பற்றி உரைநடையில் சிறு வயதில் படித்த நினைவு.படிக்காமல் விட்ட காவியங்கள் மிக அதிகம் .

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கூறுவது போல் நானும் படிக்காமல் விட்ட காவியங்கள் நிறைய உள்ளன. காலம் நம் வேட்கையைத் தீர்க்கும் என நம்புவோம்.

      Delete
  8. ஆபுத்திரக்காவியம் ,
    அட்சயபாத்திரம் பற்றிய
    அருமையான காவியத்தை சிறப்பாகப் பகிர்நதமைக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete
  9. ஆபுத்திரன்மீதான என் ஈர்ப்பு இத்தகைய தாக்கத்தை உண்டாக்கியது. தங்களின் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆபுத்திர காவியம் வாங்கி படிப்பேன் ஐயா,

      Delete
  10. அன்புள்ள அய்யா திரு.முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்களுக்கு,

    வணக்கம். ஆபுத்திரன் காவியக் கவிதை அருமை. வாழ்த்துகள்.
    எனது ‘வலைப்பூ’ பக்கம் வந்து பார்வையிட்டு தாங்கள் கருத்திடுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
    -மாறத அன்வுடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
  11. அய்யா இவ்வறக்கட்டளையின் செல்லிடம்பேசி எண்ணைப் பதிவிடுங்கள். நன்றி

    ReplyDelete
  12. நூலில் தொலைபேசி எண் தரப்படவில்லை. நன்றி.

    ReplyDelete
  13. மு.கு.ஜ. அவர்களின் தமிழாக்க நூல்கள் தற்போது எங்கு விற்பனைக்குக் கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் கூறவும். gmsanthanam@gmail.com

    ReplyDelete

Post a Comment