Thursday, 1 May 2014

தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம் : பிக்கு போதிபாலா, க.ஜெயபாலன், இ.அன்பன்

பௌத்தம் தொடர்பாக பதிவுகள் அருகிவரும் இக்காலக்கட்டத்தில் வெளியாகியுள்ள ஓர் அரிய நூல் தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம்.  24.3.2013இல் சென்னையில் தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல் 35 தமிழ்க்கட்டுரைகளையும், 5 ஆங்கிலக் கட்டுரைகளையும் கொண்டுள்ளது. இக்கருத்தரங்கம் பின்வரும் நோக்கங்களை மையப்படுத்தி நடத்தப்பட்டதாக தொகுப்பாளர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது:

"உலகம் முழுவதும் இன்றைக்குப் பௌத்தம் உள்ளது. உலகம் முழுவதும் பௌத்தம் பரவிடச் செய்தவர்கள் தமிழர்களே. தமிழக பௌத்த அறிஞர்கள்தான் பாலி மொழியில் பௌத்த மறைகளுக்குச் சிறந்த உரைகளை வகுத்துள்ளனர். இந்த உண்மைகளைத் தமிழர்களும் உணரவில்லை. தமிழரல்லாதாரும் பெருமளவில் அறியவில்லை. இதை நீக்கியாக வேண்டும். இலங்கை, பர்மா (மியான்மர்), திபெத், தாய்வான், சீன நாடுகளில் இன்றைக்கும் தமிழர்கள் எழுதிய பாலி நூல்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டுமே பௌத்தம் தொடர்பான பல சமஸ்க்ருத நூல்கள் அழிக்கப்பட்டன. இவைகளை உலகம் அறியவேண்டும். இக்கருத்தரங்க ஆய்வுக்கட்டுரைகள் உலகத்திற்கே பௌத்தத்தைப் போதித்தவர்கள் தமிழர்களே என்று மெய்ப்பிக்கிறது. எனவே, பௌத்தத்தை மீண்டும் மீட்டெடுக்கவேண்டும். அது தமிழ்ச் சமூக மறுமலர்ச்சிக்குப் பல வகைகளில் வித்திடும்". (ப.III)
 

பௌத்தம் தொடர்பான பல்வேறு தளங்களில் ஒரு சிறப்பான பரந்துபட்ட பார்வையைத் தருகிறது இந்நூல். பௌத்தம் என்ற நிலையில் அனைத்து வகைப் பொருண்மைகளும் இடம்பெற்றுள்ள முறை நூலின் சிறப்பை மேம்படுத்துகிறது. 25 நூற்றாண்டு காலப் பௌத்தத்தை மிகவும் தெளிவாகத் தொகுத்து முன்வைத்துள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. 

பௌத்தம் தொடர்பான பதிவுகள் ஆரம்பித்த காலம் முதல் அண்மையில் இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் வரை அனைத்தும் நுணுகி ஆராயப்பட்டுள்ளன. பௌத்தம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் நபர்களையும், அமைப்புகளையும் பற்றி தந்துள்ள முறையில் பௌத்த வரலாறு பற்றிய கையேடாக அமைந்துள்ளது இந்நூல். அசோகர் காலம் தொடங்கி இன்றைய ஆய்வாளர் மேற்கொண்டுள்ள ஆய்வு வரை மிகவும் துல்லியமாகவும், நிதர்சனமாகவும் தரப்பட்டுள்ள விதம் படிப்பவர் மனதில் பௌத்தம் பற்றிய தேடலுக்கான சிறப்பான விடையாக அமைகின்றது.

பண்பாடு (கட்டுரை எண்.1,2,20,24,29,35,38), கலை (3,17,36), இலக்கியம் (4,8,9,10,13,16,18,21,25,28,37,39), காப்பியம் (5,6,7) சமயம் (11,12,14,30,31,32,40), மொழி (15), தத்துவம் (19, 23), வரலாறு (22,26,27,33,34) என்ற பல்வேறு நிலைகளில் அமைந்துள்ள கட்டுரைகளில் அறிஞர்களின் புலமையையும் தேர்ச்சியையும் முழுமையாகக் காணமுடிகிறது.

நவீன பௌத்த இலக்கிய வரலாறு (பக்கம்.33), அசோகர் காலப் பௌத்தம் (ப.204), அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலை (ப.153), தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் (பக்.1, 184), இரட்டைக் காப்பியங்கள் தொடங்கி (ப.45) இன்று வரை பௌத்தம் (ப.253), அயோத்திதாசரின் தமிழ்ப் பௌத்தம் (ப.139) என்று பல்வேறு நிலைகளில் பௌத்தம் தொடர்பான எவ்வித விடுபாடுமின்றி விவாதிக்கப்பட்டுள்ள விதம் இத்துறையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சாதனைகளையும் இனி மேற்கொள்ளப்பட வேண்டிய பொறுப்புகளையும் எடுத்துரைக்கிறது. 

பௌத்தம் தொடர்பான முழுமையான நூல் இல்லை என்றும், பௌத்தத்தில் எழுதுவதற்கு எவரும் இல்லை என்றும் கூறிக்கொள்வோர் இந்நூலை அவசியம் பார்க்க வேண்டும், படிக்கவேண்டும், உணரவேண்டும்.

இவையனைத்திற்கும் முத்தாய்ப்பாக கருத்தரங்கைச் செம்மையாக நடத்தி அதில் படிக்கப்பட்ட கட்டுரைகளைச் செப்பம் செய்து அரிதின் முயன்று நூல் வடிவம் தந்து சிறப்பாகப் பணியை முடித்துள்ள அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர். அண்மைக்காலத்தில் இவ்வாறாக ஒரு நூல் பௌத்தம் தொடர்பாக வெளிவந்துள்ளது பௌத்த அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். 

ஓர் அரிய, பெரிய பணியை மேற்கொள்ளும்போது சிறு குறைகள் இருப்பது தவிர்க்கமுடியாததாகிறது. அந்நிலையில் கட்டுரை எண்.39இன் தொடர்ச்சியே கட்டுரை எண்.40 ஆகும். கட்டுரை எண்.42 (41 அல்ல) கருத்தரங்க நிறைவரங்கம் தொடர்பானது. தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான கட்டுரைத் தொகுப்பான இந்நூலின் முகப்பட்டையிலும், பின் அட்டையிலும் கருத்தரங்கத் தலைப்பான தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் என்பது தொடர்பான கருத்தை உணர்த்தும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த புத்தர் சிலைகள், சிற்பங்கள் அல்லது ஓவியங்களை வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 

நிறைவாக, நிறைகளை நோக்கும்போது குறைகள் மிகக் குறைவே என்பதை மனதில் கொள்வோம். பன்முகப் பார்வையில் பல நூற்றாண்டு காலப் பௌத்தத்தின் பெருமையை உணர்த்தும் இந்நூலைப் படிப்போம். பாதுகாப்போம்.

நூல் :                               தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம்
தொகுப்பாசிரியர்கள்:   முனைவர் பிக்கு போதிபாலா,
                                         முனைவர் க.ஜெயபாலன், 
                                          உபாசகர் இ.அன்பன்
பதிப்பகம் :                       காவ்யா,  16, இரண்டாம் குறுக்குத்தெரு, 
                                          டிரஸ்ட்புரம்,  கோடம்பாக்கம், சென்னை 600 024                
தொலைபேசி :               044-23726882, 9840480232
பக்கங்கள் :                     VIII+381 = 389
விலை :                           ரூ.350


-----------------------------------------------------------------------------------------------------------------------------------
இக்கருத்தரங்கில் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012) என்ற தலைப்பில் எனது கட்டுரை (கட்டுரை எண்.17) அளிக்கப்பட்டது. 2012வரை திருவாரூர் (6 புத்தர் சிலைகள்), தஞ்சாவூர் (3), திருச்சி (2), பெரம்பலூர் (1) மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டிலும் (12), இராமநாதபுரம் (1) மற்றும் கடலூர் (1) பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்ட 14 புத்தர் சிலைகளைப் பற்றி அக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன.  
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

14.05.2014 அன்று புத்த பூர்ணிமா
-----------------------------------------------------------------------------------------------------------------------------------   

பௌத்தம் தொடர்பாக முன்னர் படித்த நூல்கள்
பௌத்த சமயக் கலை வரலாறு : முனைவர் கு.சேதுராமன்

3.6.2014இல் மேம்படுத்தப்பட்டது.